தமிழ் சினிமாவின் அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் யார்?

இதிகாசம், சரித்திரம், சமூகம் என அடுத்தடுத்த கட்டங்களை நகர்ந்து செல்லும் தமிழ் சினிமாவில் எப்போதும் ஆண்கள் ஆதிக்கமே தலை தூக்கி நிற்கிறது. அதன் தாயகமான நாடகத்திலும் இத்தகைய போக்கே நீடித்தது.

தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் போன்றோர் வரிசையில் எந்த நடிகையும் இதுவரை இடம் பிடித்தது இல்லை.

எனினும் சரோஜாதேவி, ஜெயலலிதா, ஸ்ரீபிரியா, ஸ்ரீதேவி, ரேவதி, குஷ்பு போன்ற சிலர் தனித்து தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர்.

ரஜினியும், கமலும் உச்சத்தில் இருந்த நேரத்தில் அவர்களுக்கு இணையாக மின்னியவர் குஷ்பு.

தங்களால் அறிமுகப்படுத்தப்படாத குஷ்புவை, கே.பாலசந்தரும், பாரதிராஜாவும், தங்கள் படங்களில் ஒரே சமயத்தில் நடிக்க வைத்த நிகழ்வு ஒன்றே போதும் அவரது புகழ் சொல்ல.

நயன்தாரா

அதன்பிறகு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோயினாக வலம் வந்தவர், நயன்தாரா.

மலையாளத்தில் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தவர், ‘ஐயா’ படம் மூலம் தமிழுக்கு வந்தார்.

ரஜினி ஜோடியாக ‘சந்திரமுகி’யில் நடித்த பின்னர், அவரது மவுசு எகிறியது.

விஜய், அஜித், தனுஷ், சூர்யா என முன்னணி கதாநாயகர்களோடு டூயட் பாடியவர் ‘அறம்’ படம் மூலம் லேடி ‘சூப்பர்ஸ்டார்’ ஆனார். அண்டை மாநிலங்களுக்கும் போனார்.

தென் மாநிலங்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை எனும் கீர்த்தியும் கிடைத்தது.

ஆனாலும், அண்மை காலத்தில் நயன்தாரா நடித்த படங்கள் பெரும் தோல்வியை சந்தித்தன.

‘ஓ-2’ (தமிழ்) காட்பாதர் (தெலுங்கு), கோல்டு (மலையாளம்) மற்றும் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான ‘கனெக்ட்’ படங்கள், நயன்தாராவின் சந்தையை வீழ்ச்சி அடையச் செய்தன.

அவரது கணவர் சந்தோஷ் சிவன் இயக்க, அஜித் நடிக்கும் படத்தில் நயன்தாரா தான் நடிப்பதாக இருந்தது. இப்போது அவர் இல்லை.

அறம் பட இயக்குநர் கோபி நயினார், தனது அடுத்த படமான ‘மனுஷி’யில் நயனை நடிக்க வைக்க இருந்து, இப்போது பின்வாங்கி விட்டார்.

அடுத்தது யார்?

நயன்தாராவுக்கு பிறகு அந்த இடத்தை பிடிக்கப்போவது யார்?

த்ரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா ஆகிய நான்கு பேர், இந்த பட்டியலில் இருந்த நிலையில், சமந்தா, தொடர்ச்சியாக கொடுத்த தோல்வி படங்கள் மற்றும் உடல்நிலை ஆகிய காரணங்களால், அடுத்த இடத்தைத் தொடர இயலவில்லை.

கீர்த்திசுரேஷ், கதையின் நாயகியாக தோன்றிய சாணிக் காகிதம், பெண்குயின், குட்லக் ஆகிய படங்கள் துவண்டு போயின.

ரஜினியுடன் நடித்த அண்ணாத்த படுதோல்வி.

இப்போது அவர் கைவசம் மாமன்னன், ரிவால்வர் ரீட்டா ஆகிய இரு தமிழ் படங்களும், ‘தசரா’ எனும் தெலுங்கு படமும் மட்டுமே உள்ளன.

த்ரிஷா

பொன்னியின் செல்வன் வெற்றியால், த்ரிஷா உற்சாகமாக இருக்கிறார். விஜய், அஜித் ஆகியோர் நடிக்கும் புதிய படங்களில் த்ரிஷா தான் நாயகி.

ராஷ்மிகா மந்தனா

கன்னடத்தில் ‘கிரீக் பார்ட்டி’ எனும் படம் மூலம் சினிமாவில் ‘என்ட்ரி’ கொடுத்த ராஷ்மிகா மந்தனா, குறுகிய காலத்தில் தென்னிந்திய மொழிகளில் பிரபலமாகி விட்டார்.

தெலுங்கில் அவர் நடித்த ‘புஷ்பா’ பெரும் ஹிட். விஜயுடன் நடித்த ‘வாரிசு’ படமும் நல்ல கலெக்ஷன்.

இரண்டுமே பான் இந்தியா படங்கள் என்பதால், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் ராஷ்மிகா உச்சம் செல்வார், இந்த ஆண்டில் நயன்தாரா இடத்தைப் பிடிப்பார் என்பது பலரது கணிப்பு.

– பி.எம்.எம்.

Comments (0)
Add Comment