‘விஸ்வாசம்’ படத்திற்குப் பிறகு, தனது படங்களில் சமூகத்திற்குத் தேவையான கருத்துகள் இருக்க வேண்டுமென்பதில் ரொம்பவே மெனக்கெடுகிறார் அஜித்.
‘நேர்கொண்ட பார்வை’யில் பெண்களின் தனிப்பட்ட விருப்பங்களுக்கும், ‘வலிமை’யில் உடனடி முன்னேற்றத்தை விரும்பும் இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் நெருக்கடிகளுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது.
அந்த இரண்டு படங்களை தந்த இயக்குனர் ஹெச்.வினோத் உடன் மூன்றாவது முறையாக இணைந்து ‘துணிவு’ தந்திருக்கிறார் அஜித்.
இதுவும் கருத்து சொல்லும் படமாக இருக்கிறதா அல்லது ‘மங்காத்தா’ போல அஜித் ரசிகர்களை வெறுமனே மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பொழுதுபோக்கு படைப்பாக அமைந்திருக்கிறதா?
ஒரு வங்கி.. பல கொள்ளையர்கள்!
‘துணிவு’ ட்ரெய்லரே அது ஒரு வங்கியில் நடக்கும் கொள்ளை பற்றியது என்பதைச் சொன்னது. படமும் அப்படித்தான் ஆரம்பிக்கிறது.
ஆனால், அப்படியே முடியவில்லை என்பதுதான் வழக்கமான கொள்ளை படங்களில் இருந்து இதனை வேறுபடுத்துகிறது.
சென்னையிலுள்ள ‘யுவர்ஸ் பேங்க்’ எனும் வங்கியில் கொள்ளையர்கள் புகுகின்றனர்.
அந்த கும்பல் கொள்ளையடிக்க முயலும்போது, ஒரு நபர் அவர்களைத் தாக்குகிறார்.
தன்னை ‘டார்க் டெவில்’ கும்பலின் தலைவன் (அஜித்குமார்) என்று அறிமுகப்படுத்துகிறார். தானும் வங்கியைக் கொள்ளையடிக்க வந்ததாகக் கூறுகிறார்.
போலீசாருக்கும் அவருக்குமான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே, அந்த கும்பலை அழைத்து வந்தது போலீஸ் அதிகாரியான ராமச்சந்திரன் (அஜய்) என்று தெரிய வருகிறது.
அவர் பிடிபட்டதும், அந்த வங்கிக் கொள்ளையை நிகழ்த்தும் சதி யாருடையது என்று தெரிய வருகிறது. அதன் தொடர்ச்சியாக, வங்கியின் தலைவர் இங்கு வர வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார் அந்த மர்ம நபர்.
அதேநேரத்தில், ஏற்கனவே உள்ள இரண்டு கும்பலைத் தாண்டி மூன்றாவதாக ஒரு கும்பல் வங்கிக்குள் வெடிகுண்டை கொண்டு வந்தது தெரிய வருகிறது.
அது எப்படி வங்கிக்குள் வந்தது? அந்த மர்ம நபர் வங்கியில் கொள்ளையடிக்க முயல்வது ஏன்? வங்கியின் தலைவருக்கும் அந்த நபருக்கும் என்ன சம்பந்தம்? இதுவே ‘துணிவு’ படத்தின் பின்பாதி கதை.
ஸ்பாய்லர் என்றபோதும் இதனைச் சொல்லியே தீர வேண்டும். வங்கியில் கொள்ளை என்று படம் தொடங்கினாலும், வங்கி மூலமாக கொள்ளை என்ற இடம் நோக்கி நகர்வதே ‘துணிவு’ படத்தின் சிறப்பு.
அதகளப்படுத்தும் அஜித்!
திரைக்கதையின் முதல் பாதி அஜித் ரசிகர்களுக்கு, இரண்டாம் பாதி தான் சொல்ல வந்த கருத்துகளுக்கு என்று பாகம் பிரித்திருக்கிறார் இயக்குனர் ஹெச்.வினோத். அது இலக்கை அடைந்திருக்கிறது.
கொள்ளையடிக்க வந்த இடத்தில் தெனாவெட்டாகப் பேசுவது, டான்ஸ் ஆடுவது, மூர்க்கமாய் மோதுவது என்று தனது ரசிகர்களை குதூகலிக்க வைத்திருக்கிறார் அஜித்.
இரண்டாம் பாதியில் இயக்குனர் சொல்ல வந்த கருத்து மக்களை எட்ட, அந்த முதல் பாதியே உதவியிருக்கிறது.
போஸ்டரில் மஞ்சு வாரியார் படம் இடம்பெற்ற அளவுக்கு, திரைக்கதையில் அவருக்கு இடம் இல்லை. ஆனாலும், கிடைத்த இடைவெளியில் அவர் ‘கோல்’ அடித்திருக்கிறார்.
சமுத்திரக்கனி, அஜய்குமார், பக்ஸ், மோகனசுந்தரம், பால சரவணன், வீரா, ஜி.எம்.சுந்தர் ஆகியோர் அஜித்துக்கு அடுத்தபடியாகத் திரையில் வருகின்றனர். இடைவேளைக்குப் பிறகு அந்த இடத்தை தர்ஷன் பிடித்துக் கொள்கிறார்.
