தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்-ஜானகி மகளிர் கல்லூரி வளாகத்தில், இன்று (12.01.2023) பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்த பொங்கல் விழாவில் மாணவிகள் பாரம்பரிய முறையில் மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினர்.
நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் வண்ணமயமான தாவணி, பட்டுப் புடவைகளை அணிந்து வந்து இந்த விழாவில் பங்கேற்றனர்.
இந்தக் கொண்டாட்டத்திற்காகவே சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்த கிராமப்புற சூழல் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தது.
பல்வேறு பொருள்களை விற்பதற்கென்று மாணவிகளே அமைத்து நிர்வகித்த அங்காடிகளில் வளையல்களும், பலூன்களும் மட்டுமின்றி கரும்புச் சாறு, மோர், இளநீர், பஞ்சு மிட்டாய் போன்ற பல்வேறு – நாவிற்கு சுவையூட்டும் உணவுப் பொருள்களும் விற்கப்பட்டன.
மேலும் கிளி ஜோசியம், கேழ்வரகு கூழ், பஜ்ஜி, சுண்டல் விற்பவர்களும் அமைந்திருந்த காட்சி கிராமத்து சந்தையின் அழகை அப்படியே கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.
கோலி, கில்லி, பம்பரம், உறியடித்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்த மாணவிகள், தமிழர்களின் கலாச்சார உடைகளை அணிந்து ஃபேன்ஸி டிரஸ் போட்டியிலும் ஆர்வமுடன் கலந்து கொண்டு அசத்தினர்.
மேலும் மாணவிகள் நிகழ்த்திய கோலாட்டம், கும்மியாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற நாட்டுப்புற நடனங்கள் பார்வையாளர்களைப் பெரிதும் ஈர்த்தன.
பானையில் பொங்கல் பொங்கி வருவதைக் கண்ட மாணவியர் அனைவரும் சேர்ந்து “பொங்கலோ பொங்கல்” என்று விண்ணைப் பிளக்கும் வகையில் உற்சாக ஒலி எழுப்பினர்.
பொங்கல் விழா என்பது நல்ல விளைச்சலுக்காகவும், அறுவடைக்காகவும் இறைவனுக்கு நன்றி சொல்லும் விழா என்பதை நினைவூட்டுவதாக இக்காட்சி அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வேகமாக மாறிவரும் இவ்வுலகில், நம்முடைய மதிப்பு மிகுந்த மரபையும், விழுமியங்களையும் நாம் மறக்காமல் இருப்பது முக்கியம்.
அந்த வகையில் நம்முடைய பண்பாட்டின் வளத்தினையும், பெருமையையும் நம்முடைய இளைய சமுதாயம் உணர்ந்து, அதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கு இவ்வாறான விழாக்கள் பெரிதும் உதவும்.
இந்த நோக்கத்தை முன்னிறுத்தி நம்முடைய கலாச்சாரத்திற்குப் பெருமை சேர்க்கும் பல்வேறு விழாக்களை தொடர்ந்து நடத்தி வருவதில் எங்கள் கல்லூரி பெருமை கொள்கிறது” என்கிறார் டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆர். மணிமேகலை.
“தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வேகமாக மாறிவரும் இவ்வுலகில், நம்முடைய மதிப்பு மிகுந்த மரபையும், விழுமியங்களையும் நாம் மறக்காமல் இருப்பது முக்கியம்.
அந்த வகையில் நம்முடைய பண்பாட்டின் வளத்தினையும், பெருமையையும் நம்முடைய இளைய சமுதாயம் உணர்ந்து, அதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கு இவ்வாறான விழாக்கள் பெரிதும் உதவும்.
இந்த நோக்கத்தை முன்னிறுத்தி நம்முடைய கலாச்சாரத்திற்குப் பெருமை சேர்க்கும் பல்வேறு விழாக்களை தொடர்ந்து நடத்தி வருவதில் எங்கள் கல்லூரி பெருமை கொள்கிறது” என்கின்றனர் டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கல்லூரி மாணவிகள்.