‘சினிமா சீக்ரெட்’ நூலில் சிறு வயதில் ஆசிரியர் கலைஞானம் தனது சொந்த கிராமத்தில் டூரிங் டாக்கீஸில் முறுக்கு விற்ற அனுபவம், நடிப்பாசையில் சென்னை வந்த அனுபவங்களுடன், பி.யூ.சின்னப்பாவை சந்தித்தது, ‘பராசக்தி’ பூசாரி கவி.கே.பி.காமாட்சி சுந்தரத்துடனான ஆசிரியரின் அனுபவங்களுடன், அன்றைய கால சென்னை நகரம் குறித்தும் எழுதியிருக்கிறார்.
கவி.கே.பி.காமாட்சி சுந்தரத்தின் உடலை சுடுகாடுவரை சுமந்த எம்.ஜி.ஆர்., சுடுகாட்டில் எம்.ஜி.ஆர். ஆசிரியரிடம் பேசிய விஷயங்கள் படிப்பவர் நெஞ்சை நெகிழ வைக்கும்.
டி.ஆர்.மகாலிங்கத்துடனான அனுபவம், எம்.கே.தியாகராஜ பாகவதரைப் பார்த்தது, அவரின் வாழ்க்கை அனுபவங்களுடன் சரோஜா தேவியை ஆசிரியர் பிரம்பால் அடித்த சுவாரஸ்யங்களும் உள்ளன.
கமல்ஹாசனை மீண்டும் நடிப்பதற்காக அழைத்து வந்தது, கமலுடனான முரண்பாடு, கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் மகனைக் காப்பாற்றிய எம்.ஜி.ஆரின் கருணை, சாண்டோ சின்னப்ப தேவருடனான என் அனுபவங்கள் என உற்சாகமான, பல உணர்ச்சிகரமான நிகழ்வுகளை எழுதியுள்ளார் கலைஞானம் அவர்கள்.
இந்த நூலின் ஆசிரியர் முன்னுரையில், “சினிமாவுக்கு கதைகள் எழுதுவதில் நான் தேர்ந்துவிட்டேன் என்றுதான் நினைக்கிறேன். அதனாலேயே சில நண்பர்கள் என்னை ‘கதைத்தாத்தா’, ‘பீஷ்மர்’, ‘கதைஞானம்’ என்றெல்லாம் பாராட்டுகிறார்கள்.
பார்த்ததை, கேட்டதை, சொன்னதை அனுபவமாக எடுத்துக்கொண்டேதான் இதுவரை சினிமாவுக்கு 30 கதைகளுக்கு மேல் எழுதிவிட்டேன். இதில் மிகப்பெரிய இயக்குநர்களுடன் திரைக்கதை ஒத்துழைப்பு சுமார் நூறைத் தாண்டும். தயாரிப்பு 16 படங்கள். பாடல்கள் எட்டு. இயக்கம் 2. மெயின் காமெடியனாக ‘இது நம்ம ஆளு ஒன்றுதான். சின்னச் சின்ன வேஷங்கள் சில….
1974-ல் ஒரே மாதத்தில் என்னிடம் ஆறு கதைகளை சினிமா தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினார்கள். அப்போது நான் ஒரு யுக்தியைக் கையாண்டேன். தயாரிப்பாளர்கள் ஒவ்வொருவரையும் டேப்ரிக்கார்டர் வாங்கி வரச் சொல்லி அதிலே கதையைச் சொல்லிவிட்டேன்” என்கிறார் கலைஞானம் தனது முன்னுரையில்.
‘
###
இதேபோல் மேலாண்மை பொன்னுசாமி அவர்கள் தனது அணிந்துறையில், “அவர் திரையுலகம் குறித்து நிறைய பேசினார்.
திரையுலகப் பிரமுகர்கள் பற்றியும் நிறைய பேசினார். ஏடறியாத ரகசியங்கள், யாருமறியா மர்மங்கள் என்று வண்டி வண்டியாக கொட்டினார்.
அதிர்ச்சியும். ஆச்சரியமுமாய் திகைத்தேன். இத்தனை மர்மங்களா இத்தனை ரகசியங்களா? இவர் இப்படியா? அவர் அப்படிப்பட்டவரா? என்று திகைத்து மூச்சுத் திணறினேன்.
