எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள படங்கள்!

கடந்த ஆண்டு ‘பாலிவுட்’ சினிமா உலகுக்கு போதாத காலமாகவும், தென் இந்திய சினிமா உலகுக்கு பொற்காலமாகவும் இருந்தது.

கொரோனோ பிடியில் இருந்து விடுபட்டு பிரமாண்டமாய் தயாரான பல இந்திப்படங்கள் பெரும் தோல்வி அடைந்தன.

ஆனால் தென் இந்திய படங்கள் பல, ரசிகர்களின் வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் புதிய சாதனை நிகழ்த்தின.

தமிழில் விக்ரம், பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் புதிய வரலாறு படைத்தன.

இந்த ஆண்டு அரை டஜன் தமிழ் திரைப்படங்கள் ரசிகர்களிடம் பெருத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.

ஜல்லிக்கட்டு காளைகளாக பொங்கலுக்கு வெளியாகும் ‘வாரிசு’  மற்றும் ‘துணிவு’ ஆகிய படங்கள் குறித்து திகட்ட திகட்ட படித்து விட்டோம்.

எஞ்சிய படங்களை இங்கே பார்க்கலாம்.

ஜெயிலர்:

நாடோடி மன்னன் உருவானபோது ‘’இந்தப்படம் ஓடினால் நான் மன்னன். ஓடாவிட்டால் நாடோடி’’ என சொல்லி இருந்தார் புரட்சித்தலைவர்.

மன்னன் ஆனார். மன்னனாகவே நீடித்தார்.

ரஜினிகாந்துக்கும் ‘ஜெயிலர்’ படம் அப்படி ஒரு நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

இதற்கு முன்பு சன் பிக்சர்ஸ் தயாரித்த அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார், ரஜினி. படம் –படு தோல்வி.

அதனை ஈடு செய்ய சன் பிக்சர்சுக்கு ரஜினி மீண்டும் கால்ஷீட் அளித்து நடிக்கும் படம்- ஜெயிலர். கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக விஜய்யும், அஜித்தும் ரஜினியை நெருங்கி வந்து கொண்டிருக்கிறார்கள். சம்பள விஷயத்தில் ரஜினியை, விஜய் மிஞ்சி விட்டார் என்ற பேச்சும் உண்டு.

ஜெயிலர், மிகப்பெரிய வெற்றி பெற்றால் மட்டுமே ரஜினி, தனது ‘சூப்பர்ஸ்டார்’ பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதே யதார்த்தம்.

தமிழ் புத்தாண்டில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஜெயிலரின் ஒவ்வொரு நகர்வையும், கோடம்பாக்கம் உன்னிப்போடு கவனிக்கிறது.

பொன்னியின் செல்வன் -2

‘பான் இந்தியா’ படமாக திரையாக்கம் செய்யப்பட்டு, உலக தமிழர்கள் இதய சிம்மாசனத்தில் குடியமர்ந்த பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் நேரடியாக தமிழில் உருவாக்கப்பட்ட எந்த படமும் ‘பொன்னியின் செல்வன்’ அளவுக்கு வசூல் குவித்ததில்லை.

கல்கியின் நாவலுக்கு அளித்த அதே மரியாதையை , திரைப்படத்துக்கும் மக்கள் வழங்கினர்.

பெரிதாக எந்தவித போட்டியும் இல்லாமல் தனியாக வருகிறான், பொன்னியின்செல்வன்.-2.

இந்தியன் -2

கமலுக்கு மேக்கப்பில் திருப்தி இல்லாமை- விரிந்து கொண்டே சென்ற பட்ஜெட்டால் தயாரிப்பாளர் காட்டிய தயக்கம்- ஸ்டுடியோவில் நிகழ்ந்த விபத்து மற்றும் கொரோனா ஆகிய நான்குமுனை தாக்குதலால் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தயாரிப்பு நிலையிலேயே இருக்கும் படம் இந்தியன் -2.

ராம்சரணை வைத்து படம் இயக்க ஷங்கர் ,தெலுங்குதேசம் போனதாலும், கமல் பிக்பாஸ் ,அரசியல் என இரட்டை குதிரைகளை எடுத்துக்கொண்டு வேறுசவாரி செய்ததாலும், ,இந்தியன் தாத்தா , கிழவன் போல் மெதுவாகவே நடக்க வேண்டியதாயிற்று.

இப்போது முழுமூச்சாக படப்பிடிப்பு நடக்கிறது.

கடந்த தீபாவளிக்கோ அல்லது அதற்கு முந்தைய தீபாவளிக்கோ வந்திருக்க வேண்டிய, இந்தியன் வரும் ஐப்பசியில், ரசிகர்கள் பசி தீர்ப்பார் என எதிர்பார்க்கலாம்.

விக்ரம்- சூர்யா

12 வேடங்களில் சூரியா நடிக்கும் பெயரிடப்படாத படம், பா.ரஞ்சித்- விக்ரம் கூட்டணியில் உருவாகும் தங்கலான், விஜய்சேதுபதியின் விடுதலை ஆகிய படங்களும் இந்த ஆண்டு எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள முக்கிய படங்களாகும்.

– பி.எம்.எம்.

Comments (0)
Add Comment