ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள்!

இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க வகை செய்யும் ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது.

இந்த ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்க அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை தேர்தல் ஆணையம் கூட்டியது.

இக்கூட்டத்தில் தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அப்போது, ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மாதிரியை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல் ஆணையம் காட்சிப்படுத்தியது.

இந்த இயந்திரத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், இந்த வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்முறை குறித்து கேள்வி எழுப்பியது.

தொலைதூர வாக்காளர்களை அடையாளம் காண்பது முதல் வெவ்வேறு இடங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் நடைமுறை வரை பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.

இந்த வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஜனவரி 31ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வ கருத்துக்களை தெரிவிக்கும்படி தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப குழுவினர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து செயல் விளக்கம் அளிப்பதாக இருந்தது.

ஆனால் எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சனை குறித்து விவாதிக்க கூடுதல் அவகாசம் கோரியதை அடுத்து, ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றி விளக்கம் அளிக்கவில்லை.

Comments (0)
Add Comment