வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?

– முனைவர் குமார் ராஜேந்திரன்
*
மக்கள் திலகம் டாக்டா்.எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாளான இன்று அவரை நினைவு கூறும் விதமாக எம்.ஜி.ஆரின் திரைப்படப் பாடல்கள் குறித்த பதிவு…
எம்.ஜி.ஆரின் திரைப்படப் பாடல்களுக்கு அவருடைய திரைப்பயணத்தில் முக்கியமான பங்குண்டு.

எஸ்.எம்.சுப்பையா நாயுடு, ஜி.ஆர்.ராமநாதன், தட்சிணாமூர்த்தி, டி.ஆர்.பாப்பா, கே.வி.மகாதேவன், விஸ்வநாதன், ராமமூர்த்தி,சங்கர் கணேஷ், குன்னக்குடி வைத்திய நாதன் என்று பலர் எம்.ஜி.ஆர் நடித்த படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் துவங்கி தஞ்சை ராமையா தாஸ், உடுமலை நாராயணகவி, கு.மா.பாலசுப்பிரமணியம், கு.சா.கிருஷ்ணமூர்த்தி, மருதகாசி, கண்ணதாசன், புலமைப்பித்தன், வாலி, ஆலங்குடி சோமு, பூவை செங்குட்டுவன், கவி.கா.மு.ஷெரீப், நா.காமராசன், அ.முத்துலிங்கம், கோவை அய்யாமுத்து என்று எம்.ஜி.ஆர் நடித்த படங்களுக்குப் பாடல்கள் எழுதிய பாடலாசிரியர்களின் பட்டியல் நீள்கிறது.

எம்.ஜி.ஆருக்காகப் படங்களில் பாடியவர்கள் என்று பார்த்தால் எம்.எம்.மாரியப்பா, திருச்சி லோகநாதன், சி.எஸ்.ஜெயராமன், டி.எம்.சௌந்திரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், பாலமுரளி கிருஷ்ணா உள்ளிட்ட பல பாடகர்கள் பாடியிருக்கிறார்கள்.

1936 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘சதி லீலாவதி’ துவங்கி, 1978 ல் வெளிவந்த ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ வரை – எம்.ஜி.ஆருடைய திரைப்படங்களில் இடம் பெற்ற பல பாடல்களிலிருந்து குறிப்பிட்ட சில பாடல் வரிகள் கீழே :

“தூங்காதே தம்பி தூங்காதே –நீயும்
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
நல்ல பொழுதை எல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார் –சிலர்
அல்லும் பகலும் தெருக்கல்லாய் இருந்துவிட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்
விழித்துக் கொண்டார் எல்லாம் பிழைத்துக் கொண்டார் – உன் போல்
குறட்டை விட்டோர் எல்லா கோட்டை விட்டார்
போர்ப்படை தனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்
பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடை தனில் தூங்கியவன் முதல் இழந்தான்- கொண்ட
கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்- இன்னும்
பொறுப்புள்ள மனிதர்கள் தூக்கத்தினால் – பல
பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா”
 – ‘நாடோடி மன்னன்’ -படத்தில்
*
“தமிழன் என்றொரு இனம் உண்டு
தனியே அவற்கொரு குணம் உண்டு
அமிழ்தம் அவனது மொழியாகும்
அன்பே அவனது வழியாகும்”
*
“எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..
சொந்த நாட்டிலே.. நம் நாட்டிலே.
தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்- கல்வி
தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
கருத்தாக பல தொழில் பயிலுவோம் – ஊரில்
கஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம்
ஆளுக்கொரு வீடு கட்டுவோம் அதில்
ஆயகலைகளைச் சீராகப் பயிலுவோம்
வேடிக்கையாகவே நாளினைப் போக்கிட
கேள்வியும் ஞானமும் ஒன்றாகத் திரட்டுவோம்“
– ‘மலைக்கள்ளன்’ –படத்தில்
*
“அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு, நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்?
மாபெரும் வீரர் மானங் காப்போர்
சரித்திரந்தனிலே நிற்கின்றார் “
– ’மன்னாதி மன்னன்’ –திரைப்படத்தில்
*
“சின்னப் பயலே சின்னப்பயலே சேதி கேளடா..-நான்
சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப் பாரடா
மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா
தனியுடமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா
தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா”
– ‘அரசிளங்குமரி’ –படத்தில்
*
“திருடாதே பாப்பா திருடாதே
வறுமை நிலைக்குப் பயந்து விடாதே
திறமையிருக்கு மறந்து விடாதே
திட்டம் போட்டுத் திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது
அதைச் சட்டம் போட்டுத் தடுக்கிற
கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது.
திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம் வளராது- மனம்
கீழும் மேலும் புரளாது
– திருடாதே’- படத்தில்

