ஆளுநரின் செயல் வேதனை அளிக்கிறது!

– சபாநாயகர் அப்பாவு 

சட்டசபையில் இன்று கவர்னர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல் உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார்.

அதுமட்டுமின்றி, ‘சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதில் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது’ என்ற வாக்கியத்தையும் ஆளுநர் தவிர்த்துள்ளார்.

இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநரின் செயலை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டித்துள்ளன.

மேலும், ஆளுநர் உரையைத் தொடர்ந்து சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, அரசின் உரையை ஆளுநர் முழுமையாக படிக்காதது வருத்தம் அளிப்பதாகவும், அவர் பேசியது அரசின் கொள்கைக்கு மாறானது என்றும் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில், ஆளுநர் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, “ஆளுநர் உரை என்பது அரசின் கொள்கைகளை எடுத்துச் சொல்லும் உரை. ஒப்புதல் அளித்துவிட்டு பேரவையில் மாற்றி வாசிப்பது ஏற்கத்தக்கதல்ல.

தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாக, அவை நடவடிக்கைகள் முடியும் முன்னரே ஆளுநர் வெளியேறியுள்ளார்.

அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பெயரையே ஆளுநர் உச்சரிக்கவில்லை என்பது வேதனையான விஷயம். 

திராவிட மாடல் என்பதை அவரால் ஏற்றுக்கொள்ளவில்லை. பல பிரச்சனைகள உருவாக்கும் வகையில் ஆளுநர் நடந்துகொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.

இந்திய அரசிலமைப்பின்படி நமது மாநிலத்திற்கு தலைவர் அவர்தான். அவர் நமக்கு முன்மாதிரியாக நடக்க வேண்டும்.

இதுபோன்று பல சமயங்களில் அவர் அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக நடந்துகொண்டிருக்கிறார். இதை வேதனையுடன் விமர்சனமாகவே சொல்கிறேன். இதை அவர் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஆளுநர் உரையை ஒப்புதலுக்காக அவருக்கு கடந்த 5-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. அவர் 7-ம் தேதி ஒப்புதல் அளித்துவிட்டார்.

அப்போதே ”இதில் சில வார்த்தைகள் உடன்பாடில்லை மாற்றுங்கள்” என்று கூறினால், முதல்வரும், அரசாங்கமும் அதற்கேற்ப முடிவு எடுத்திருக்கும். அதையெல்லாம் செய்யாமல், பொது மேடையில் பேசுவதுபோல் பேசுவது நாகரிகம் அல்ல.

அதேபோல் நாடாளுமன்ற ஜனநாயகத்தின்படிதான் நாம் நடக்கிறோம். நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசால் எழுதிக்கொடுக்கும் உரையைத்தான் குடியரசுத் தலைவர் வாசிக்கிறார். ஒரு வார்த்தை மாறாமல் அப்படியே வாசிக்கிறார்.

மசோதாக்களுக்கும் தாமதம் இன்றி ஒப்புதல் அளிக்கிறார்.

ஆனால் தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் உடனடியாக பதில் அளிப்பதில்லை, ஏன் இப்படி நடக்கிறது எனத் தெரியவில்லை.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இருக்கும் ஆளுநர்கள் எதற்காக இதுபோன்று நடந்துகொள்கிறார்கள் என தெரியவில்லை” எனக் கூறினார்.

Comments (0)
Add Comment