‘காவோி ரகசியம்’ – தி.ஜானகிராமன்!

நடந்தாய் வாழி காவேரி…!

மறுபடியும் அதே தான் தோன்றுகிறது. நாயன்மாராக, ஆழ்வாராக இருக்க வேண்டும். இன்றேல் புலவனாக இருக்க வேண்டும். மூன்று சக்தியும் இல்லாத மோழையாக இருந்தால் பண்டாரம் அல்லது ஹிப்பியாக இருக்க வேண்டும்.

சம்பளம், வேலை என்று கால்கட்டு, கைகட்டுடன் சுதந்திரத்திற்கு ஆசைப்பட்டால் மீசையை எடுத்துவிட்டுக் கூழ்குடிக்கிற புத்தித் தெளிவு வேண்டும்.

‘காவிரி ரகசியம்’ என்ற நூலைக் கையில் எடுத்துப் புரட்டினோம். எங்களுக்கு வழிகாட்டினது இந்த நூல்தான்.

ஆன்மீக நோக்கில் காவிரியைப் பற்றிய அத்தனை தகவல்களையும் திரட்டி கோபாலய்யர் என்ற ஒரு மாஜி கல்வித்துறை அதிகாரி இந்த நூலை இயற்றி இருக்கிறார்.

குடகிலிருந்து பிடித்து, காவிரியின் வடகரையில் 400 ஊர்களையும், தென்கரையில் 377 ஊா்களையும் குறிப்பிடுகிறது இந்த நூல். காமகோடி ஆச்சாாியாளின் ஆக்ஞையில் தயாாிக்கப்பட்டதல்லவா!

பயணமுடிவில் அதைப் புரட்டும் பொழுது, நாங்கள் ஒன்றையுமே பார்க்கவில்லை போன்ற ஒரு ஏமாற்றம்தான் மிஞ்சி நின்றது.

நாங்களும் பயணம் தொடங்கியபோது, காமகோடி பீடாதிபதியின் ஆசியைப் பெற்றே புறப்பட்டோம். எந்த அளவுக்கு மஹானின் ஆசிக்குத் தகுதியானோம் என்று எங்களையே கேட்டுக் கொண்டோம்.

எங்களை காவேரி பயணம் மேற்கொள்ளத் தூண்டிய வாசகர் வட்ட கிருஷ்ணமூர்த்தி தம்பதிகளின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக வேண்டுமே என்ற கவலையும் மேலிட்டது.

காவோியின் விஸ்வரூபத்தை ஒரு பயணக் கதையில் சுருக்கிக் காட்டும் பெரும் பொறுப்பு உள்ளத்தில் கனத்தது.

எங்கோ நாதஸ்வர இசை தொலைவில் கேட்கிறது. சாயாவனம் கோவிலிலிருந்து வருகிறதோ, என்னவோ. திருமருகல், நடேசன், திருவாடுதுறை ராஜரத்னம், சின்ன பக்கிாி என்று பழைய பெயர்களின் ஞாபகம்.

காவோியைத் தழுவி வளா்ந்த திருவிழாக்கள், கதைகள், நாட்டுப் பாடல்கள் என அத்தனையும் நினைவில் வந்துபோகிறது. தண்ணீா் குழாயிலும்தான் வருகிறது.
ஆனால் ஆற்றில் ஓடும்போது இப்படியா பாட்டாகக் கேட்கும், கோவிலாக உயரும். கவிதையாகச் சிரிக்கும், கூரறிவாக ஊடுருவும்!

திருமூலர் நாள் தொட்டு கணக்கிலடங்காச் சிவயோகிகள் திருப்பாணாழ்வார் நாள் தொட்டு கணக்கிலடங்காத இசை யோகிகள்.

இவர்களுக்கும் முன்னாலிருந்து காவிரி ஓடுகிறது. இன்னும் ஓடுகிறது. எல்லாவற்றையும் பார்க்கவில்லையே என்று ஏன் இந்த ஏக்கம்?

எதையும் முழுவதும் பார்க்க முடியாது. உள்ளங்கை ரேகையையே ஒரு வாழ் நாள் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கலாம் காவிரியின் நீர் சுழி பையை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

ஞானம், கவிதை, கோயில் எல்லாம் அதில் காலம் காலமாக கொப்பளித்து நகர்ந்து கொண்டேதான் இருக்கும்.

பேச்சுப் பிடிக்காமல் உள்ளம் அடங்கிக் கிடந்தது. நேரம் கழித்து வந்த ஊர் உறக்கம் எல்லாம் கனவு.

– 1982-ல் கணையாழி இதழில் தி.ஜானகிராமன் எழுதி வெளிவந்த கட்டுரையின் ஒரு பகுதி…

Comments (0)
Add Comment