மேற்குலக நாட்டு மனிதராக இருந்திருந்தால் அவர் சொன்ன சினிமா சீக்ரெட்களை புத்தகங்களாக எழுதி உலகம் பூராவும் பரபரப்பை நிகழ்த்தி கோடி கோடி டாலர்களாக விற்றுக் குவித்திருப்பார்.
கலைஞானம் பாமர மனிதர். நேர்மையை உயிர்போன்று கருதுகிறவர். பணத்தை கால் தூசி எனவும், கண்ணியத்தை உயிரெனவும் கருதுகிறவர்.
தமிழ் சினிமாவின் மேன்மையான விஷயங்களையும், உயர் பண்பு மனிதர்களையும், நல்லவைகளையும் பற்றி மட்டுமே சினிமா சீக்ரெட்டாக நக்கீரனில் எழுதியிருக்கிறார்.
திடுக்கிடும் பல உண்மைகள், ரகசியங்கள், அதிசயங்கள், சினிமா உலகின் வரலாற்றுத் திருப்பங்கள். பலப் பல முக்கிய நிகழ்வுகள் ‘பிளிமா சீக்ரெட்டாக இந்த நூல்களில் வருகின்றன.
பாலகிருஷ்ணன் என்ற எழுமலைச் சிறுவன். கல்வியில்லாமலேயே கதாசிரியராக உயர்ந்த கதை,
திரையுலக வாசலில் காத்துக்கிடந்தவர், திரையுலகத்தின் நாயகர்களையும், நாயகிகளையும், இயக்குநர்களையும், பாடலாசிரியர்களையும் ஊற்றென உருவாக்குகிற திரைப்பட ‘கர்த்தா’வாக உயர்ந்த கதை பலருக்கு உதவியாகத் திகழ்ந்தவர்.
பலரது மோசடிக்குள்ளான போதிலும், தமது உயர்பண்பை இழக்காத வைராக்கிய நேர்மை இவையெல்லாம் ஆச்சரியங்கள்தான்.
இதையெல்லாம் தாண்டி, இன்னும் மகத்தான கிராமத்து சுபாவங்களை தக்க வைத்திருக்கிறார். வாழ்க்கையுடன் வறுமையுடன் கடன்களுடன் மல்லுக்கட்டிப் போராடிய எந்தத் தருணத்திலும் உயர்மாண்புகளை இழக்காமல் இருந்த விஷயமெல்லாம் வியப்பு.
‘சினிமா சீக்ரெட்’ சினிமா ரகசியங்களை மட்டும் சொல்லவில்லை, வாழ்வின் சீக்ரெட்களையும், உயர் பண்புடன் வாழ்வதிலுள்ள சீக்ரெட்களையும் சேர்த்தே சொல்கிறது.
சினிமா சீக்ரெட்’ ஒரு சிறந்த நூல். வாழ்வைச் சொல்கிற நூல் வாழ்வை வென்ற மனிதனைச் சொல்கிற நூல் சினிமாவைச் சொல்கிற நூல். சினிமாவை செதுக்கிய சிற்பிகளின் உயர் திறமையைச் சொல்கிற நூல்” என்கிறார் மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் தனது அணிந்துறையில்.
இனி இந்த புத்தகம் குறித்துப் பார்ப்போம் :
இந்த புத்தகத்தில் கேள்விப்படாத நிறைய சம்பவங்கள், ஆசிரியரின் அனுபவங்கள் வாழ்ந்த விதம் வளர்ந்த விதம் உயர்ந்த விதம் எல்லாம் எழுதியிருக்கிறார்.
சினிமாத்துறையில் பழுத்த அனுபவம் பெற்ற ஒரு வித்தகர் தன் அனுபவங்களை வாசகர்களுக்கு வழங்கினால் படிக்கப்படிக்கத் திகட்டாது. ஜாம்பவான்களுடன் பழகிய ஜாம்பவனான திரைப்பட தயாரிப்பாளர் இயக்குநர் கதாசிரியர்-நடிகர் கலைஞானம் அவர்களின் திரைத்துறை சார்ந்த வாழ்க்கை அனுபவமும் நமக்குத் திகட்டாத இன்பமாக படிக்கக் கிடைத்திருக்கிறது.
இதுவரை வெளிப்படாமல் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் உண்மைகள் அதனை நேரில் கண்டவரின் வார்த்தைகளில் வெளிப்படும் போது சுவாரஸ்யம் மட்டுமல்ல, ஆச்சரியமும் விறுவிறுப்பும் கூடுதலாகச் சேர்கின்றன. அப்படிச் சேர்ந்ததுதான் இந்த ‘சினிமா சீக்ரெட்!
