ரன் பேபி ரன் – இலக்கை தவறவிட்ட ஓட்டம்!

அடுத்தது என்ன என்ற பதைபதைப்பை உருவாக்கும் த்ரில்லர் படங்களைப் பார்ப்பது அலாதியான சுகம் தரும்; சில நேரங்களில் அதுவே சோகமாகவும் மாறும்.

எப்படிப்பட்ட த்ரில்லர் படத்தைப் பார்த்தோம் என்பதற்கான பதிலைப் பொறுத்து அது மாறும்.

ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி, இஷா தல்வார், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்மிருதி வெங்கட், ஜோ மல்லூரி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ரன் பேபி ரன்’ படமும் கூட த்ரில்லர் வகையறாவில் தான் அமைந்துள்ளது. அது தருவது சுகமா, சுமையா?

பரபர திரைக்கதை!

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் ஒரு பெண் மாடியிலிருந்து கீழே விழுந்து மரணிக்கிறார். அடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த சத்யா (ஆர்ஜே பாலாஜி) தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணைச் (இஷா தல்வார்) சந்தித்து காதல் பரிசு கொடுக்கச் செல்வது காட்டப்படுகிறது.

சத்யாவும் அவருக்கு மனைவியாகப் போகும் பெண்ணும் காரில் சேர்ந்து பயணிக்கின்றனர்.

தயக்கமும் காதலுமாய் பேசிக் கொண்டிருக்கும் சத்யா, திடீரென்று பின் இருக்கையில் ஒரு பெண் மறைந்து அமர்ந்திருப்பதைக் கண்டு பதற்றமாகிறார்.

தான் குடியிருக்கும் அபார்ட்மெண்ட் வாசலில் அந்த பெண்ணை இறக்கிவிட்டு, அங்கிருந்து கிளம்புமாறு சொல்கிறார் சத்யா.

அவரோ, கார்டியன் வரும்வரை உங்கள் வீட்டில் இருக்கிறேன் என்று சத்யாவிடம் கெஞ்சுகிறார்.

அவரை வெளியேற்றுவதிலேயே குறியாக இருக்கும் சத்யா, ஒருகட்டத்தில் அந்தப் பெண் தன் வீட்டில் இருக்கச் சம்மதிக்கிறார். அந்த பெண்ணின் பெயர் தாரா (ஐஸ்வர்யா ராஜேஷ்).

தொடர்ச்சியாக அலுவலக வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் சத்யா, தாரா கிளம்பினாரா இல்லையா என்பதைக் கவனிக்காமல் தூங்கி விடுகிறார்.

அடுத்த நாள் காலையில், பாத்ரூமில் தாரா இறந்து கிடப்பதைப் பார்த்து விக்கித்துப் போகிறார்.

காவல் துறையில் பணியாற்றும் நண்பனை (விவேக் பிரசன்னா) அழைத்து விஷயத்தைச் சொல்கிறார் சத்யா. அவரோ, பிணத்தை எங்காவது கொண்டுபோய் போட்டுவிடு என்கிறார்.

வேறு வழியில்லாமல் தாராவின் பிணத்தை எடுத்துக்கொண்டு காரில் கிளம்புகிறார் சத்யா. திடீரென்று கார் ரிப்பேர் ஆகி நின்றுவிடுகிறது. சாலையில் போலீசாரின் கெடுபிடிகளையும் சந்திக்க நேர்கிறது.

தாராவைக் கொலை செய்தது யார்? என்ன காரணம்? தாராவின் பிணத்தை போலீசார் கைப்பற்றினார்களா? இந்த விவகாரத்தில், சத்யாவை ஏன் கண்காணிக்கின்றனர்?

இந்த அபாயத்தில் இருந்து சத்யா தப்பினாரா? இந்த கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது ‘ரன் பேபி ரன்’.

ரொம்பவும் இறுக்கமாகக் கட்டமைக்கப்பட்ட முன்பாதி பரபரவென்று திரைக்கதை நகர உதவுகிறது. ஒரு அபாரமான புதிர் விடுபடவிருக்கிறது எனும் நம்பிக்கையை விதைக்கிறது.

ஆர்ஜே பாலாஜியின் அமைதி!

‘நானும் ரவுடிதான்’ தொடங்கி ‘எல்கேஜி’, ‘மூக்குத்தி அம்மன்’ போன்ற படங்களில் எல்லாம் மடை திறந்த வெள்ளம் போலப் பேசியே பழக்கப்பட்ட ஆர்ஜே பாலாஜி, இதில் வார்த்தைகளை எண்ணி எண்ணி உச்சரிப்பது வித்தியாசமாக உள்ளது.

கொஞ்சம் சிரித்தாலும் ‘கலகல’ இமேஜ் வந்துவிடும் என்று பயந்து, படம் முழுக்க ‘டாக்டர்’ பட சிவகார்த்திகேயன் போலவே வந்திருக்கிறார்.

அவர் இல்லாத காட்சிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

பாலாஜியின் ஜோடியாக நடித்த இஷா தல்வார், ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருக்குமே பெரிதாகக் காட்சிகள் இல்லை.

