உரிய அனுமதிக்குப் பிறகே பேனா நினைவுச் சின்னம்!

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு ஒப்புதல்

சென்னை மெரினா கடலில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி, ராம்குமார் ஆதித்யன் என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த பசுமைத் தீர்ப்பாய தென்மண்டல அமர்வின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, இந்தத் திட்டம் குறித்து விரிவான அறிக்கையை தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில், தமிழக அரசின் பொதுப்பணித் துறை சார்பில் பசுமைத் தீர்ப்பாயத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘கடந்த 08.08.2018 அன்று மறைந்த முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரினாவில் புதைப்பது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது.

கடந்த 8.11.2021 அன்று, நினைவிடம் அமைப்பதற்காக ரூ.39 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2022-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி முதல் நினைவிடத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

2023 ஜனவரி 31-ம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் பேனா நினைவுச் சின்னம் தொடர்பாக கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தத் திட்டம் அனைத்துவிதமான அனுமதிகளைப் பெற்ற பின்னரே தொடரப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment