ஒரு திரைப்படம் பற்றிய பத்திரிகை தகவல்கள், ட்ரெய்லர் போன்றவற்றைக் கண்டபிறகு நமக்குள் ஒரு கதை தோன்றும். அதே படத்தை முழுதாகப் பார்த்தபிறகு, இந்த விஷயத்தை இப்படிப் பண்ணியிருக்கலாமே என்ற எண்ணம் வலுவாகும்.
அப்படிப் படம் பார்த்து இயக்குனர்களாகவும் கதாசிரியர்களாகவும் நடிகர் நடிகைகளாகவும் ஆனவர்கள் எத்தனையோ பேர்.
அதே போன்று ஏதோ ஒரு படத்தைப் பார்த்துவிட்டு ‘இதே மாதிரி ஒரு படம் பண்ணலாமே’ என்று இறங்கினால் என்னவாகும்?
அதற்கான பதிலை விலாவாரியாகத் தருகிறது பாபி சிம்ஹா நடித்த ‘வல்லவனுக்கும் வல்லவன்’.
இரு வல்லவர்கள்!
இந்தப் படத்தின் டைட்டிலை ‘வல்லவனுக்கும் வல்லவன்’ என்று வைத்ததற்குப் பதிலாக ‘இரு வல்லவர்கள்’ என்று வைத்திருக்கலாம்.
ஏனென்றால் இதில் பாபி சிம்ஹாவும் கருணாகரனும் பெரும்பாலான பிரேம்களில் ஒன்றாகவே வருகின்றனர்.
கொடைக்கானல், தேனி என்று தொடங்கி ஒவ்வொரு ஊராக இருவரும் கொள்ளையடிக்க, பணத்தைப் பறி கொடுத்தவர்கள் அவர்களைத் துரத்துகின்றனர்.
ஒருநாள் இருவரும் ஒரு இன்ஸ்பெக்டரிடம் மாட்டிக் கொள்கின்றனர். அவரோ, ஏமாற்றுவதில் பல ஆய்வுகளை மேற்கொண்டவர் போன்றிருக்கிறார்.
மாநில அமைச்சர் ஒருவர் மத்திய கிழக்கு நாடொன்றுக்கு கடத்தும் அமெரிக்க டாலர்களை, இவர்கள் இருவரையும் வைத்து ‘லவட்ட’ திட்டமிடுகிறார்.
ஏமாந்தவர்கள் ஒருபக்கம் துரத்த, இன்ஸ்பெக்டர் இன்னொரு பக்கம் மிரட்ட, அவர்களை மீறி சம்பந்தப்பட்ட அமைச்சரை வைத்தே அந்த அமெரிக்க டாலர்களை இரண்டு பேரும் எப்படிக் கொள்ளையடித்தனர் என்பதுதான் படத்தின் கதை.
இப்படியொரு கதை படத்தில் இருக்கிறது என்பது தெரியாத அளவுக்குப் படமாக்கியிருப்பதுதான் ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படத்தின் மைனஸ்பாய்ண்ட்.
சதுரங்க வேட்டை தாக்கம்!
ஒரு திரைப்படம் ‘ட்ரெண்ட்செட்டர்’ ஆகும்போது, ‘ஆஹா இதே போல ஒரு விஷயம் இருக்கிறது’ என்றோ, ‘இதையே பார்முலாவா வச்சு நாமளும் ஒரு படம் பண்ணலாமே’ என்றோ எண்ணம் தோன்றுவதில் தவறில்லை.
ஹெச்.வினோத்தின் ‘சதுரங்க வேட்டை’ பார்த்ததும் இப்படத்தின் இயக்குனர் விஜய் தேசிங்கும் அப்படித்தான் யோசித்திருக்க வேண்டும்.
மொத்தக் கதையையும் உருவாக்கியபின்னர் அதேபோன்று இருக்கிறதா என்று அவர் சரிபார்க்கத் தவறியதால், நாம் கூண்டில் அடைபட்ட மிருகம்போல மாட்டிக்கொள்கிறோம்.
‘சதுரங்க வேட்டை’ படத்தின் பலமே அதன் இறுதியில் வரும் 20 நிமிடக் காட்சிகள்தான்.
அதை உணராமல், அதில் நாயகன் வெற்றி பெறுவதாகப் படமாக்கியிருந்தால் நன்றாகவா இருக்கும்.
இந்த யோசனையுடன் ஒளிப்பதிவாளர் பத்மேஷும் படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷனும் இதில் பணியாற்றியிருப்பார்கள் போல. அது அவர்களது பங்களிப்பிலும் தெரிகிறது.
இசையமைப்பாளர் ரகு தீக்ஷித்தின் பாடல்கள் ஒரு காதில் புகுந்து மறு காது வழியே வெளியேறுகின்றன.
எப்படியாவது பின்னணி இசையால் தரையில் விழுந்த காட்சிகளைத் தூக்கி நிறுத்த வேண்டுமென்று பாடுபட்டிருக்கிறார் இன்னொரு இசையமைப்பாளர் அஜீஷ். அதற்குத் தக்க பலன் கிடைக்கவில்லை.
தயாரிப்பு வடிவமைப்பாளர் ஆர்.கே.விஜய்முருகன் இந்த படத்தில் ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது பங்களிப்பு அத்தோடு நின்றிருக்கிறது.
‘ஜிகிர்தண்டா’ வெற்றி போதையில் இப்படியொரு படத்தை பாபி சிம்ஹா ஒப்புக்கொண்டிருக்க வேண்டும். தொடக்க காட்சி மட்டுமே அதற்கேற்ற வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
கருணாகரன், பூஜா தேவரியா, ஷிவதா, ஆனந்தராஜ், மூணார் ரமேஷ், அந்தோணி தாசன், ஆர்.கே.விஜய் முருகன் உட்பட சுமார் இரண்டு டஜன் நடிப்புக்கலைஞர்கள் திரையில் வருகின்றனர். இயக்குனர் சொன்னதைச் செய்திருக்கின்றனர்.
அவர்களை மீறி நம்மைக் கவர்வது அமைச்சராக நடித்துள்ள நெப்போலியன் தான். நிச்சயமாக அவர் வரும் காட்சிகள் ரசிகர்களைச் சிரிப்பூட்டும். ஆனால், அதேபோன்று மீதமுள்ள காட்சிகள் அமையவில்லை என்பதே உண்மை.
அஜித் நடித்த ‘சிட்டிசன்’ படத்தைக் கிண்டலடித்து பத்து நிமிட காட்சிகள் வருகின்றன. அவை சிரிப்பூட்டவில்லை என்பதோடு, அப்படத்தையே நினைவூட்டும் விதமாக அமையவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
நோ மேஜிக்!
‘சதுரங்க வேட்டை’ பாணியில் உருவாக்கப்பட்டும், அதே போன்று சமீபகாலத்தில் நடந்த ஏமாற்றுத்தனங்களை, மோசடிகளைக் காட்சிப்படுத்தாமல், புதிய தகவல்களை அள்ளிக் கொட்டாமல் விட்டிருக்கிறது ‘வல்லவனுக்கும் வல்லவன்’.
எழுபதுகள் தொடங்கி தொண்ணூறுகள் வரை லாஜிக் மீறல்கள் பற்றியோ, ரசிகர்கள் திரையரங்கில் எப்படிச் சத்தமிடுவார்கள் என்பது பற்றியோ கவலைப்படாமல் சில நகைச்சுவை திரைப்படங்கள் வெளிவந்தன.
அவற்றில் சில படங்கள் நிஜமாகவே சிரிப்பூட்டுபவை என்பதை யூடியூபில் இருக்கும் அப்படங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அந்த படங்களின் தாக்கமும் இப்படத்தின் இயக்குனரைத் தொற்றியிருக்கிறது.
எண்பதுகளில் ஒரு ‘ஹெய்ஸ்ட்’ படம் வெளியாகியிருந்தால் இப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைத்தோ அல்லது அப்படங்களை எல்லாம் ‘ஸ்பூஃப்’ செய்யலாம் என்று யோசித்தோ இதனைத் தந்திருப்பது தான் இயக்குனர் விஜய் தேசிங்கு செய்த மிகப்பெரிய தவறு.
ஏனென்றால், அவர் வடித்த பல காட்சிகள் உண்மையிலேயே எண்பதுகளில் வெளியான படங்களை அப்படியே பிரதிபலிக்கின்றன. அதனால், காலத்தால் பின்தங்கியவனாகத் தோற்றமளிக்கிறான் இந்த ‘வல்லவனுக்கும் வல்லவன்’.
திரைக்கதை இலக்கின்றித் திரிகிறது என்பதைக் கூட விட்டுவிடலாம். ஆனால் அடிப்படைக் கதையும் கதாபாத்திரங்களும் வலுவாக வடிவமைக்கப்படவில்லை என்பதுதான் வருத்தம். கொஞ்சம் நின்று நிதானித்திருந்தால் இக்குறைகளைச் சரி செய்திருக்கலாம்.
இவற்றையெல்லாம் மீறி, ஒரு விஷயத்தில் மட்டும் நம்பிக்கை தந்திருக்கிறது ‘வல்லவனுக்கும் வல்லவன்’.
ஒரு படம் தயாராகி எத்தனை ஆண்டுகள் முடங்கிக் கிடந்தாலும், காலம் கனிந்தால் அதற்கொரு விடிவுகாலம் பிறக்கும் என்று காட்டியிருக்கிறது.
அந்த வகையில், மூழ்கிக் கிடக்கும் எத்தனையோ முத்துகள் ஒளிவீச, இந்த ‘வல்லவனுக்கும் வல்லவன்’ வழி காட்டட்டும்!
- உதய் பாடகலிங்கம்