*
“நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
தவறு என்பது தவறிச்செய்வது
தப்பு என்பது தெரிந்து செய்வது
தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும்
தப்புச் செய்தவன் வருந்தியாகணும்.”
– ’பெற்றால் தான் பிள்ளையா?’- படத்தில்
*
“நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்
எதிர்காலம் வரும் என் கடமை வரும்
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை முடிப்பேன்
பொது நீதியிலே புதுப்பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
இங்கு ஊமைகள் ஏங்கவும்
உணமைகள் தூங்கவும் நானா பார்த்திருப்பேன்
ஒரு கடவுள் உண்டு அவன் கொள்கை உண்டு
அதை எப்போதும் காத்திருப்பேன்”
– ‘எங்க வீட்டுப் பிள்ளை’படத்தில்
*
“தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிற்கும்”
– ‘தர்மம் தலை காக்கும்’ –படத்தில்
*
“உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்
மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா?
தன்னைத் தானும் உணர்ந்து கொண்டு
ஊருக்கு உழைப்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா?
மாபெரும் சபை தனில் நீ நடந்தால்- உனக்கு
மாலைகள் விழ வேண்டும் – ஒரு
மாற்றுக்குறையாத மன்னவன் இவன் என்று
போற்றிப் புகழ வேண்டும்”
– ‘வேட்டைக் காரன்’ படத்தில்
*
“மக்கள் ஒரு தவறு செய்தால்
மாமன்னன் தீர்ப்பளிப்பான்
மன்னவனே தவறு செய்தால்
மாநிலத்தில் யார் பொறுப்பார்?”
– ‘காஞ்சித்தலைவன்’-படத்தில்
*
“நாளொரு மேனி பொழுதொரு நடிப்பு
அவன் பெயர் மனிதனல்ல
உள்ளத்தில் வைத்ததை உதட்டிலும் வைப்பவன்
எவனோ அவனே மனிதன்
ஊரார் வேர்வையில் உடலை வளர்ப்பவன்
உலகத்தில் கோழைகள் தலைவன்”
“ உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன
உடல் மட்டுமே கறுப்பு அவர் உதிரம் என்றும் சிவப்பு”
– ‘ஆசை முகம்’ –படத்தில்
*
“முன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவு வர வேண்டும் என் தோழா
அன்பே உன் தெய்வம்
அறிவே உன் தந்தை
உலகே என் கோவில்”
– ‘தெய்வத் தாய்’ படத்தில்
*
“வாழ்க்கை என்றொரு பயணத்திலே
பலர் வருவார் போவார் பூமியிலே
வானத்தின் நிலவாய் சிலர் இருப்பார்
அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி’
–  ‘தொழிலாளி’ படத்தில்
*
“என்ன தான் நடக்கட்டுமே..இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே..
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கிற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு”
– ‘பணத்தோட்டம்’ படத்தில்
*
நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை
உனக்கும் ஒரு பங்கும் எனக்கு ஒரு பங்கும்
உலகில் நிச்சயம் உண்டு
ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும்
உலகம் செழிப்பதுண்டு
எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால்
துணிவே துணையாய் மாறும்
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் பூமியே புதிய பூமி”
– ‘புதிய பூமி’ –படத்தில்
*
“கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி விவசாயி

