சென்னை புத்தகக் காட்சி: நூல் அறிமுகம்
சப்னாஸின் ‘பிரேம கலகம்’ என்னும் நூல் 13 சிறுகதைகளை உள்ளடக்கிய நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை தரக்கூடிய ஒரு சிறுகதைத் தொகுப்பாகும் என்கிறார் ரிஸ்மி யூசுப்.
இந்த நூலைப் பற்றி பேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதிய பதிவு…
இயன்றவரை அக்கரைப்பற்று வாழ்வியலை கதைகளுக்குள் கொண்டு வந்திருக்கிறார். ஒவ்வொரு கதையுள்ளும் உணவுமுறை, வீடமைப்பு, ஊர் பற்றிய சித்திரிப்புகள், இயற்கைக் காட்சிகள், பிரதேச வழக்கு என மொத்தமான வாழ்வியல் இத்தொகுப்பில் முக்கிய இடம் பெறுகிறது.
இத்தொகுப்பு பேசும் பெரும்பாலான கதைகளும் கதாமாந்தர்களும் சாதாரணமானவர்கள் இல்லை. அபத்தமும் திகிலும் பிறழ்வும் சராசரியில் இருந்து விலகியவையுமாக அமைந்திருப்பதைக் காணலாம்.
அத்தோடு சமகால அரசியல் நிகழ்வுகளையும் கதைப்போக்கோடு இணைத்துச் சென்றிருப்பதைக் காணலாம்.
‘எருக்கிலம் பற்றைக்கு சில எட்டுகள் தள்ளி மடுவத்தில் தலை பூடம்’ என்ற கதையின் ஓரிடத்தில், “அவன் உலகம் சராசரிக்கு கொஞ்சம் மேலே வித்தியாசமாய் இருந்தது” எனக் குறிப்பிட்டு இருப்பார்.
அதுபோல அவர் கதைகளும் கதைகளை நகர்த்தும் விதமும் காட்சி எடுத்துரைப்பும் சராசரிக்கு மேலே வித்தியாசமாய்தான் அமைந்திருக்கின்றன.
ஒவ்வொரு கதையும் பேசும் நுணுக்கங்களும் அழகியலும் இத்தொகுப்பில் ஏராளம். இந்த அனுபவங்களை உங்கள் வாசிப்பனுபவம் உங்களுக்கும் தரலாம்.