இந்திய விடுதலைப் போரில் காந்திஜி வருகைக்கு முன் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய “லால் – பால் – பால்” என்ற திரிசூலத் தலைவர்களில் முதன்மையானவர் லாலா லஜபதி ராய்.
மற்ற இருவர் பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால். பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழகத்தின் மகாகவி பாரதிக்கு ஆதர்ஷ புருஷர்.
1865 ஜனவரி 28-ல் பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் துடிகே என்ற கிராமத்தில் பிறந்தவர் லாலா லஜபதி ராய்.
சட்டம் பயின்ற லாலா நாட்டு விடுதலைக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்தார்.
லாஹூரில் (தற்போதைய பாகிஸ்தானில் உள்ளது) இருந்தபடி தனது எழுத்தாலும் பேச்சாலும் ஆங்கில ஆட்சிக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர் லாலா; நாட்டில் சுதேசி இயக்கத்தை வீறுகொண்டு எழச் செய்தவரும் இவரே.
சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஆரிய சமாஜம் அமைப்பிலும் தீவிரமாகப் பங்கேற்ற லாலா, இந்திய அரசியலில் ஹிந்துத்துவ சிந்தனை பரவ காரணமாக இருந்தார்.
1928 அக்டோபர் 30-ம் லாஹூரில் நடந்த ‘சைமன் கமிஷனே திரும்பிப் போ’ போராட்டத்திற்கு தலைமை தாங்கிய லாலாவை, ஆங்கிலேய காவலர்கள் குண்டாந்தடியால் கடுமையாகத் தாக்கினர்.
இந்தத் தாக்குதலில் கடுமையான காயங்களால் பாதிக்கப்பட்டார் லஜபதிராய்.
கடுமையான காயங்களில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த போது அங்கிருந்த மக்களிடம், “பிரிட்டானிய இந்தியாவில் இறந்த கடைசி இந்தியன் நானாகத் தான் இருக்க வேண்டும்” என்று கூறினார்.
1928-ம் ஆண்டு, நவம்பர் 17-ம் நாள் படுத்த படுக்கையிலேயே அவர் மரணித்தார். தடியடித் தாக்குதலின் போது ஏற்பட்ட காயங்களாலேயே அவர் இறந்ததாகக் கூறப்பட்டது.
ஆனால், பிரிட்டிஷ் அரசாங்கம், இதை ஏற்க மறுத்தது. அவர் மாரடைப்பால் இறந்ததாக சான்றிதழும் அளித்தது.
லாலா மீது விழுந்த தடியடியை நேரில் கண்ணுற்ற சிறுவன் பகத்சிங், பின்னாளில் மாபெரும் புரட்சியாளராக மாறியது வரலாறு.
லாலாவைத் தாக்கிய ஆங்கிலேய அதிகாரியை சுட்டுக் கொன்று பழி தீர்த்த பகத்சிங்கின் தியாகமும் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியது.
“என் மீது விழும் ஒவ்வொரு அடியும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் சவப்பெட்டிக்கு அடிக்கப்படும் ஆணிகள்” என்று கர்ஜித்த பஞ்சாப் சிங்கம் மீது இரு பாடல்களை பாடியிருக்கிறார் மகாகவி பாரதி…