நூல் அறிமுகம்:
கனகா பாலன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு பற்றி கவிஞர் அமுதா தமிழ்நாடன் எழுதிய பதிவு.
கனகா பாலனின் சிறுகதைத் தொகுப்பு நம் விரல்பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக நம்மை நம்முடைய பால்யத்திற்குள் அழைத்துச் செல்கிறது.
நாம் பார்க்க தவறிய மனிதர்களை, பார்த்து பழகிய மாந்தர்களை, மறந்து போன கதாபாத்திரங்களை, நம்மைப் பதப்படுத்திய உறவுகளை ஒவ்வொரு கதையிலும் அவர்களின் இயல்பு மாறாமல் அவர்களை அப்படியே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார் கனகா பாலன்.
முதல் கதையிலேயே நிறைமாத கர்ப்பிணியான மருமகள்மீது இரக்கம் காட்டாமல் நடத்துவதும் பின் அரசாங்க நிதியுதவி கிடைத்ததும் இரண்டாவதாகவும் பிறந்த பெண் குழந்தையை கொண்டாடுவதுமான மாமியாரின் உணர்வுகளின் மூலம் மனித எதார்த்தத்தை கரிசல் மண்ணிற்கே உரிய நடையோடு அழகாக கூறியுள்ளார்.
வழக்கொழிந்துபோன வார்த்தை சொல்லாடல்களை இடையிடையே பயன்படுத்தியிருப்பது கதைக்கு பேரழகையும் கதையாசிரியருக்கு பிறந்த மண்ணின் மீது உள்ள காதலையும் காட்டுகிறது.
ஒரு அழகான கிராமத்தை சுற்றி நிலவும் இயற்கையின் அழகை நம்முடைய சிந்தைக்கு மடைமாற்றம் செய்யும்போது,
“சொற்களால் மட்டும்தான் ஒரு கவிதையை வெளிப்படுத்த முடியுமா என்ன? வாழ்தலில் நிரம்பிவழிதலை அவரவர் தனக்குள்ளாக ரசித்துக்கொண்டு தானே இருப்பார்கள்” என கற்பனையால் மட்டும் உணரக்கூடிய ஒரு ரகசியத்தை மென்மையாக பதிவு செய்து நம்மை ஆச்சர்ய படவைக்கிறார்.
தனக்கென்று ஒரு வாழ்வையோ, எதிர்காலத்தையோ நினைத்துப் பார்க்காமல் வாழ்ந்து கொண்டிருக்கும் சாந்தியினிடத்தில் ஏற்பட்ட நல்லதொரு மனமாற்றத்திற்கு,
“எத்தனை காலம்தான் தனிமரம் தன் நிழலோடு மட்டுமே காலத்தை கடத்தும்” என இயற்கையோடு சேர்த்து மனித வாழ்வை ஒப்பிட்டு காட்டி பிரமிக்கவைக்கிறார்.
தொகுப்பை வாசித்த முடித்து நீண்ட நேரம் ஆன பின்பும் செல்வனாக இருந்து செல்வியாக மாறிய தனத்தின் சகோதரனை மருமகளால் ஏமாற்றப்பட்ட ஒன்பது கல் பேசரி அணிந்த செக்கம்பட்டி ஆச்சியை, முப்பது ஆண்டுகள் கழித்து பறைக்குளத்தை தேடி செல்லும் சுதா, சாந்தியை எனக்குள்ளிருந்து வெளியேற்ற முடியவில்லை.
இதுவே நல்ல ஆக்கப்பூர்வமான எழுத்துக்கும் எழுத்தாளருக்கும் கிடைத்திருக்கும் பெரும் வெற்றி.
நூல் தொடர்புக்கு: 9940134314