என்ன வகைமை என்பது முதல் ட்ரெய்லர் உட்பட எவ்விதத் தகவல்களும் தெரியாமல் ஒரு படத்தைப் பார்ப்பது அலாதியானது.
அப்படிச் சில நேரங்களில் பொக்கிஷங்களை எதிர்கொள்ள நேரும்போது, அந்த காட்சியனுபவம் ரோலர்கோஸ்டர் சில்லிப்பைத் தரும்.
அபிநவ் சுந்தர் நாயக் இயக்கத்தில் வினீத் சீனிவாசன், சூரஜ் வெஞ்சாரமூடு, தன்வி ராம், சுதி கோப்பா, ஆர்ஷா சாந்தினி பைஜு, சுதீஷ் உட்படப் பலர் நடித்துள்ள ‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’ பார்த்தபோது அவ்வனுபவம் கிடைத்தது.
2022 நவம்பர் 11ஆம் தேதி வெளியான இது, கடந்த ஆண்டின் வெற்றிகரமான மலையாளப் படங்களில் ஒன்று. தற்போது டிஸ்னி+ஹாட்ஸ்டார் தளத்தில் காணக் கிடைக்கிறது.
மங்காத்தா சாயல்!
முப்பதைத் தாண்டியும் வெற்றிகரமான வழக்கறிஞராக முடியாத ஏக்கத்தில் தவிப்பவர் முகுந்தன் உன்னி (வினீத் சீனிவாசன்). என்றாவது ஒருநாள் வெற்றிகரமான மனிதராக ஆகிவிட மாட்டோமா என்ற கனவில் இருப்பவர்.
முகுந்தனின் காதலி ஜோதி (தன்வி ராம்). இருவரும் வழக்கறிஞர் கங்காதரனிடம் ஜுனியராக பணியாற்றுகின்றனர்.
எம்எல்ஏ ரேஷ்மா ஜார்ஜ் சம்பந்தப்பட்ட வழக்கில் தகவல் திரட்டச் செல்லும்போது, அவர் கைதாவதில் இருந்து தப்பிக்க குயுக்தியான வழியொன்றைச் சொல்கிறார் முகுந்தன்.
எம்எல்ஏவின் கணவர் ஜார்ஜ் (சுதீஷ்) அதனைக் காது கொடுத்துக் கேட்காமல் தவிர்ப்பதோடு கங்காதரனிடமும் அது பற்றிச் சொல்லிவிடுகிறார்.
இதனால் ஜுனியர் பணியில் கிடைத்துவந்த சம்பளமும் பறி போகிறது. சுமார் ஒரு மாத காலம் தனியாக வாதாடுவதற்கான வழக்குகளைத் தேடுகிறார். அதிலும் தோல்வி.
ஒருநாள் முகுந்தன் வீட்டுக்குள் ஒரு ராஜநாகம் புகுந்துவிடுகிறது. அதைக் கண்டு பயப்படும் அவரது தாயார், ஏணியில் இருந்து கீழே விழுந்துவிடுகிறார்.
மருத்துவமனையில் அவருக்கு அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டுமென்று சொல்லப்படுகிறது; பணத்தைக் கட்ட முடியாமல் தவிக்கிறார் முகுந்தன்.
அப்போது, ஒரு நபர் அங்குள்ள நோயாளிகளுக்குப் பணம் கட்டுவதைப் பார்க்கிறார். அவர், வழக்கறிஞர் வேணுவின் ஆள்; அவரிடம் தன் தாயையும் அந்த பட்டியலில் சேர்க்க வேண்டும் என்கிறார்.
அதையடுத்து, இருசக்கர வாகனம் மோதி முகுந்தனின் தாயார் கால் எலும்புகள் முறிந்ததாகப் பொய்யாக ஒரு வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
ஆனால், முகுந்தன் யார், என்ன வேலை செய்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே விபத்து காப்பீட்டைப் பெறுவதற்கான வழிகளைப் பகிர்கிறார் வேணு (சூரஜ் வெஞ்சாரமூடு).
விபத்தில் அடிபட்டவர்களுக்கு காப்பீடு வாங்கித் தருவதன் மூலமாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வழங்கும் தொகையில் பெரும்பகுதியை வழக்கறிஞரும் மருத்துவமனை நிர்வாகிகள் உள்ளிட்டோரும் பங்கு பிரிக்கும் உத்தியைத் தெரிந்தவுடன், அவ்வேலையில் இறங்குகிறார் முகுந்தன்.
அது ஜோதிக்குப் பிடிக்கவில்லை. அதனால், இருவருக்குள்ளும் பிரிவு நிகழ்கிறது.
மெல்ல மெல்ல வேணுவின் ஆதிக்கத்தை ஓரம்கட்டி அந்த மருத்துவமனை மூலமாகப் பதிவாகும் அனைத்து விபத்து காப்பீடு வழக்குகளும் தன் கைக்கு கிடைக்குமாறு பார்த்துக் கொள்கிறார் முகுந்தன்.
தன்னைத் தவிர வேறு எவரும் அதனைச் சாதித்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்.
இந்த நிலையில், முகுந்தனின் குயுக்தியால் வாய்ப்புகளை இழந்த வேணு மீண்டும் வெற்றிகரமாக இயங்க ஆரம்பிக்கிறார்.
அதை முறியடிக்க, ஒருகட்டத்தில் வேணுவைக் கொலை செய்யவும் தயாராகிறார் முகுந்தன்.
வேணுவை முகுந்தன் கொலை செய்தாரா? ஒரு வெற்றிகரமான சாதனையாளன் ஆகும் முகுந்தனின் கனவு நிறைவேறியதா என்பதைச் சொல்கிறது ‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’.
ஒரு க்ரைம் த்ரில்லர் என்று பார்க்க உட்கார்ந்தால், ‘மங்காத்தா’ சாயலில் முழுக்க முழுக்க எதிர்மறை அம்சங்கள் கொண்ட ஒரு நாயகனை கண் முன்னே நிறுத்துகிறது இப்படம்.
பெரும்பாலான காட்சிகள் நாம் இதுவரை பார்த்த ரகம் தான் என்றாலும், அடுத்தகட்ட காட்சிகள் இப்படித்தான் அமையும் என்பதைப் பொய்யாக்கிய விதத்தில் நம்மை நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறார் இயக்குனர்.
வித்தியாசமான அனுபவம்!
முகுந்தன் பாத்திரத்தை மலையாளத்தின் முன்னணி இளம் நடிகர்கள் யாராவது ஏற்றிருந்தால், வினீத் சீனிவாசனை விடச் சிறப்பாக நடித்திருக்க வாய்ப்புண்டு.
ஆனால், ஏதேனும் ஒரு காட்சியில் அவர்களது ஹீரோயிசம் பக்கம் நம் மனம் சாய்ந்துவிடும்.
அந்த வாய்ப்பினைத் தராமல், ‘இவனைப் போன்ற மோசமான மனிதர்கள் நம் உலகத்திலும் வெற்றிகரமாக நடமாடுகிறார்கள்’ என்ற எண்ணத்தை விஸ்வரூபமெடுக்கச் செய்கிறது வினீத்தின் இருப்பு.
படம் தொடங்கும்போது ஒரு தோல்விகரமான சாதாரண மனிதனாகத் தோன்றுபவர், இறுதிக் காட்சியில் வேறொரு நபராகத் தென்படும்போது வெளிப்படும் கச்சிதமே அவரது திறன் என்னவென்று சொல்லிவிடுகிறது.
தன்வி ராம், ஆர்ஷா இருவருக்குமே அதிக காட்சிகள் இல்லை. இருவரது பாத்திரங்களின் குணாதிசயங்களும் நேரெதிகராக வடிக்கப்பட்டும், இருவருமே நம் கவனத்தைக் கவர்கின்றனர்.
வினீத் சீனிவாசனுக்கே முக்கியத்துவம் என்று தெரிந்தும் இக்கதையில் வேணுவாக சூரஜ் வெஞ்சாரமூடு நடித்திருப்பதே, அவரது தனித்துவத்தைக் காட்டுகிறது. அதேபோன்று சுதி கோப்பாவும் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இவர்கள் தவிர்த்து ஜகதீஷ், மணிகண்டன் பட்டாம்பி, இயக்குனர் ரஞ்சித், ஸ்ரீஜித் ரவி, ரியா சைரா உட்படப் பலர் இதில் நடித்திருக்கின்றனர்.
தொடக்கத்தில் வரும் காட்சிகளின் தன்மைக்கேற்ப ஒரு வீடியோ பதிவு போன்று அமைந்திருக்கிறது விஸ்வஜித்தின் ஒளிப்பதிவு. மெல்ல மெல்ல இருண்மையும் வெளிச்சமும் ஒன்றோடொன்று பாவிய பிரேம்களுக்கு மாறியிருக்கும் விதம் அழகு.
நிதின் ராஜ் அரோல், அபிநவ் சுந்தர் நாயக் இணையின் படத்தொகுப்பு, இறைச்சி வெட்டும் கத்தியைப் போன்று நறுக்கென்று காட்சிகளை வெட்டியிருக்கிறது.
