மின்யோங்காதி பழங்குடிகள் எனும் இயற்கைக் காவலர்கள்! 

பதினேழு வருடங்களுக்கு முன்பு அருணாசல பிரதேசம் மேற்கு சியாங் மாவட்டம் ரிக்கா கிராம கள ஆய்வுக்கு உள்நாட்டு கடவுச் சீட்டு பெற்று அந்த இயற்கை இறைவனின் பிள்ளைகளான மின்யோங்காதி பழங்குடிகளுடன் பெற்ற வாழ்வியல் அனுபவம்…

அப்பப்பா சொல்ல வார்த்தைகளே இல்லாத பேரனுபவம் என்கிறார் ஆய்வாளர் ரெங்கையா முருகன். அவரது சுவையான பதிவு இதோ…

கழுத்தில் ஒரு முழம் நீளமுள்ள அளவுடைய நீளமான கத்திகளை தொங்க விட்டுத் திரிந்து அலைகின்ற இயற்கை காதலர்களான அகிம்சைவாதிகளை கண்டபோது ஆச்சரியத்தில் மூழ்கினேன்.

எனக்கு இவ்வளவு நிலம் இருக்கிறது. கார் இருக்கிறது. வீடு இருக்கிறது. அங்கங்கே நிலங்கள் வாங்கி போட்டுள்ளேன் என்ற பேராசையில் உழன்று திரியும் இந்த மடப்பயலுக பொருளியல் சார்ந்த உலகிலிருந்து சென்ற எனக்கு காற்றும் நீரும் வானும் மண்ணும் பொதுவிலிருக்குது.

எங்களுக்கு எதற்கு இந்த பாழாய் போன பணம் மற்றும் இத்யாதிகள் என ஒரு பொருட்டாக மதிக்காத உண்மையான மனிதர்களோடு உலவிய அனுபவம் ஆகாகா…

பணம் இல்லாமல் வாழமுடியாதுதான். ஆனால் இவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று உற்றுக் கவனித்த வேளையில் நீ ஒண்ணு எனக்கு பண்ணு.

அதற்கு பதிலாக நான் ஒண்ணு உனக்கு பண்ணுகிறேன். இதுதாங்க அருமையான பழங்குடி கிராமத்தின் அடிப்படை சூத்திரம்.

நான் வீடு கட்டணும் நினைக்கிறேன். கிராம பஞ்சாயத்தில் அறிவிப்பாங்க. அவரவர் வேலைகளை பிரித்துக் கொண்டு மிகப் பெரிய பங்களா வீட்டுக்கு ஒத்த இயற்கையை மீறாத வீட்டை கட்டிக் கொடுக்கின்றனர்.

அதற்கு சன்மானம் அவர்கள் மண்ணில் விளையும் தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் நாட்டுச் சாராயம். பதிலுக்கு அவர்கள் வீடு கட்டும் போது அதே வேளையை நீ செய்து கழிக்க வேண்டியது. போதுமா முடிஞ்சு போச்சா.

சரி நீ முடி வெட்டனும்னா சலூன் கடைக்கு போகனும். அவன் கேட்டதை கொடுத்து முடி வெட்டிட்டு வரணும். இந்த கிராமத்தில் நீ எனக்கு முடி வெட்டு. நான் உனக்கு முடி வெட்டுறேன். பணத்துக்கு எங்கேயாவது வேலை இருக்குதா கெடையாது.

அவர்கள் உடுத்தும் துணி அவர்களாலேயே கையால் நெய்து கொள்வது.
தாங்கள் விளைய வைக்கும் அனைத்து தானியங்களும் தனது உபயோகத்திற்கு போக மீதி உற்பத்தி பொருட்களை பொதுகிட்டங்கியில் (தானிய குதிர்) வைத்துக் கொண்டு பகிர்ந்து கொள்வது.

அவர்கள் மலம் கழித்தால் கூட கக்கூசை கூட கழுவி விடுவது அவர்கள் வளர்க்கும் பன்றிகளால். அவ்வளவு சுத்தமாக வழித்து எடுத்து சுத்தம் செய்து விடுகிறது பன்றிகள்.

பிடித்த பெண்ணை தேர்ந்தெடுத்தல், முக்கியமாக சுதந்திரமான பாலியல் கல்வி மூத்தவர்களால் இளையோர் கூடத்தில் பயிற்றுவித்தல், பொழுதான பாரம்பரிய கதைகளை இளையோருக்கு பயிற்றுவிக்கப்பட்டு கூடி சேர்ந்து நடனம் ஆடி கொண்டாடுகின்ற அந்த பழங்குடி கிராமத்துக் மீண்டும் போகனுமே அவர்களது கள்ளங்கபடமில்லாத புன்னகையை பத்திரமாக நெஞ்சில் இன்னும் காப்பாற்றி வருகிறேனே.

அவர்கள் மலைவாசிகள் என்ன அறிவு இருக்கப் போகிறது என்று இந்த மானங்கெட்ட நகரியம் சார்ந்த மனோநிலை திமிரை அவர்களது மவுன மொழியால் என்னை செருப்பால் அடித்த மாதிரி உணர வைத்தனர். எப்படி என்று கேட்கிறீர்களா?

எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறீர்கள் என என்னை கேட்டனர். அதற்கு நான் தமிழ்நாட்டிலிருந்து சிவகாசி என்ற ஊரைச் சார்ந்தவன் என்று அறிமுகப்படுத்தி கொண்டேன்.

உடனே அந்த பழங்குடி மாணவர் முக்கியமான பொருள்களை மட்டுமே வைத்து பாதுகாக்கப்படும் மண்பாணையிலிருந்து ஒரு தீப்பெட்டியை எடுத்து கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் நடுவே வைத்து இந்த ஊரிலிருந்தா வருகிறீர்களா? என்று கேட்டு என்னை திக்குமுக்காட வைத்து விட்டான்.

அங்குள்ள சீதோஷ்ண குளிர் மைனஸ் டிகிரியில் பற்கள் வரிசை இரண்டுமே டைப்அடிக்க ஆரம்பித்து விடும். கணப்பு அடுப்பைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு அணில் குஞ்சு, காய்ந்த கருவாடு, மக்காச்சோளம் போன்றவற்றை சுடச்சுட கணப்பு அடுப்பில் சுட்டுக் தந்த வேளையில் அந்த சீதோஷ்ண நிலையை தாங்கமுடியாத நிலையில் ஒரு பழங்குடி தாய் என்னை கட்டி அணைத்து மடியில் இயலாபாக படுக்க வைத்தாள்.

அந்த கதகதப்பு எனக்கு தேவையாக இருந்தாலும் ஒரு தாயின் அரவணைப்பு என்று உணர வைத்த அந்த தருணம் வாழ்வில் மிகவும் உன்னதமாக நினைக்கிறேன்.

இந்த இடத்தில் சாதி, மதம், இனம், மொழி எல்லாவற்றையும் அன்பு என்ற அரவணைப்பில் அனைத்தையும் இயல்பாகவே ஒண்ணுமில்லையடா நாம் இந்த பூமியில் வாழ வந்திருக்கும் ஜீவசந்துகளே என்று உணரவைத்து விட்ட அந்த உன்னத பழங்குடித் தாயை விட பெரிய மனிதனை நான் இன்னும் காணவில்லையே.

அந்தப் பழங்குடி தாயின் அரவணைப்பை பத்திரமாக பனிபோல் நினைவுகளில் பாதுகாத்து வருகிறேன்.

நான் கள ஆய்வு முடித்து ரிகாகிராமத்தை விட்டு கிளம்பும் தருணத்தில் முதல் நாள் சிறப்பு ஊதிய தொகையை அந்த மக்களிடம் கொடுத்த போது பணத்தை பொருட்டும் மதிக்கவில்லை.

மாறாக கொடுத்த பணத்தை எண்ணக்கூட இல்லாமல் வெளியே செல்லும் ஒருவரிடம் கொடுத்து சீமைச்சரக்கை வாங்கி வரச்சொல்லி ஊரே கூடி குடித்து நடனமிட்டு கொண்டாடி தீர்த்தோம்.

நிலத்தை உடைமையாக நினைப்பதில்லை. விளைய வைக்கிறார்கள். பங்கிட்டுக் கொள்கிறார்கள். கொண்டாடுகிறார்கள். அதனால் பிச்சைக்காரர்கள் என்ற சோலிக்கே அங்கு இடமில்லை.

ஆச்சரியமாக இருக்கிறதா? நான் உங்களுக்கு ஒரு இருபத்தி நான்கு வயது இருக்குமா என்று கேட்பேன். மிகவும் கூலாக அறுபத்தைந்து வயது கடந்து விட்டேன் என்பார்கள்.

சரி நோய் நொடி ம்கூம். ஊசி, மருந்து என்பது அபூர்வம் அபூர்வம். நெசமா சொல்லுறேன். எல்லாம் நூறு சதவிதம் நான் கண்ட உண்மை அனுபவத்தை பகிர்ந்துக்கிறேன் ஒப்புறானே சத்தியமா.

ஆசையுமில்லே மோசமுமில்லே. உண்மையான கம்யூனிசம் இங்கதாண்டா இருக்கு.

நாம் மார்க்ஸை கரைச்சு குடிச்சாலும் இந்த பழங்குடி மக்களோட ஒருவாரம் தங்கினா போதும்.

மார்க்ஸின் கம்யூனிசம் நமக்கு விளங்கிவிடும். பெரியவர் வ.உ.சி. கனவு கண்ட சுதேசி வாழ்வை அனுபவித்த இந்த சுதேசி பித்தனின் உண்மை வாக்குமூலம்.

2005 ல் கண்ட அனுபவத்துக்கு மட்டுமே இந்த மனச் சாட்சி வாக்குமூலம். அடுத்த 17 வருடங்களில் என்ன மாற்றம் நடந்திருக்கிறதோ?

Comments (0)
Add Comment