ஒன்றிய ரயில்வே நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு ரூ.6,080 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளா்களிடம் பேசிய அவா், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ரயில்வேக்கு ரூ.2.4 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், இதில் தெற்கு ரயில்வேக்குள்பட்ட கேரளத்துக்கு ரூ. 2,033 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், கடந்த 2009-2014-ல் சராசரியாக ரூ. 372 கோடியை விட 5.5 மடங்கு அதிகம் என்றும் கூறினார்.
அதேபோல், தமிழ்நாட்டுக்கு ரூ. 6,080 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், இது 2009-2014-இல் ஒதுக்கப்பட்ட ரூ. 879 கோடியை விட 7 மடங்கு அதிகம் எனவும், கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.3,865 கோடியை விட இரு மடங்கு அதிகம் எனவும் ஒன்றிய அமைச்சர் அப்போது தெரிவித்தார்.
ரயில்வே துறை சார்பில் தமிழ்நாட்டில் முக்கியமான இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாகக் கூறிய அஸ்வினி வைஷ்ணவ், அதில் ஒன்றாக, ‘வந்தே மெட்ரோ’ எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது எனவும்,
அதேபோல், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்படவுள்ளது எனவும் கூறினார்.