இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் அவரைப் பற்றிய சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்:
1897-ம் ஆண்டில் பிறந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், படிப்பில் மிகவும் கெட்டிக்காரராக இருந்தார். பள்ளியிலும் கல்லூரியிலும் சிறந்த மாணவராய் இருந்த நேதாஜி, 1918-ம் ஆண்டில் பி.ஏ. பிலாஸபி படிப்பை முடித்தார்.
1920-ம் ஆண்டு, இங்கிலாந்தில் எழுதிய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று அரசுப் பணியில் சேர்ந்தார்.
இந்தத் தேர்வில் இவர் தேசிய அளவில் 4-வது இடத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
1921-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு, சுதந்திரப் போராட்டத்தில் முழு வீச்சாக ஈடுபட்டார்.
ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவரான எமிலி ஷென்கில் என்பவரை நேதாஜி திருமணம் செய்துகொண்டார்.
‘ஜெய் ஹிந்த்’ என்ற கம்பீர முழக்கத்தை உருவாக்கியவர் நேதாஜி. 1938 மற்றும் 1939 ஆகிய ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1939-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நேதாஜி, அதன்பிறகு அக்கட்சியின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்து வந்தார்.
காந்தியடிகளின் கொள்கைகளோடு முரண்பட்டு நின்றாலும், அவரைப்போல் ஒரு தேச பக்தரைப் பார்க்க முடியாது என்று உறுதியாக கூறிவந்தார்.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 1921-ம் ஆண்டு முதல் 1941-ம் ஆண்டு வரை 11 முறை இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சுதந்திரப் போராட்டத்தில் இந்தியா வெற்றிபெற, காந்தியின் அகிம்சை வழி மட்டுமே கைகொடுக்காது என்று நம்பிய நேதாஜி, போராட்டத்துக்கான மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று முழங்கினார்.
இரண்டாம் உலகப் போரின்போது சோவியத் யூனியன், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு நேதாஜி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்த இந்தியர்களை ஒன்றிணைத்து, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார்.
1941-ம் ஆண்டில் ஆங்கிலேயர் அரசாங்கம் நேதாஜியை கைது செய்து கொல்கத்தாவில் வீட்டுச் சிறையில் வைத்திருந்தது.
வீட்டுச் சிறையில் இருந்து வெளியேறிய நேதாஜி, அங்கிருந்து கார் மூலம் கோமோ நகருக்குச் சென்று, பின்னர் ரயில் மூலம் பெஷாவர் சென்றார்.
அங்கிருந்து காபூலுக்குச் சென்றவர் பின் ஜெர்மனிக்கு சென்று ஹிட்லரைச் சந்தித்தார். தனது சுதந்திரப் போராட்டத்துக்கு அவரிடம் உதவி கோரினார்.
‘நமது எதிரியின் எதிரி நமக்கு நண்பன்’ என்ற கொள்கையைக் கடைபிடித்த நேதாஜி, 2-ம் உலகப் போரின்போது ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகளுடன் இணைந்து செயல்பட்டார்.
அவரது இந்திய தேசிய ராணுவம், ஜப்பானுடன் இணைந்து இந்தியா மீது போர் தொடுத்தது. ‘டெல்லி சலோ’ என்ற முழக்கத்துடன் நேதாஜியின் படை இந்தியாவை நோக்கி முன்னேறியது.
அந்தமானை மீட்ட அந்தப் படை மணிப்பூர் வரை முன்னேறியது. ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கிய நேதாஜி, அவர்களை போரில் திணறடித்தார்.
அந்த நேரத்தில் ஜப்பானிய அரசு போரில் சரண் அடைந்ததால், இந்தியாவை முழுமையாக மீட்கும் நேதாஜியின் கனவு நிறைவேறாமல் போனது.
நன்றி: முகநூல் பதிவு