இப்படியொரு படத்திற்கு இசை என்பது இன்னொரு கதாபாத்திரம் போன்றது. அதனை உணர்ந்து பின்னணி இசை தந்திருக்கிறார் சிபி மேத்யூ அலெக்ஸ்.
‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’ கதை, திரைக்கதை, வசனத்தை விமல் கோபாலகிருஷ்ணன் உடன் இணைந்து எழுதியிருக்கிறார் அபிநவ் சுந்தர் நாயக்.
இவர் தமிழில் உறியடி, குரங்கு பொம்மை, வாயை மூடிப் பேசவும் படங்களின் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியவர்.
விபத்து, காப்பீடு, மருத்துவமனை, காவல் நிலையம், காப்பீட்டு நிறுவனங்கள், நீதிமன்றம் சார்ந்தியங்கும் வேறொரு உலகத்தை இதில் விவரித்திருக்கிறார் இயக்குனர்.
வெறுமனே தகவல் குவிப்பாக இல்லாமல், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் மனிதர்களின் பின்னணியைக் கேள்விக்குட்படுத்துவதாக அமைந்த வகையில் தன் முத்திரையைப் பதித்திருக்கிறார். அதேநேரத்தில், ஒரு கமர்ஷியல் படத்திற்குண்டான சுவாரஸ்யங்களுடன் வித்தியாசமான காட்சியனுபவத்தைத் தந்திருக்கிறார்.
வேர் தேடும் வேட்கை!
‘நானெல்லாம் ஒருகாலத்துல பிளாட்பாரத்துல தூங்கி எந்திருச்சிருக்கேன்’, ‘எத்தனை நாள் சாப்பாடு இல்லாம கஷ்டப்பட்டிருக்கேன் தெரியுமா’ என்ற வார்த்தைகளின் வழியே தன்னம்பிக்கைப் பாடம் எடுக்கும் சாதனையாளர்கள் சிலரது பின்னணி வேறுமாதிரியானதாக இருக்கும்.
ஆனாலும், நல்லவர்களாக வாழ்ந்த வெற்றியாளர்களின் வார்த்தைகளை வெறுமனே உதிர்த்துக் கொண்டிருப்பார்கள்.
ஒரு சாதாரண மனிதன் செய்யத் துணியாத பல காரியங்களை ஆற்றியதன் வழியாக புகழேணியில் ஏறியது ரகசியக் கதைகளாகவும் கிசுகிசுக்களாகவும் சமூகத்தில் உலவிக் கொண்டிருக்கும்.
இவ்விரண்டையும் அறிந்தவர்களே, இப்படிப்பட்ட பிரபலங்களின் பேட்டிகளைப் படித்தாலும், பார்த்தாலும் பகபகவென்று சிரித்துவிடுவார்கள்.
அதற்காக, எல்லா வெற்றியாளர்களும் அறத்தைக் கொன்று வலம் வருவதாகச் சொல்வது தவறாகிவிடும்.
அதனை நன்குணர்ந்து முகுந்தன் உன்னி பாத்திரத்தை திரையில் உலவவிட்டிருக்கிறார் இயக்குனர்.
வெளித்தோற்றத்தில் சூது கவ்வும், மங்காத்தா பாணியில் ‘நல்லவன் எப்படி வாழ்வான்’ என்று கேட்பது போன்றிருந்தாலும், அப்படங்களைப் போன்று நாயகர்களைக் கொண்டாடாமல் நம்மைச் சுற்றியிருக்கும் நபர்களின் வெற்றிகள் குறித்து யோசிக்க வைத்த விதத்தில், அவர்களின் வேர் தேடும் வேட்கையை ஊட்டிய வகையில் வித்தியாசப்படுகிறார்.
இயக்குனர் கவுதம் மேனன் பாணியில் ‘வாய்ஸ் ஓவர்’ மூலமாகவே, கதையின் முக்கியத் திருப்பங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
அந்த இடங்கள் எல்லாமே முகுந்தன் எனும் மனிதனைப் பற்றி ரசிகர்கள் கொண்டிருக்கும் அபிப்ராயங்களை உடைப்பதாக இருக்கின்றன; குயுக்திகளைப் பகிர்வதன் மூலமாக சிரிப்பூட்டுவதாகவும் உள்ளன.
இப்படம் பார்க்கும் எவரும் முழு உண்மைகளைச் சொல்லாத சுயசரிதைகளை இனி சீண்டக்கூட மாட்டார்கள்.
அதுவே ‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’ படத்தின் வெற்றி.
-உதய் பாடகலிங்கம்