சேக்கிழார் பரம்பரையில் வந்த இரா.செழியன்!

செழியனுக்குப் பெற்றோர் வைத்த பெயர் சீனிவாசன். திவ்ய தேசமான திருக்கண்ணபுரத்தில் 28.4.1923-ம் ஆண்டு பிறந்தவர் இவர்.

இவருக்கு நான்கு சகோதரிகள். இரண்டு சகோதரர்கள். சகோதரர்களில் ஒருவர்தான் அரசியலில் புகழ்பெற்ற நெடுஞ்செழியன். தந்தை ராசகோபாலன் நீதிமன்ற ஊழியர். பட்டுக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார் செழியன்.

பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தாா். தந்தை ராசகோபாலன் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் பெரிய ஈடுபாடு கொண்டிருந்தார்.

அத்தகையச் சூழலில் வளர்ந்ததால், பட்டுக்கோட்டையிலும் சுற்று வட்டாரத்திலும் எங்கு சுயமரியாதை இயக்கப் பிரமுகர்கள் பேசினாலும் அந்தக் கூட்டங்களுக்கு சகோதரர் நெடுஞ்செழியனும், செழியனும் சென்று விடுவார்கள். இப்படி இளமையிலேயே திராவிடச் சூழலில் வளர்ந்தவர் செழியன்.

மிகவும் பாரம்பரியமுள்ள ஒரு குடும்பத்திலிருந்து வந்தவர். இவர் குடும்பத்து பூர்வீகம் திருவள்ளூர் மாவட்டம் திருமழிசைக்கு அருகில் உள்ள நேமம் என்ற கிராமம்.

அவரது குடும்பத்துக்கு ‘நேமத்தாா் என்ற பெயரும் உண்டு. அவரது முன்னோர்கள் பல்லவர், சோழா் ஆட்சியில் படைத் தலைவர்களாகவும், அமைச்சர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இவரது மூதாதையர்களில் ஒருவர்தான் சேக்கிழார்.

1957-ம் ஆண்டு முதல் முறையாகத் தேர்தல் களத்தைச் சந்தித்தாா் செழியன். கரூர் தொகுதியிலிருந்து மக்களவைக்குப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

பின்னா் பெரம்பலூர் தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்றார். அப்போது இவருக்காக சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்தவர் எம்.ஜி.ஆர்.
அவா் பேசிய கூட்டங்களுக்கு ஐந்து ரூபாய் நுழைவுக் கட்டணம் வைத்து வசூலித்து, தேர்தல் செலவுக்குப் பயன்படுத்தினார்கள்.

அப்படி வசூலித்த தொகை தவிர செழியன் செலவு செய்தது 4,500 ரூபாய்தான். 1967 மற்றும் 1971 ஆகிய இரு தேர்தல்களிலும், கும்பகோணம் தொகுதியில் நின்று மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் செழியன்.

எமர்ஜன்ஸி விலக்கப்பட்டதைத் தொடர்ந்து 1977-ல் நாடாளுமன்றத்திற்கு நடந்த பொதுத்தேர்தலில் செங்கல்பட்டு நாடாளுமன்றத் தொகுதியில் நின்று தோற்றுப் போனார்.

செழியன் தோற்றது மொரார்ஜி தேசாய்க்கும், வாஜ்பாய்க்கும் பெரிய வருத்தத்தை உருவாக்கியது. நாடாளுமன்றச் செயல்பாட்டில் செழியனின் வழிகாட்டுதல் தேவை என்று ஆசைப்பட்டார் மொரார்ஜி.

அப்போது தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்திருந்த எம்.ஜி.ஆரிடம் செழியனை மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்க உதவி செய்ய முடியுமா என்று கேட்டுக் கொண்டார்.

எம்.ஜி.ஆர். மிக்க மகிழ்ச்சியுடன், செழியனை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்பினார்.

“அண்ணாவின் செல்லத் தம்பியை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க உதவியது பெரிய கௌரவம் என்றார் எம்.ஜி.ஆர்.

1984 வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றி, இந்திய ஜனநாயகம் செழிப்படைய தன் பங்களிப்பை அழுத்தமாகச் செய்தார் செழியன்.

மிகப்பெரிய லட்சியக் கனவுடன் உருவான ஜனதா கட்சி சிதைந்து போனது செழியனை மிகவும் சோர்வடையச் செய்துவிட்டது.

1984-க்குப் பிறகு எந்தவிதப் பதவியில் இல்லாவிட்டாலும் பல்வேறு விவகாரங்களில் நாட்டுக்குத் தேவையான நல்ல கருத்துக்களை பத்திரிகைகளில் எழுதி வந்தார்.

2001-ல் தீவிர அரசியலில் இருந்து விலகினார். பிறகு வேலூர் தொழில்நுட்பக் கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு நல்ல பண்புகள், ஒழுக்கம் போதிக்கும் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த செழியன், 2017 ஜூன் 6 ஆம் தேதி, தனது 94 வது வயதில் இயற்கை எய்தினார்.

– இரா.செழியன் பற்றிய ‘கல்கி’ ப்ரியனின் சிறப்புப் பதிவு.

Comments (0)
Add Comment