– கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு
மறைந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதலமைச்சராக பதவி வகித்தார்.
அந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தது.
அவரது வீடுகளில் நடத்திய சோதனையில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடி அளவுக்கு சொத்துகளை குவித்தது தெரியவந்தது. இதுகுறித்த வழக்கு பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை தனி நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனி நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி தீர்ப்பு கூறியது.
இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்பட 4 பேரும் மேல்முறையீடு செய்தனர். அவர்களின் மனு ஏற்கப்பட்டு, சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு உச்சநீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்துவிட்டு, பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பு ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டார்.
இதையடுத்து அவரது பெயர் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்தனர். அவர்கள் அனைவரும் தண்டனை அனுபவித்த பிறகு விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.
இந்த நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, பெங்களூரு முதன்மை சிட்டி சிவில் செசன்சு கோர்ட்டில், பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கோரி ஒரு கடிதம் வழங்கினார். அதே போல் கர்நாடக நீதிமன்றம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் அவர் கடிதம் அனுப்பினார்.
இந்த நிலையில் பெங்களூரு முதன்மை சிட்டி சிவில் செசன்சு கோர்ட்டில் சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தாக்கல் செய்த மனுவில், ”சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சேலைகள் மற்றும் காலணிகளை ஏலம் விடும்படி அரசுக்கு உத்தரவிடுமாறு” கோரி இருந்தார்.
அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ராமச்சந்திர ஹுத்தார் தீர்ப்பளித்துள்ளார்.
அதில், ஜெயலலிதாவின் சேலைகள் உள்பட 29 பொருட்களை ஏலம் விட வேண்டும் என்றும், இந்த பணிகளை மேற்கொள்ள கர்நாடக அரசு ஒரு சிறப்பு வழக்கறிஞர் நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநில கஜானாவில் இருக்கும் ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களின் விவரம்:
11,344 பட்டுப்புடவைகள் உள்ளிட்ட விலை உயர்ந்த சேலைகள், 44 குளிர்சாதன எந்திரங்கள், 33 தொலைபேசிகள், 131 சூட்கேசுகள், 91 கைக்கடிகாரங்கள், 27 சுவர் கடிகாரங்கள், 86 மின்விசிறிகள், 146 அலங்கரிக்கப்பட்ட நாற்காலிகள், 34 டீப்பாய்கள், 31 மேஜைகள், 24 மெத்தைகள், 9 உடை அலங்கார டேபிள்கள், 81 அலங்கார தொங்கும் மின்விளக்குகள், 20 ஷோபா செட்டுகள்.
தங்க சாமி சிலைகள், 750 ஜோடி செருப்புகள், 31 உடை அலங்கார டேபிள் கண்ணாடிகள், 215 மதுபானம் அருந்தும் கண்ணாடி டம்ளர்கள், 3 இரும்பு பெட்டகங்கள், 250 சால்வைகள், 12 குளிர்பதன பெட்டிகள், ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 514 மற்றும் ரூ.32 ஆயிரத்து 688 ரொக்கம், 10 டி.வி.க்கள், 8 வி.சி.ஆர்.கள் (வீடியோ பதிவு செய்யும் கருவிகள்), ஒரு வீடியோ கேமரா, 4 சி.டி. பிளேயர், 2 ஆடியோ பிளேயர்கள், 24 ரேடியோ பெட்டிகள் மற்றும் 1,040 வீடியோ கேசட்டுகள்.
இதுதவிர தங்கம், வைரம், மரகதங்கள், முத்துக்கள், ரத்தின கற்கள், தங்க வளையல்கள், கை செயின்கள், கம்மல்கள், காதுமாட்டிகள், மூக்குத்திகள், வீர வாள்கள், மயில் சிலைகள், விலை உயர்ந்த பன்னீர் சொம்பு, முருக்கு செயின்கள், சந்தன கிண்ணம், தங்க பேனா, தங்க அட்டை, தங்க தட்டு, குங்கும சிமிழ், முதுகு வலிக்கு பயன்படுத்தும் பெல்ட், மோதிரம், தங்க காசு மாலை, தங்க பெல்ட், தங்க சாமி சிலைகள், காமாட்சி விளக்குகள், தங்க கீ செயின், தங்க மாம்பழம், தங்க கைக்கடிகாரம் ஆகிய பொருட்கள் உள்ளன.