திரிபுராவில் திருப்பம்!
‘தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி சேர்வது சாத்தியமா?’
பித்துக்குளித் தனமான கேள்விதான். ஆனால், அப்படி ஒரு கட்டாயத்தை காலம் உருவாக்கினால், சாத்தியம் என்பதை இதற்கு முன் நடந்த நிகழ்வுகள் நிரூபித்துள்ளன.
ரொம்ப பின்னோக்கிச் செல்ல வேண்டாம். தி.மு.க., ம.தி.மு.க. கூட்டணி ஒன்றே போதும்.
தமிழ்நாட்டில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு மாற்றாக பலம் பொருந்திய கட்சி உருவானால், இரு திராவிடக் கட்சிகளும் உடன்பாடு வைத்துக்கொள்ளும் சாத்தியம் உண்டு.
திரிபுராவில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கீரியும், பாம்புமாக சண்டை போட்டுக்கொண்ட இரு தேசிய கட்சிகள் உடன்பாடு வைத்துக்கொள்ளப்போவது குறித்த கட்டுரைக்குத்தான் மேற்சொன்ன முன்னுரை.
இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத கட்சியின் ஆட்சி முதன்முதலாய் அமைந்தது, நமது அண்டை மாநிலமான கேரளாவில் (1957) இரண்டே ஆண்டுகளில் அந்த ஆட்சியைக் கலைத்தார் அப்போதைய பிரதமர் நேரு.
அந்த சமயத்தில் கேரள முதலமைச்சராக இருந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு சொன்ன வாசகம் இது:
“காங்கிரசை வீழ்த்த எந்த தீய சக்தியோடும் கூட்டு சேருவோம்’’.
காலங்கள் உருண்டோடுகின்றன.
பல மாநிலங்களில் காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் கூட்டணி வைக்க வேண்டிய கட்டாயம் உருவாயிற்று. அவர்களை இணைத்த பெருமை பா.ஜ.க.வைத்தான் சேரும்.
இதற்கு பிள்ளையார் சுழி போட்டது, மேற்கு வங்க மாநிலம். (பெரிய கட்சிகளுடனான கூட்டணியில் காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து போட்டியிடுவது இதில் சேர்த்தி இல்லை)
50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசும், சி.பி.எம்.கட்சியும் தான் மேற்குவங்க மாநிலத்தை மாறிமாறி ஆட்சி செய்து வந்தன.
2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான் திரினாமூல் காங்கிரஸ் வென்றது. அப்போது முதலே, காங்கிரசும் சி.பி.எம்.மும் அங்கு கரைய ஆரம்பித்தன. மாறாக பா.ஜ.க. விரிய ஆரம்பித்தது.
மாநிலத்திலும், சட்டசபையிலும் தங்கள் இருப்பைப் பதிவு செய்ய வேண்டியதன் நிர்ப்பந்தம் காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் முதன் முதலாய் காங்கிரசும், சி.பி.எம்.மும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர் கொண்டன.
(அந்தத் தேர்தலில் இரு கட்சிகளும் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை என்பது வேறு விஷயம்)
அதுபோன்ற கூட்டணியை இரு கட்சிகளும் திரிபுரா மாநிலத்தில் உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளன. மே.வங்க மாநிலம் போன்று, திரிபுராவிலும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் தான் ஆட்சி செய்து வந்தனர்.
திரிபுராவில் 25 ஆண்டுகள் தொடர்ச்சியாய் ஆட்சியில் இருந்த சி.பி.எம்., கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வி கண்டது.
மொத்தமுள்ள 60 தொகுதிகளில், 16 தொகுதிகளில் மட்டும் வென்றது. காங்கிரஸ்-பூஜ்யம். பா.ஜ.க. கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்களில் சி.பி.எம். கோட்டைகள் சரிந்தன.
இந்தச் சூழலில் தான் அடுத்த மாதம் நடைபெறப்போகும் சட்டசபைத் தேர்தலில், காங்கிரசும், சி.பி.எம்.மும் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன.
“மதவாத சக்திகளை தோற்கடிக்கவும், நாட்டின் ஜனநாயக மாண்புகளை பாதுகாக்கவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறோம்” என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் அஜய்குமாரும், திரிபுரா மாநில சி.பி.எம். கட்சியின் செயலாளர் ஜிதேந்திர சவுத்ரியும் கூட்டாக அறிவித்துள்ளனர்.
“திரிபுரா தேர்தல் முடிவுகள் மேற்குவங்க முடிவுகளைத்தான் எதிரொலிக்கும்” என சாபமிடுகிறார்கள் உள்ளூர் பா.ஜ.க.வினர்.
காலம் வரும் வரை காத்திருப்போம்.
– பி.எம்.எம்.