சென்னை மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 17 வது வார்டு வடபெரும்பாக்கம், செட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி கோபால். இவரது மனைவி கண்ணகி.
இந்த தம்பதியரின் மகன்தான் விஜய். இவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன் – மேரி ஆகியோரின் மகள் ரம்யாவை நிச்சயம் செய்தனர்.
இதன் பிறகு இவர்களது திருமணத்தை அப்பகுதியில் குலதெய்வ கோயிலில் நடத்த முடிவு செய்து திருமணமும் நடைபெற்றது.
பிறகு மணமக்களை வீட்டிற்கு காரில் அனுப்பி வைக்காமல், தங்களது பரம்பரியத்தை மறக்காமல் இருக்கும் வகையில், மணமகனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த தங்களின் இரண்டு மாடுகள் பூட்டப்பட்ட மாட்டு வண்டியில் மணமகன் விஜய், மணமகள் ரம்யாவை ஏற்றிக்கொண்டு தனது வீட்டிற்கு புறப்பட்டார்.
மணமகன் விஜய் மாட்டு வண்டியை ஓட்ட, மணமகள் ரம்யா மணப்பெண் அலங்காரத்தில் ஒய்யாரமாக அமர்ந்து உறவினர்கள், நண்பர்கள் புடை சூழ சென்றார். அப்பொழுது உறவினர்களும், அவர்களது நண்பர்களும் ஆனந்தமாக மகிழ்ச்சி அடைந்து மணமக்கள் மீது மலர்களை தூவி வாழ்த்தியவரே சென்றனர்.