எழுத்தாளர் சரவணன் சந்திரன்
பழநிக்கு அருகே விவசாயம் செய்துவரும் எழுத்தாளர் சரவணன் சந்திரன், ஜனவரி 6 ஆம் தேதியன்று தொடங்கிய சென்னை புத்தகக் காட்சிக்கு வருவேனா என்று சந்தேகத்துடன் சுவாரசியமான ஒரு பதிவை எழுதியுள்ளார்.
இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு நான் வருவேனா என்று இந்தக் கணத்தில் எனக்குத் தெரியவில்லை. ஆழமாக யோசித்துப் பார்த்தேன் ஒருநாள். உண்மையில் எனக்கு எழுதுவது மட்டுமே பிடித்திருக்கிறது.
உதாரணம் ஒன்றைச் சொல்கிறேன் கேளுங்கள். கடந்த முறை தோட்டத்தில் இருந்தபோது, ஐந்து கதைகள் எழுதினேன். முதல் நான்கு கதைகளை விட்டுவிட்டு கடைசியாக எழுதியதை மட்டுமே பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பேன்.
முந்தைய நான்கு என் நினைவில்கூட இருக்காது. கடைசிக் கதையையும் சீக்கிரம் மறந்து போய்விடுவேன்.
எழுதியவுடன் நண்பர்கள் நாலைந்து பேருக்கு அனுப்புவேன். அவர்கள் படித்துச் சொன்னதுமே திருப்தி அடைந்து விடுவேன். அதற்கடுத்து அவைகள் வெளியாகும் தினங்களில் திரும்பவும் படித்துக் கூடப் பார்க்க மாட்டேன்.
எனக்கு அடுத்து அடுத்து என எழுத மட்டுமே பிடித்திருக்கிறது. பொதுவாகவே தனிமையில் அலைகிற ஆள் என்பதால், கூட்டத்தைக் கண்டால் கொஞ்சம் மிரட்சி. விலங்கினங்களுக்கு அதுவொரு குணம்.
தவிர கூட்டமும் கும்பலுமாய் ஒருகாலத்தில் புழங்கிவிட்டுத்தான் வேண்டாம் என்று இன்னொரு உலகத்தில் வாழ்கிறேன். யாரையும் சந்திக்கக் கூடாது என்றெல்லாம் இல்லை.
தோட்டத்திற்குத் தேடி வருகிறவர்களை எப்படிச் சீராட்டுவேன் என்று கேட்டுப் பாருங்கள். உண்மையில் என்னைத் தேடி வருகிறவர்களுக்காகத் தோட்டத்தில் இருக்கையில் மட்டுமே சமைப்பேன்.
இப்படியொரு ஏகாந்த நிலையில் கால்போன போக்கில் போனவாறே கண்ணில் தட்டுப்படுகிறவற்றை எழுதுகிற சுகத்திற்கு அடிமையாகிவிட்டேன். உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் என் பெயரில் ஏதாவது வந்து விடும் என்பது எனக்குத் தெரியும்.
அதுபோதும் என்று இப்போது தோன்றுகிறது எனக்கு. இந்தப் புத்தகக் கண்காட்சியில் தானச் சோறு சிறுகதைத் தொகுப்பு தமிழினியிலும் கேரை கட்டுரைத் தொகுப்பு ஜீரோ டிகிரியிலும் கிடைக்கும். மற்ற எல்லா புத்தகங்களையும் சேர்த்து மொத்தம் பதினேழு என்று நினைக்கிறேன்.
கிழக்கு, டிஸ்கவரி, ஜீரோ டிகிரி, அருண் சினிமாவின் பதிப்பக அரங்கு, கடலும் மகனும் தொகுப்பை கார்த்திக் புகழேந்தி எங்கே கொடுக்கிறான் என்று தெரியவில்லை.
யாவரும் பதிப்பகத்தில் ஒருவேளை கிடைக்கக் கூடும். எனக்கு மிகவும் பிடித்த தொகுப்பு அது. ஆனால் ஏனோ அது இன்னும் பலர் கைக்குச் சென்று சேரவே இல்லை.
இந்த ஒட்டுமொத்த புத்தகங்களிலும் அத்தாரோ இன்னும் பலருக்குச் சென்று சேரவில்லை என்கிற குறை உண்டு எனக்கு. அசோகர் நாவலுக்குமே அப்படித் தோன்றியது. ஆனால் அத்தாரோ நான் எழுதியதிலேயே ஒருபடி மேல் எனக்கு.
மற்ற எந்த நாவல்களுமே என் மனதின் அடியாழத்தில்தான் புதைந்து கிடக்கின்றன. இதுவரை எழுதிய எல்லாமே எனக்கு புகைமூட்டம் மாதிரிதான் நினைவில் இருக்கும். அத்தியாயம் அத்தியாயமாக கேட்டால் சொல்லத் தெரியாது.
சில கதாபாத்திரங்கள்கூட மறந்துவிட்டன. ஒரு சில மட்டுமே இன்னும் நினைவில் இருக்கின்றன. இந்த ஒட்டுமொத்தத்தில் இருந்து அத்தாரோ மட்டுமே மறுபடி மறுபடி மேல் எழுந்தபடியே இருக்கிறது.
சுபிட்ச முருகன்கூட எப்போதாவதுதான் தோன்றும். ஏனெனில் நிறைவான சொற்களை அதுபெற்றுக் கொடுத்துவிட்டது. ஆனால் அத்தாரோ அப்படியில்லை. மீனின் தொண்டயில் மாட்டிய முள்ளைப் போல ஒரு சொல்லுக்காகத் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
அந்த நாவலில் ஒன்றைக் கண்டடைந்தேன் என்கிற திருப்தி எழுந்தது எழுதி முடித்தவுடன். ஒட்டுமொத்தம் என்பது குறித்த விசாரணை அந்த நாவல். காட்டில் ஒரு புழுவாய்க் கிடந்து புலியாய் எழுந்த ஒரு அகத்தின் காட்சி அது.
மனம் திருப்தி கொள்ளும்படி அந்தச் சொல் வந்துவிட்டால் உடனடியாகவே அத்தாரோ மலையில் இருந்து இறங்கி அடுத்த நாவலுக்குள் நுழைந்து விடுவேன்.
ஞாயிறு கடை வியாபாரத்தை முடித்து விட்டு பழனி கிழம்புகிறேன். திரும்பி எப்போது வருவேன் என்று எனக்கே தெரியாது. கால் போன போக்கில் அடிவாரத்தைச் சுற்றி அலைந்தபடி ஒரு ஆறு கதைகளை எழுதலாம் என்கிற எண்ணம் சூழ்ந்தது.
இப்போது இந்தக் குறிப்பை எழுதுவதற்கு முன்புகூட அடுத்த கதையை எழுதத் துவங்க வேண்டும் என்கிற எண்ணத்தில், கதையின் தலைப்பைத் தட்டச்சு செய்தேன்.
அப்புறம் அதைக் கைவிட்டு விட்டுத்தான் இதை எழுதுகிறேன். கூப்பு யானை என்பதைத்தான் எழுதி அழித்தேன்.
கஞ்சித் தொட்டி தேடி அலையும் ஒரு யானையைப் பற்றிய கதையோடு அடுத்த சுற்றைத் துவங்கத் திட்டமிட்டேன். யானை மேய மொச்சை பூவெடுத்து இருக்கிறது அடிவாரத்தில்.