தனித்துவமான குரல் வளம் கொண்ட கே.ஜே.ஜேசுதாஸ்!

பிரபல பாடகா் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் பிறந்தநாள் விழா, அவரது ரசிகர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு மார்கழி உற்சவத்தில் பல கச்சேரிகளுக்கு ஒப்பந்தமாகியிருந்தார். கர்நாடக சங்கீத உலகில் இவரது குரலுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகியிருக்கிறது.

ஆரம்ப நாட்களில் தனது தந்தையிடம் இசை கற்றுக்கொண்ட இவர், திருப்பூணித்துறையிலுள்ள அகாடமியில் இசை கற்றுக்கொண்டார். பிறகு வேச்சூர் அரிகர சுப்ரமணிய அய்யரிடம் இசை கற்றுக் கொண்டார்.
செம்பை வைத்தியநாத பாகவதரிடம் இசை படிக்கச் சேர்ந்தார்.

செம்பை அவர்கள் “நீ என் வீட்டில் தங்கி படிக்க இடமில்லையே” என்று சொன்னபோது, ஜேசுதாஸ் “கார் ஷெட்டில் தங்கி படித்துக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

அவரது ஆர்வத்தைப் பார்த்து, ஜேசுதாஸை தன் சிஷ்யனாக ஏற்றுக் கொண்டிருக்கிறார் செம்பை வைத்தியநாத அய்யர். இன்றுவரை தனது குருவுக்கு மரியாதை செலுத்தும் சிஷ்யனாகவே வாழ்ந்து வருகிறார் ஜேசுதாஸ்.

தனது கச்சேரிகளில் குருவணக்கப் பாடலாக, “பம்பை நாதனின் அருளோடு செம்பை நாதனின் துணையோடு…” என்று இவரே இயற்றி இசையமைத்தப் பாடலைப் பாடத் தவறுவதில்லை.

கர்நாடக இசைமேடைகளில் மட்டும் ஒலிக்க ஆரம்பித்த இவரது குரல், 1960-களில் மலையாளத்தில், ‘கால்பாடுகள்’ என்ற மலையாள திரைப்படத்தில் முதல்முறையாக பின்னனியில் ஒலிக்க ஆரம்பித்தது.

1963-ல் தமிழ் சினிமாவுக்கு ஜேசுதாஸின் குரல் இடம் பெயர்ந்தது. இசையுலகின் மூத்த இசையமைப்பாளரான வீணை எஸ்.பாலசந்தர் ஒரு தமிழ் சினிமாவை எடுத்தார்.

தமிழில் வந்த முதல் திகில் படம் அது. பொம்மை என்ற அந்தப்படத்தில் வீணை எஸ்.பாசந்தர் இசையில், “நீயும் பொம்மை நானும் பொம்மை நினைத்துப் பார்த்தால் எல்லாம் பொம்மை” என்ற பாடலை ஜேசுதாஸ் பாடினார்.

இதுதான் இவரின் முதல் தமிழ் சினிமா பாடல். இந்த முதல் பாடலே எல்லோரையும் கவனிக்க வைத்தது. இதன் பிறகு தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஜேசுதாஸின் குரலுக்கு அங்கீகாரம் கிடைத்தது.

அவரது குரலில் இருந்த ஈர்ப்பு, அவருக்கு இந்தி திரைப்படத்தில் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது. 1970-ல் வெளிவந்த சோடிசி பாத் என்ற படத்தில் இவர் பாடிய “ஜெய் ஜவான் ஜெய்கிஷான்” பாடல் எல்லோராலும் கவனிக்கப்பட்டது.

தொடர்ந்து தமிழில், இவரது குரல் பாடிய பாடல்களுக்கு தனிகவனம் கிடைத்தது.
எம்.எஸ்.வி. அவர்களின் இசையில் “அதிசய ராகம் அபூர்வ ராகம்”, “தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு” போன்ற பாடல்கள் ஒரு மயக்கத்தையே ஏற்படுத்தியது.

எம்.எஸ்.வி.யின் எல்லா படங்களிலும் குறைந்தபட்சம் ஒரு பாடல் பாடுவார் கே.ஜே.ஜேசுதாஸ் என்ற நிலை உருவானது.

யார் கண் பட்டதோ அதில் திருஷ்டியாக வந்து சேர்ந்தது ஒரு சம்பவம். ‘அந்தமான் காதலி’ படத்தில் பாடியபோது,

“நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
தெருக்கோவிலே ஓடிவா”
என்று பாடி விட்டார்.

திருக்கோவில் என்ற வார்த்தை, தெருக்கோவில் என்று தவறாக உச்சரிக்கப்பட்டு அப்படியே பதிவும் ஆகிவிட்டது.

