கோவையில் பார்த்த எம்.ஜி.ஆர். படங்கள்!

  • நடிகர் சத்யராஜ்

வெரைட்டி ஹால் தியேட்டரின் உரிமையாளர் சாமிக்கண்ணு வின்சென்ட், என் அப்புச்சி (தாய்வழி தாத்தா) நடராஜ காலிங்கராயரின் நண்பர்தான். என் அப்புச்சி 1920-ல் லண்டன் சென்று படித்தவர்.

வெரைட்டி ஹால் எனக்குத் தெரிய டிலைட் தியேட்டர் என்ற பெயரில்தான் இயங்குகிறது. எனது 10 வயது முதல் அந்த தியேட்டருக்கு சென்று வருகிறேன். நான் அங்கு முதலில் பார்த்தது, ‘பெரிய இடத்துப் பெண்’ படம்தான் என்று நினைக்கிறேன்.

ஒரு பொங்கல் பண்டிகையின்போது வாத்தியாரின் (எம்.ஜி.ஆர்.) ‘மாட்டுக்கார வேலன்’ படம் வந்தது. அந்தப் படம் ‘ஜிகிரி தோஸ்த்’ என்ற இந்தி படத்தின் ‘ரீமேக்’ ஆகும். ஜிதேந்திரா, மும்தாஜ் ஆகியோர் நடித்திருந்த படம் அது. வெரைட்டி ஹால் தியேட்டரில் அவ்வப்போது இந்தி படங்களும் திரையிடப்படுவது உண்டு.

இந்நிலையில் ‘மாட்டுக்கார வேலன்’ படம் திரையிடுவதற்கு 2 வாரங்களுக்கு முன்பு ‘ஜிகிரி தோஸ்த்’ படத்தை வெளியிட்டனர். அப்போதே நாங்கள் குஷியானோம்.

“டேய்… இந்தப் படத்தைப் பார்த்துத்தான் ‘மாட்டுக்கார வேலன்’ படத்தை எடுத்திருக்காங்க… இதைப் பார்த்தே ஆகவேண்டும்…” என்று எண்ணி நாங்கள் அனைவருமே அந்த தியேட்டருக்குப் படையெடுத்தோம். படத்துக்கு மிகப்பெரிய கூட்டம் இருந்தது.

அந்தப் படத்தில் நடித்த ஜிதேந்திராவை மக்கள் எம்.ஜி.ஆராகவே பார்த்து ரசித்தனர். விசில் சத்தம் விண்ணைப் பிளந்தது. கைதட்டல் தியேட்டரையே அதிரச் செய்தது. ஜிதேந்திரா வந்து அந்த காட்சியைப் பார்த்திருந்தால், ”அடப்பாவிகளா! நான் என்ன பண்ணிட்டேனு, இந்த கோவை மக்கள் இப்படி கொண்டாடுறாங்க?” என்று அசந்து போயிருப்பார்.

இப்படியெல்லாம் அந்த தியேட்டரில் படம் பார்த்த அனுபவம் எனக்கு இருக்கிறது. டிலைட் தியேட்டரில் ‘என்டர் தி டிராகன்’ ஆங்கிலப் படம் வெளியானது. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த டிலைட் தியேட்டர் அருகேயே கராத்தே பயிற்சியை சிலர் சொல்லித்தர தொடங்கினார்கள். நானும் ஒரு 6 மாதம் கராத்தே பயிற்சி எடுக்கச் சென்றேன்.

பயிற்சி முடிந்து வரும்போது, பல நேரங்களில் தியேட்டருக்குள் புகுந்து விடுவேன். கராத்தே வகுப்பை தவறவிட்டாலும், டிலைட் தியேட்டர் போவதை நான் எப்போதுமே தவறவிட்டது கிடையாது.

நான் கல்லூரியில் படிக்கும் காலகட்டத்தில் இந்தி நடிகர் ராஜேஷ் கன்னா மிகப் பிரபலம். கல்லூரியைக் கட் அடித்துவிட்டு, அந்த தியேட்டருக்கு படம் பார்க்கச் செல்வது மிக எளிது. அரசு கலைக் கல்லூரியில்தான் படித்தேன். சைக்கிள் இருந்தா போதும், ஒரு சந்தை கடந்தாலே, தியேட்டருக்கு வந்துவிடலாம். அதெல்லாம் ஒரு காலம்.

நன்றி : தினத்தந்தி 

Comments (0)
Add Comment