இயல்புகளை மாற்றாமல் வெற்றியாளராக முடியாது!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர் – 2

கனவு காண்பதனால் மட்டும் ஒருவர் வெற்றி அடைந்துவிட முடியாது.

அப்படியானால் வெற்றிக்கு என்ன தேவை?

வெற்றிக்குத் தேவை, உங்களிடம் ஏற்பட வேண்டிய ‘மாற்றம்’தான். உங்கள் இயல்புகளை மாற்றிக் கொள்ளாமல் வெற்றியாளராக முடியாது.

ஒரு குழந்தையைப் பெரியவனாக வளர்க்க வேண்டுமென்றால், அதனைப் பாராட்டிச் சீராட்டி, விளையாட வைத்து, பள்ளியில் சேர்த்து, படிக்க ஆர்வம் எற்படுத்தி கவனம் மாறாமல் பார்த்து, நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொடுத்து… அப்பப்பா… எவ்வளவு மெனக்கெட வேண்டி இருக்கிறது.

அதுபோலத்தான் கனவுகளையும் மெய்ப்படுத்தி நாம் மெனக்கெட வேண்டும். ‘மெனக்கெட’ என்றால் ‘மேவீ கெட்’ என்று அர்த்தம். அதாவது உடலை வருத்திக் கொள்ளுதல் என்பதாகும்.

எடுத்துக்காட்டாக நாளொன்றுக்கு 500 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவர், அதைவிட பத்து மடங்கு அதிகமாக – அதாவது 5000 ரூபாய் சம்பாதிக்க வேண்டுமென்று கனவு மட்டும் கண்டால், அது வெறும் கனவாக மட்டுமே இருக்கும்.

அதற்கு மாறாக அவர், தன்னையும் மாற்றிக் கொள்ள முன் வர வேண்டும். அவர் உழைக்கிற நேரத்தை அதிகப்படுத்த வேண்டும்;

தொழிலில் உத்திகளை மாற்றிக் கொள்ள வேண்டும்; அது சார்ந்த புதிய சிந்தனைகள் பலவற்றைக் கைக்கொள்ள வேண்டும்;

புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்; பிறரிடம் தம் மீதான நம்பிக்கையை வளர்க்க வேண்டும்.

இப்படியெல்லாம் தன்னை மாற்றிக் கொண்டால்தான் அவர் வெற்றியாளராக முடியும்.

தன்னை மாற்றிக் கொள்ளாதோரிடத்தில் கனவுகள், கனவுகளாகவே இருக்கும்.
எப்போது ஒரு கனவு இரத்தத்தோடு கலந்து நாடி நரம்புகளில் உள் சென்று, ஒருவருடைய அன்றாட செயல்பாடுகளில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, சிந்தனையைப் பெரிதாக்கி மனதுக்குள் எந்நேரமும் வெற்றிக்கான தவிப்பை விட்டுச் செல்கிறதோ அப்போதுதான் ஒருவர் வெற்றியாளராக முடியும்.

ஒரு மாணவன் வகுப்பறையில் தன்னுடைய ஆசிரியரின் கேள்விக்கு பதில் சொல்ல முயற்சித்தான். அவன் தொடங்கிய உடனேயே “உன் பணில் தவறு” என்று சத்தமிட்டுச் சொன்னார் ஆசிரியர்.

அவன் உடனே நிறுத்திவிட்டு சற்று தயங்கி அதே பதிலைத் திரும்பச் சொல்லத் தொடங்கினான். மறுபடியும் ஆசிரியர் “தவறு” என்று சொன்னவுடன் அவன் அப்படியே அமர்ந்துவிட்டான்.

அடுத்த மாணவன் எழுந்து தனது பதிலைச் சொல்ல ஆரம்பித்தவுடன் மீண்டும் “தவறு” என்றார் ஆசிரியர்.

ஆசிரியரின் சொல்லுக்கு அவன் செவி சாய்க்காமல் தான் சொல்ல நினைத்த விடையை முழுமையாகச் சொல்லி முடித்து அமர்ந்தான்.

“நன்று” என்று பாராட்டினார் ஆசிரியர்.

முதலாவது மாணவன் எரிச்சலடைந்தான். “நான் சொல்ல நினைத்த பதிலைத்தானே அவனும் சொன்னான்” என்று ஆசிரியரிடம் முறையிட்டான்.

அதற்கு ஆசிரியர் “நீ என்ன சொல்ல வருகிறாய் என்று முழுமையாகத் தெரியாதபோதும் நான் “தவறு” என்று சொன்னவுடன் நீ அந்த பதில் தவறாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் நிறுத்திவிட்டாய்!

ஆனால் அவனோ தன் மீது முழு நம்பிக்கையோடு இருந்ததால் நான் தடுத்தும்கூட தொடர்ந்து சொல்லி முடித்தான். எனவே முதலில் உன் மீது நம்பிக்கை வர வேண்டும்” என்றார் ஆசிரியர்.

ஆம்! உலகம் உங்களைப் பார்த்து “தவறு” என்று சொன்னால் நீங்கள் நம்பிக்கை இழந்துவிடாமல் “சரி’ என்று நிரூபித்துக் காட்ட வேண்டும்.

உலகம் உங்களைப் பார்த்து “தவறு” என்று ஆயிரம் முறைகள் சொல்லலாம்.

“நீ செய்வது தவறு”

“உனக்கு வயதாகிவிட்டதால் உன்னால் இதனைச் செய்ய முடியாது”

“உனக்கு படிப்பறிவு இல்லை”

“உனக்கு பணபலம் இல்லை”

“உனக்கு ஆங்கிலம் தெரியாது”

“நீ கறுப்பாக ஹிருக்கிறாய்”

இப்படி “தவறு” என்று வெவ்வேறு சொற்களில் உலகம் உங்களைப் பார்த்துச் சொல்லும்போது அதனால் நம்பிக்கை இழந்து விடாமல் உங்களது ஆற்றலை நிரூபிக்க வேண்டியது உங்களுடைய கடமை.

எனவே நீங்கள் வெறும் கனவு மட்டும் கண்டால் போதாது. உங்கள் ஆற்றலை நிரூபிக்க உங்களுக்குள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படித்தான் வெற்றியாளர்கள் உருவாகியிருக்கிறார்கள்.

தொடரும்…

– இராம்குமார் சிங்காரம் எழுதிய ‘பணக்காரராக 10 ரகசியங்கள்’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி

https://ramkumarsingaram.com

Comments (0)
Add Comment