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?
ஒழுங்காய்ப் பாடுபடு வயல்காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்”
– ‘விவசாயி’ -படத்தில்
*
“ஏன் என்ற கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை
பகுத்தறிவு பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே
உரிமைகளைப் பெறுவதெல்லாம்
உணர்ச்சிகள் உள்ளதனாலே”
– ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில்
*
“கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன்
யாருக்காகக் கொடுத்தான்? ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்
பலர் வாட வாட சிலர் வாழ வாழ
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை
எது வந்தபோதும் பொதுவென்று வைத்து
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்”
– ‘படகோட்டி’ படத்தில்
*
“வேட்டையாடு விளையாடு
விருப்பம் போல உறவாடு
நன்மை செய்வதே என் கடமையாகும்
நன்றி சொல்வதே என் கண்ணியமாகும்
நட்பை வளர்ப்பதே என் லட்சியமாகும்”
– ‘அரச கட்டளை’ படத்தில்
*
“புதிய வானம் புதிய பூமி
எங்கும் பனி மழை பொழிகிறது
நான் வருகையிலே
என்னை வரவேற்கப் பூமழை பொழிகிறது
பிள்ளைக்கூட்டங்களைப் பார்க்கையிலே
பிஞ்சு மொழிகளைக் கேட்கையிலே
நல்லவரெல்லாம் நலம் பெறுவார்
என்ற நம்பிக்கை பிறக்கிறது
இவர் வரவேண்டும் புகழ் பெற வேண்டும்
என்று ஆசை துடிக்கிறது”
*
“தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னைக் காக்கின்றாள்”
– ‘அடிமைப் பெண்’-படத்தில்
*
“கண்ணை நம்பாதே..உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்..
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எதுவானபோதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும் -என்றும்
அதுவே என் மூலதனம் ஆகும்”
– ‘நினைத்ததை முடிப்பவன்’-படத்தில்
*
“ஒன்றே குலம் என்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்
அன்னை இதயமாக, அன்பு வடிவமாக
வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம்
இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார் – அவர்
என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம், சொன்ன வழி போகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்
– பல்லாண்டு வாழ்க – படத்தில்
*
“நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற…
உழைக்கும் தோழர்களே ஒன்று சேருங்கள்
உலகம் நமதென்று சிந்து பாடுங்கள்..
காற்றும் நீரும் வானும் நெருப்பும்
பொதுவில் கிடக்குது
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிஞ்சு கிடக்குது
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதன் இதயமே
உலகில் பிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே”
– ‘இதயக்கனி’ படத்தில்
*
“அன்புக்கு நான் அடிமை
தமிழ்ப் பண்புக்கு நான் அடிமை
நல்ல கொள்கைக்கு நான் அடிமை
தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை”
இன்று போல் என்றும் வாழ்க – படத்தில்
“நீதியின் தீபங்கள் ஏந்திய கைகளில் இலட்சியப் பயணமிது- இதில்
சத்திய சோதனை எத்தனை நேரினும் தாங்கிடும் இதயமிது “
– மீனவ நண்பன் – படத்தில்
*
“இந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார்
இடையினிலே ஏழையைப் போல் கந்தை அணிந்தார்
ஏணியாகத் தாழ்ந்தவர்க்கு உதவி புரிந்தார்
இன்று ஏசுவோர்கள் அவரால் தான் பதவி அடைந்தார்
நாட்டுக்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார்
பொதுநலத்தில் தானே நாள் முழுக்க கண்ணாய் இருந்தார்
ஏற்றுக் கொண்ட பதவிக்கெல்லாம் பெருமையைத் தந்தார்
தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத் தான் வறுமையைத் தந்தார்”
– ‘நேற்று இன்று நாளை’ –படத்தில்
#
“நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
தவறான பேர்க்கு நேர்வழி காட்ட வேண்டும்
ஊனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர்
தென்னாட்டு காந்தி அன்னாளில் சொன்னார்”
– ‘நம் நாடு’-படத்தில்
*
“நாணல் போல் வளைவது தான் சட்டமாகுமா?
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேண்டுமா?
தருமத்தாயின் பிள்ளைகள் தாயின் கண்ணை மறைப்பதா?
தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ?
அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதா?
நான் ஒரு கை பார்க்கிறேன், நேரம் வரும் கேட்கிறேன்
பூனையல்ல புலி தான் என்று போகப் போகக் காட்டுகிறேன்”
– ‘ரிக்ஷாக்காரன்’ –படத்தில்
*
“நான் ஏன் பிறந்தேன், நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும்வரையில் நினைத்திடு என் தோழா
நினைத்துச் செயல்படு என் தோழா
நாடென்ன செய்தது நமக்கு எனக் கேள்விகள் கேட்பது எதற்கு?
நீ என்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு”
– ‘நான் ஏன் பிறந்தேன்” –படத்தில்
*
“கண்ணை மறைக்கின்ற காலம் வரும்போது தருமம் வெளியேறலாம்
தருமம் அரசாளும் தருணம் வரும்போது தவறு வெளியேறலாம்
நல்லவன் லட்சியம் வெல்வது நிச்சயம்
அண்ணா அன்று சொன்னார், என்றும் அது தான் சத்தியம்”
– ’உரிமைக்குரல்’ – படத்தில்
*
“நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
வாருங்கள் தோழர்களே, ஒன்றாய் வாருங்கள் தோழர்களே
கடமையைச் செய்வோம் கலங்காமலே
உரிமையைக் கேட்போம் தயங்காமலே “
– ‘உழைக்கும் கரங்கள்’-படத்தில்
*
“ஒற்றுமையால் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்த வேண்டும் –என்றும்
புரட்சியால் சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமைச் சமுதாயம் மலர்ந்திட வேண்டும்”
– ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’- படத்தில்

Comments (0)
Add Comment