பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட எஸ்.பி.பி.சரணின் பிறந்தநாளையொட்டிய (ஜனவரி-7) சிறப்புப் பதிவு. சீதா ராமம் பாடல்கள் மூலமாக காதலர்கள் மட்டுமல்லாமல் அனைவரின் மனதையும் வசீகரித்து தனது அடுத்த அத்தியாயத்தை தொடங்கி உள்ள எஸ்.பி.பி.சரண் குறித்த சிறப்பு தகவல்களை பார்க்கலாம்.
இசை உலகில் இறவாமல் வாழும் பின்னணி பாடகர் எஸ்.பி.பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண்.
3 தலைமுறைகளாக இசையில் கோலோச்சும் குடும்பம் என்பதால், அக்கா தவிர வேறு யாருக்கும் என்ன படிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது இல்லை என கூறும் சரண்,
அமெரிக்காவில் பி.பி.ஏ. அடுத்ததாய் அனிமேஷன் என சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் படித்தாலும் சினிமா தயாரிப்பாளராக வேண்டும் என்பதே தனது கனவு என தெரிவித்துள்ளார்.
கன்னட படங்களில் நடிகராக அறிமுகமான எஸ்.பி.பி.சரண், இப்போது இருக்கும் ஸ்டார் கிட்ஸ் போல தனக்கு தந்தையின் சிபாரிசு கிடைத்தது இல்லை எனவும், ஆனால் தான் பாடகராக அறிமுகமானபோது தந்தையில் 30 ஆண்டுகால அனுபவத்தை தன்னிடம் எதிர்ப்பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தன்னைப்போல் யாரும் வாய்ப்புக்காக ஏங்கி விடக்கூடாது என்பதற்காகவே தயாரிப்பாளராக உருவெடுத்த சரண், திறமை வாய்ந்த புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்புகளை வாரி வழங்கினார்.
உன்னை சரணடைந்தேன், சென்னை 600028, ஆரண்ய காண்டம், திருடன் போலீஸ் என அவர் தயாரித்த படங்கள் அனைத்தும் தனிரகம்.
நட்சத்திர வாரிசு என்கிற முத்திரை சுமத்தப்பட்டாலும், அப்பா சம்பாதித்ததை செலவு செய்கிறார் என விமர்சிக்கப்பட்டாலும், சரணின் உள்ளார்ந்த சினிமாவுக்கான தேடலை, அவர் தயாரிக்கும் படங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தொடர்ந்து இங்கொன்றும் அங்கொன்றுமாக ஹிட் பாடல்கள் கொடுத்த சரணுக்கு புதிய அத்தியாயமாக அமைந்தது, இன்றைய 2கே கிட்ஸ்களை முணுமுணுக்க வைக்கும் சீதா ராமம் படத்தில் இடம்பெற்ற ஹே சீதா பாடல். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ரசிகர்களையும் சேர்த்தே இப்பாடல் கவர்ந்தது.
– இளந்தமிழ்பாண்டியன்
நன்றி – நியூஸ் 7 தமிழ்