ஆன்லைன் ரம்மியால் தொடர்ந்து பறிபோகும் உயிர்கள்!

தூத்துக்குடி அருகே தட்டப்பாறை ராமநாதபுரம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ஆவுடையப்பன். இவரது மகன் பாலன் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

சரிவர வேலைக்கு செல்லாத இவர், ஆன்லைன் ரம்மி  விளையாடும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில்  நேற்று காலை அவர், தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தட்டப்பாறை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதோடு பாலனின் செல்போனை ஆய்வு செய்தனர்.

அதில், பாலன் தனது நண்பர் ஒருவருக்கு அதிகாலை 5.30 மணிக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பி உள்ளார்.

அதனை காவல்துறையினர் ஆய்வு செய்ததில், ஏற்கனவே ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.3 லட்சம் வரையில் தோற்றுப் போயுள்ளதும் பாலனிடம் நேற்று முன்தினம் அவரது தந்தை ரூ.50 ஆயிரம் கொடுத்து அவரது வங்கி கணக்கில் செலுத்தக் கூறி உள்ளதும்,

ஆனால் பாலன், அந்த பணத்தை தன்னுடைய வங்கி கணக்கில் செலுத்தி நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை 4 மணி வரை ஆன்லைன் ரம்மி விளையாடி அந்த பணத்தையும் இழந்துள்ளதும், இதனால் மனமுடைந்த பாலன் தற்கொலை செய்து கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

ஆன்லைன் ரம்மியில் ரூ.15 லட்சம் தோற்றதால் நெல்லை மாவட்டம் பணகுடி ரகுநாதபுரத்தைச் சேர்ந்த வாலிபர் சிவன்ராஜ் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்ட நிலையில் நேற்று தூத்துக்குடி அருகே இன்ஜீனியர் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)
Add Comment