ஐஸ்வர்யாவின் இருப்பு அந்த பாத்திரத்தை நாம் மறந்துவிடாமலிருக்க உதவுகிறது. அந்த வாய்ப்பு கூட, கவுரவ வேடத்தில் தலைகாட்டும் ஸ்மிருதி வெங்கட்டுக்கு கிடைக்கவில்லை.

விவேக் பிரசன்னா, மூணார் ரமேஷ், தமிழ், ஜோ மல்லூரி, ஜார்ஜ் மரியான், கேபிஒய் பாலா, விஸ்வாந்த், நாகிநீடு உட்படப் பலர் இதில் வந்து போயிருக்கின்றனர்.

ஆளுக்கு நான்கு காட்சி என்று பாகம் பிரித்து அவர்களை உலவவிட்டிருக்கிறார் இயக்குனர். இவர்கள் போதாதென்று ஹரீஷ் பேரடியும் பக்ஸும் ராதிகாவும் வேறு வந்து போகின்றனர்.

எஸ்.யுவாவின் ஒளிப்பதிவு, மதனின் படத்தொகுப்பு, சாம் சிஎஸ்ஸின் பின்னணி இசை, வீரமணி கணேசனின் கலை வடிவமைப்பு எல்லாமே மிகச்செறிவான ‘த்ரில்லர்’ பார்க்கும் உணர்வை உண்டாக்கியிருக்கின்றன.

சாம் சிஎஸ்ஸின் பங்களிப்பினால் காட்சிகளின் விறுவிறுப்பு கூடியிருக்கிறது.

எல்லாமே சரிதான். ஆனால், தொடக்கத்தில் அமைந்திருக்கும் பில்டப்களுக்கு ஏற்றவாறு பின்பாதி இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

உண்மையைச் சொன்னால், இறுக்கமாக அமைந்த முன்பாதிக்கான பதில்கள் தெளிவாகவும் முழுமையாகவும் பின்பாதியில் கிடைக்கவில்லை.

வலுவற்ற வில்லன்!

த்ரில்லர் கதைகளில் ஏற்கனவே நாம் பார்த்த அல்லது கவனிக்காமல் தவறவிட்ட ஒருவர்தான் வில்லனாக இருப்பார்.

இதிலும் அப்படியே. ஆனால், உலகமே உற்றுக் கவனிப்பது போல ஒரு கண்காணிப்புக்கு ஆட்பட்ட நாயகனைக் கட்டுப்படுத்தும் வில்லன் எப்படிப்பட்டவராக வேண்டும்? எப்பேர்ப்பட்ட மிதமிஞ்சிய அதிகாரம் கொண்டவராக இருக்க வேண்டும்?

அதைத் தெளிவாக வரையறுக்காத காரணத்தால், சத்யாவாக வரும் ஆர்ஜே பாலாஜியைத் துரத்தியது இவர்தானா என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.

அந்த வகையில், திரைக்கதையில் தன் கையில் இருந்த லகானைத் தவறவிட்டிருக்கிறார் இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார்.

தன்னை யாரும் குற்றம் சொல்லிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் நாயகன் ஒரு பிணத்தை மறைக்க முயற்சிக்கிறார். அது ஓகே தான்.

ஆனால், அதனை இவ்வளவு விலாவாரியாக காட்ட வேண்டுமா என்று கேட்கும் அளவுக்கு அக்காட்சிகள் நீள்கின்றன.

இஞ்சி தின்றதுபோல முகத்தை கடுகடுவென பாலாஜி வைத்துக்கொண்டாலும், அவரது பாத்திரத்தை சாமான்ய மனிதராக எண்ண முடியவில்லை.

சாதாரண மனிதனுக்கு அதுதான் இலக்கணமா என்ன?

100 பேரைக் காட்ட வேண்டிய இடத்தில் 10 பேர் இருந்தால் எப்படியிருக்குமோ, அந்த மனநிலைதான் லாஜிக் மீறல்களை மீறி படத்தைக் கொண்டாட முயற்சிப்பதற்குத் தடை போடுகிறது.

ஒரு படைப்பாகத் தான் அடைய வேண்டிய இலக்கைத் தவற விட்டிருக்கிறது.

ஆறுதலான விஷயம் என்னவென்றால், கடந்த சில ஆண்டுகளாக மருத்துவக் கல்வியில் நிகழ்ந்துவரும் ஒரு மோசடியைப் பற்றிப் பேசியிருக்கிறது. இப்படியும் நடக்குமா என்ற பதைபதைப்பை உண்டாக்கியிருக்கிறது.

அதனை மிகத்தெளிவாகக் காட்டி, அதற்கேற்ற குறிப்புகளை திரைக்கதையில் கோடிட்டுக் காட்டியிருந்தால் டைட்டிலுக்கு ஏற்றவாறு ஓட்டமாய் ஓடியிருக்கும் இந்த ‘ரன் பேபி ரன்’!

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment