புதிய முயற்சி
ஓடிடி தளங்கள் அல்லது இசை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யும்போது அதற்கான தொகையை தவணை முறையில் வழங்குவது திரைத்துறையில் பின்பற்றப்பட்டுவரும் வழக்கம்.
திரைப்பட ஒளிபரப்பு உரிமையை வாங்கும் தொலைக்காட்சி நிறுவனங்களும் இப்போது இந்த முறையை பின்பற்ற ஆரம்பித்துவிட்டன.
இதனால் திரைப்பட, வலைத்தொடர் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்களின் அடுத்தடுத்த படங்கள் வெளிவருவதற்கு நிதிரீதியாக தாமதமாகும் சூழல் ஏற்படுகிறது.
இந்த சிக்கலை தயாரிப்பாளர்கள் எதிர்கொண்டு தொடர்ந்து அவர்கள் தயாரிப்பில் ஈடுபட உதவும் வகையிலும், முறைப்படுத்தப்பட்ட கடன் வசதி போதிய அளவில் திரை உலகில் இல்லை என்பதை கருத்தில்கொண்டும் ProducerBazaar.com, BetterInvest.club என்கிற நிதி நிறுவனத்துடன் கை கோர்த்து ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.
இந்த முயற்சியின் மூலம் ஓடிடி தளம், இசை நிறுவனம் அல்லது தொலைக்காட்சி சேனலுடன் ஒப்பந்தம் செய்துள்ள தயாரிப்பாளருக்கு 7 முதல் 10 நாட்களுக்குள் நிதி வழங்கப்படும்.
இந்த நிதியை பெறுவதற்கு எந்த ஒரு பிணையும் தேவை இல்லை. மேற்கண்டவற்றுடன் தயாரிப்பு நிறுவனம் செய்து கொண்ட ஒப்பந்தம் மட்டுமே போதுமானது.
தற்போது வரை 4 படங்களுக்கு இவ்வாறு நிதி உதவி செய்யப்பட்டுள்ளது. தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பிற மொழி தயாரிப்பாளர்களுக்கும் நிதி வழங்கும் வசதியை அவர்கள் தொடங்கியுள்ளனர்.
BetterInvest.club நிறுவனர் பிரதீப் சோமு, “ஒப்பந்தங்கள் அடிப்படையில் தயாரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் நிதி வழங்குகிறோம்.
திரைப்படத் துறைக்கு நிதியளிக்கப்பட்டு வந்த விதத்தை இது மாற்றி அமைப்பதோடு தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வணிகத்தின் மீது சிறந்த கட்டுப்பாட்டை வைத்திருக்க உதவுகிறது” என்றார்.
ProducerBazaar.com இணை நிறுவனர் ஜி.கே திருநாவுக்கரசு, “திரைப்படங்கள் முடிவடையும் தருவாயில் இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு பணத் தட்டுப்பாடு ஒரு தடையாக இருந்துவருகிறது.
இந்த திட்டம் தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படங்களின் வணிகங்களை திட்டமிடுவதற்கு சுதந்திரத்தை வழங்குகிறது” என்று தெரிவித்தார்.