அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 14
‘காதல் கோட்டை’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு ‘நேசம்’, ‘ராசி’ என்று அடுத்தடுத்து வெளியான படங்கள் அஜித்துக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.
‘லவ்வர் பாய்’ என்ற முத்திரை அவர் மீது குத்தப்பட்டிருந்தது. அந்த இமேஜில் இருந்து அஜித்தை முதன்முதலில் வெளியே கொண்டு வந்த படம் ‘உல்லாசம்’.
நடிகர் அமிதாப் பச்சன் தொடங்கிய ‘ஏ.பி.சி.எல். கார்ப்பரேஷன்’ என்ற தயாரிப்பு நிறுவனம் தமிழில் முதன்முதலாக தயாரித்த படம் ‘உல்லாசம்’.
நிறைய விளம்பரங்களை இயக்கிக் கொண்டிருந்த ஜேடி-ஜெர்ரி தான் இந்த படத்தை இயக்கினர். பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில் அஜித்துடன் விக்ரம் இரண்டாவது ஹீரோவாக நடித்திருந்தார்.
நடிகை ஸ்ரீதேவியின் உறவினர் மகேஷ்வரி அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இப்படி பல புதுப்புது விஷயங்கள் இந்தப் படம் முழுவதும் நிறைந்திருந்தது.
அந்த காலகட்டத்தில் மிகவும் ஸ்டைலிஷாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி அஜித் பற்றிய சில நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
“உல்லாசம் கதை ஃபைனலைஸ் ஆனதும் சாஃப்டான கேரக்டரில் விக்ரம் நடிப்பதை முதலில் முடிவு செய்துவிட்டோம். ஆனால் முரட்டுத்தனமான அந்த குரு கேரக்டருக்கு யாரை போடுவது என்று குழப்பமாகவே இருந்தது.
அது ஒரு முக்கோணக் காதல் கதை என்பதால், அந்த இன்னொரு கேரக்டர் விக்ரமுக்கு இணையான பர்சனாலிட்டியாக இருக்கவும் வேண்டும்.
அந்த நேரத்தில் தான் ‘ஆசை’ பாடல் வெளியீட்டு விழாவில் அஜித்தை பார்த்தோம். குரு கேரக்டருக்கு சரியாக இருப்பார் என்று உள்ளுணர்வு சொல்லியது. உடனே அப்பாயிண்ட்மென்ட் வாங்கி சந்தித்து கதை சொன்னோம்.
அவருக்க ரொம்பவே பிடித்துப்போனது. அதுவரை ரொமாண்டிக் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தவரை கோபக்கார இளைஞனாக மாற்றவேண்டும். அதற்காக ஒரு லுக் டிசைன் செய்தோம்.
ஒரு வாரம் ஷேவ் செய்யப்படாத தாடி, ரவுண்ட் நெக் பணியன், அதற்கு மேல் சட்டை, சட்டையின் ஒரு கை மட்டும் மடக்கிவிட்டு அவருக்காகவே ஒரு லுக்கை டிசைன் பண்ணினோம்.
‘தாடி இல்லாமல் நடிச்சாலும், கோபப்பட்டாலும் நம்பமாட்டாங்க.
அதனால் படம் முழுக்கவே இந்த கெட்டப்பை கண்டினியூ பண்றேன்’ என அஜித்தும் என்ஜாய் பண்ணி நடித்தார்.
ஷூட்டிங் போது ரொம்ப மரியாதையாக பழகுவார். வெற்றிப்பட நாயகன் என்ற நிலையில் இருந்தவர் இன்று மாஸ் ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார்.
ஆனால், அன்றைக்கு அவரிடம் இருந்த அதே மரியாதையையும் பணிவும் இப்பவும் மாறாமல் இருப்பது ஆச்சரியம்.
அவர் பிரியாணியில் ஸ்பெஷலிஸ்ட் என்பது எல்லோருக்கும் தெரியும். அதைவிட அவர் கைப்பக்குவத்தில் சமைக்கிற மீன் குழம்புதான் ரொம்ப ஸ்பெஷல்.
பாடல் காட்சிக்காக 14 நாட்கள் சுவிட்சர்லாந்து போயிருந்தோம். அப்போ தினமும் ஷுட்டிங் முடிஞ்சதும் ஈவினிங் வாக் போவோம்.
வரும்போது மீன் மார்க்கெட் போய் மீன் வாங்கிட்டு வந்து குழம்பு வச்சு தருவார் அஜித்.
நாங்களெல்லாம் காய்கறி நறுக்குறது, பாத்திரங்கள் எடுத்து தருவதுன்னு அடுப்படியில் அவருக்கு அசிஸ்டெண்டா இருந்ததை மறக்க முடியாது” என்று பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி, அஜித்தின் பெருந்தன்மை பற்றி விளக்க ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.
“உல்லாசம் நேரத்தில் அஜித் சக்ஸஸ்ஃபுல்லான யங் ஹீரோ. விக்ரம் அப்ப தான் வளர்ந்து வரும் ஹீரோவா இருந்தார்.
ஆனாலும் “கென்னி (விக்ரம்) என்னோட பெஸ்ட் ஃபிரண்ட். அதனால் ரெண்டு பேருக்குமே சமமான கேரக்டர் இருக்குற மாதிரி பார்த்துக்குங்க” என்று அஜித் எங்களிடம் சொன்னப்ப பிரம்மித்துப் போனோம்.
டபுள் ஹீரோ சப்ஜெக்ட்ல வழக்கமா வர்ற ஈகோ கிளாஷ் நிச்சயம் இருக்காது என்கிற தைரியம் அப்பதான் எங்களுக்கு வந்துச்சு” என்றனர்.
சென்னை அப்பு ஹவுஸில் ஷுட்டிங் நடந்துகொண்டிருந்தபோது படத்தின் தயாரிப்பாளரான அமிதாப் பச்சன் செட்டுக்கு வந்திருக்கிறார்.
அப்போது அமிதாப்பிடம் அஜித் இந்தியில் பேச, அமிதாப்புக்கு பயங்கர சந்தோஷமாம். அவர் கிளம்புவதற்கு முன் ‘வெல்கம் டூ இந்தி சினிமா’ என்று அஜித்திடம் சொல்லிவிட்டுப் போனாராம்.
அஜித்துக்கு அமிதாப் கொடுத்த அழைப்பு இன்னும் அப்படியே தான் இருக்கிறது. அது எப்போது வேண்டுமானாலும் நிறைவேறலாம்..”
(இன்னும் தெறிக்கும்…)