அதே பாடலில் செந்தூர பந்தம் என்ற சொல், செந்தூர பெந்தம் என்று உச்சரிக்கப்பட்டது. இதுவும் கவனிக்கப்படவில்லை. படம் வெளியானபோது பத்திரிகைகள் இதைக்குறிப்பிட்டு எழுதின.

ஆனால் கே.ஜே.ஜேசுதாஸ் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். அவருக்கு தமிழ் இலக்கணம் பரிச்சயம் இல்லை.

அதனால் ஒவ்வொரு வார்த்தையின் அர்த்தம், அவரால் கண்டுபிடிக்க முடியாது. இதை உதவி இயக்குநர்களோ, இசையமைப்பாளர்களோ தான் திருத்தியிருக்க வேண்டும்.

இது நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு முன், சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் ஜேசுதாசை கௌரவிக்கும் நிகழ்ச்சியும், அவரது இசை நிகழ்ச்சியும் நடந்தது.

அந்த மேடையில் ஜேசுதாஸ் குறிப்பிட்ட அந்தமான் காதலி படத்தின் பாடலைப் பாடும் முன்பு இந்தச் சம்பவத்தை நினைவுபடுத்தி, இதற்காக இந்த சபையில் நான், மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி தலை வணங்கியபோது, அந்த அரங்கமே எழுந்து நின்று கைதட்டி அவரது பணிவுக்கு பதில் மரியாதை செய்தது.

இவரது குரலுக்கு மெலடியான பாடல்கள்தான் செட் ஆகும் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், சிந்து பைரவி படத்தில் இளையராஜா அவரைக் குத்துப் பாட்டு பாட வைத்தார்.

“ஏ தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுக்குட்டி நான்” என்ற அந்தப்பாடல் பட்டி தொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பியது.

இந்த ஒரு பாடல்தான் அதன்பிறகு இஷ்டம் போல் பாடல்களைப் பாடாமல் தேர்ந்தெடுத்து, பாடி வந்தார் ஜேசுதாஸ்.

இளையராஜா இசையில் “கண்ணன் ஒரு கைக்குழந்தை”, “கிண்ணத்தில் தேன்வடித்து”, “செந்தாழம்பூவில்” என்ற நூற்றுக்கணக்கான ஹிட் பாடல்களைக் கொடுத்தார்.

இதேபோல் சங்கர் கணேஷ் சந்திரபோஸ் தேவா என்று எல்லா இசையமைப்பாளர்களிடமும் பாடி தன் முத்திரையைப் பதித்தார்.

மலையாளத்தில் பல்வேறு விருதுகளை இவரது குரல் பெற்று தந்திருக்கிறது. தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு, மராத்தி, வங்காளம், குஜராத்தி என்று இந்திய மொழிகள் அனைத்திலும் பாடிவிட்டு ரஷ்யா, மலாய், அராபி, உருது, லத்தின் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் பாடியிருக்கிறார்.

அடிப்படையில் கத்தோலிக் சமயத்தைச் சேர்ந்தவரான ஜேசுதாஸ் பாடி “ஹரிவராசனம்” பாடலை ஒலிக்க விட்டுதான் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.

அவரது வாழ்நாள் ஆசையாக இரண்டு விஷயங்கள் இருந்தது. ஒன்று ஐயப்பன் கோவில் நடையில் நின்று, ஹரிவராசனம் பாடலைப் பாட வேண்டும்.

இன்னொன்று குருவாயூர் கோவிலுக்குள் சென்று கிருஷ்ணனைப் பாட வேண்டும் என்பதுதான்.

இந்த இரண்டும் முடியாது என்று கோவில் நிர்வாகம் மறுத்து விட்டது. அதற்கு அவர் சார்ந்த சமயத்தைக் காரணமாகக் காட்டியது.

இது ஜேசுதாஸுக்கு மிகுந்த மனவேதனையைக் கொடுத்தது. ஆனாலும் இறைவன் மீது பாடுவதை மட்டும், அவர் எந்நாளும் விடவில்லை.

அதன் பயனாக காலம் கனிந்தது, கதவும் திறந்தது. ஐயப்பன் கோவிலுக்கு ஜேசுதாஸ் வரலாம் என்று மன்னர் குடும்பத்தினரும், தேவசம் போர்டும் அறிவித்தனர்.

தன் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில், கோவில் முன் நின்று ஹரிவராசனம் பாடலைக் கண்ணீர் மல்க அவர் பாடி நடைதிறக்கப்பட்டது.
ஐயப்பன் அவருக்கு புன்னகைத்தபடி காட்சியளித்தார்.
ஆனந்த கண்ணீரால் ஜேசுதாஸின் மேனியெல்லாம் நனைந்தது.

Comments (0)
Add Comment