அமீர், பவ்னி, சிபி ஆகியோருக்கு பிளாஷ்பேக்கில் ஒரு பாடலும் ஒரு காட்சியும் மட்டுமே கிடைத்திருக்கிறது. வினோத் சாகர், நளினிகாந்துக்கும் அத்தகைய வாய்ப்பே கிட்டியிருக்கிறது.
முழுக்க ஆக்ஷனாக நிறைந்த ஒரு திரைக்கதையில் நகைச்சுவை வேண்டுமே என்ற நோக்கத்தைப் பூர்த்தி செய்திருக்கிறது மோகனசுந்தரம் – பக்ஸ் இணை.
இதில் பால சரவணனுக்கும் சிறியளவில் பங்கு உள்ளது. கிளைமேக்ஸில் அந்த இடத்தை மகாநதி சங்கரும் ஜி.எம்.சுந்தரும் எடுத்துக்கொள்கின்றனர்.
நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு, ஒரே இடத்தில் நடக்கும் கதையைப் பிரமாண்டமாகக் காட்டுகிறது. விஜய் வேலுக்குட்டியின் படத்தொகுப்பு அடுத்தடுத்து ஷாட்களை நிரப்பி நம் கண்களை மிரட்சிக்கு ஆளாக்குகிறது.
காட்சிகளிலோ, கதையிலோ தென்படும் லாஜிக் மீறல்களை மூடி மறைக்க, அவரே பெரிதும் உதவியிருக்கிறார்.
துப்பாக்கி குண்டுகளின் சத்தத்தையும் மீறி, காட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது ஜிப்ரானின் பின்னணி இசை.
‘சில்லா’ சில்லா’, ‘கேங்ஸ்டா’ பாடல்கள் ஓகே ரகம் என்றாலும், திரைக்கதையின் பரபரப்புக்கு அவை இடையூறாகவே இருக்கின்றன.
மிலன் குழுவினரின் கலை வடிவமைப்பு படத்துக்குப் பெரிய பலம். ட்ரெய்லரில் செயற்கையாகத் தெரிந்த வங்கி, பரபரவென்று நகரும் காட்சிகளால் மெல்ல மறைந்துபோவது ஆச்சர்யம்.
துப்பாக்கிகள் பொம்மை போன்றிருந்தாலும், ஆக்ஷன் காட்சிகளில் அது தெரியாமல் லாவகமாக மறைத்திருப்பது சுப்ரீம் சுந்தரின் அபாரத் திறமை.
அலைபாயும் திரைக்கதை!
தனியார் வங்கிகளின் பூடகமான செயல்பாடு, பரஸ்பர நிதி மோசடிகள் தொடங்கி ஒட்டுமொத்தமாகப் பணத்தை மக்கள் எப்படி கையாள வேண்டுமென்ற யோசனையை விதைத்திருக்கிறார் இயக்குனர் ஹெச்.வினோத்.
அதற்காக, அஜித் போன்ற உச்ச நட்சத்திரத்தைப் பயன்படுத்தியிருப்பது சபாஷ்.
முதல் பாதியில் திருப்பங்கள் அதிகம்; அதுவே ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு விதை போட்டிருக்கிறது.
இரண்டாம் பாதியில் இரண்டு பிளாஷ்பேக்குகள், வில்லன் கூட்டத்தின் விளக்கம், அதனைத் தொடர்ந்து நிகழும் துரத்தல் என்று திரைக்கதை ஜவ்வாக இழுக்கிறது.
அவற்றில் இருக்கும் பிசிறுகளை அகற்றியிருந்தால், ’ரிப்பீட் ஆடியன்ஸ்’ உருவாக வழி ஏற்பட்டிருக்கும்.
அஜித் கதாபாத்திரம் வில்லனா நாயகனா என்ற கேள்விக்குப் பெரிதாக விளக்கமளிக்காமல், எடுத்துக்கொண்ட விஷயத்திற்கு நேர்மையாக காட்சிகள் அமைத்திருக்கிறார் இயக்குனர். அதற்குப் பலன் கிடைத்திருக்கிறது.
வீரா, பிரேம் பாத்திரங்கள் திடீரென்று காணாமல் போயிருப்பது போன்றவற்றை தவிர்த்திருந்தால் இன்னும் நேர்த்தியான ஒரு திரை அனுபவத்தை பெற்றிருக்கலாம்.
அதேபோல, தொடக்கத்தில் அஜித்துடன் வங்கிக்குள் நுழைந்தவர்கள் யார் யார் என்பது பற்றிய குறிப்பும் திரைக்கதையில் இல்லை.
இந்த விஷயங்கள் எதுவுமே திரையரங்கினுள் உட்கார்ந்திருக்கும்போது நினைவுக்கு வராது. அதுவே ‘துணிவு’ படத்தின் பலம்.
அடுத்தடுத்த வாரங்களில் குடும்பங்கள் திரளும் அனுபவத்தை இது தருமா என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாவிட்டாலும், பொங்கல் விடுமுறை நாட்களில் திரையரங்குகள் நிரம்பி வழியும் அளவுக்கு ஒரு படத்தை அஜித் தந்திருக்கிறார் என்பதில் எந்த மிகையும் இல்லை.
– உதய் பாடகலிங்கம்