அந்தக் காலத்தில் இரவு சாப்பாட்டுக்குக்கூட இயலாது கஷ்டப்பட்ட எம்.ஜி.ஆர். குடும்பம் சாண்டோ சின்னப்பத் தேவர், தமது டவுசர் பைகள் இரண்டிலும் போட்டுக்கொண்டு வந்த அரிசியில் பசியாறிய சம்பவம். சத்துணவுத் திட்டத்தை அமல்படுத்தியதில் எம்.ஜி.ஆர். காட்டிய வைராக்கியத்திற்கு காரணமாக இருந்திருக்குமோ
‘ரஜினிகாந்த் அறிமுகப்படுத்தப்பட்டது கே.பாலசந்தரால், கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டது ‘முள்ளும் மலரும்’ மகேந்திரனால்’ என்ற கருத்துப் பிம்பம்தான் எனக்குள் இருந்தது.
‘பைரவி’ மூலமாக ரஜினியை கதாநாயகனாக முதன்முதலில் அறிமுகப்படுத்தியது கலைஞானம்தான் என்ற தகவல் இந்த நூலில் வருகிறது.
சரித்திரம் படைத்த ரஜினிகாந்த்தை சாதனைப் பாதையில் செலுத்திய கலைஞானம், எழுமலையில் பாலகிருஷ்ணனாக சுற்றித் திரிந்த காலத்தில் ஒரு சினிமா பார்க்கக் கூட இயலாத ஏழ்மையில் இருந்தவர். சினிமா ஆர்வம் கொண்டிருந்தவர். சினிமா பார்க்கக்கூட காசில்லை.
அந்நாளைய மதுரை மாவட்ட எழுமலையில் பஞ்சாயத்து கிளார்க்காக இருந்த முத்தையாவின் அகால மரணம், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மொத்த குடும்பத்தையும் வறுமையில் வறுத்தெடுத்தது, உறவுகளின் பொய்மை தெரிந்தது. வறுமை, வீட்டுக்குள் வறுமையற்றிருந்தது.
தெருவில் இட்லி விற்றுக்கொண்டிருந்த பாலகிருஷ்ணன், சினிமா ஆர்வம் கொண்டு… சினிமா பார்ப்பதற்காகவே சினிமா கொட்டகையில் முறுக்குத் தட்டு தூக்க ஆரம்பித்த கதையிலிருந்து… பார்த்த சினிமாவை பாராதவருக்கு கதை சொல்லும் கலையில் கை தேர்ந்த கதை… சினிமா உலகத்துக்குள் நுழைய நாடக சபாவில் சங்கடப்பட்ட கதை… சென்னைக்கு வந்து முட்டி மோதிய கதை… சந்திக்க முயன்ற பிரபலங்களையெல்லாம் சந்திக்க இயலாமல் திரும்பிய கதை… அந்நாளைய பிரபல சினிமா கவிஞர் கவி.கே.பி.காமாட்சிசுந்தரம், பாலகிருஷ்ணனுக்கு தார்மீக உதவிகள் செய்தது… குடும்பத்துடன் பட்ட பாடுகள்… என்று இந்த நூல் விரிகிறது. ஒரு சுவாரஸ்யமான நாவல் போல் துவங்கி, விரிவடைகிறது.
எம்.கே.தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்து டி.ஆர். மகாலிங்கம் போன்ற இசையரசர்கள் வரையிலான ஒரு காலகட்டம், சினிமா சாம்ராஜ்ஜியத்தை கட்டி ஆட்சி செய்த எம்.ஜி.ஆர்-சிவாஜி காலகட்டம், அவர்களுக்கடுத்து சினிமாவில் நிலைத்த இடத்தைப் பெற்ற ரஜினி-கமல் யுகம் அதன்பின் இப்போதுள்ள கலைஞர்களின் காலம் என கலைஞானத்தின் திரைப்பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
ஒவ்வொரு ஜாம்பவானுடனும் இணைந்து பணியாற்றி அவர்களின் அன்பைப் பெற்ற ஜாம்பவனாக கலைஞானம் இருப்பதும், அவர்களின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்ததும் அவர் வெளிப்படுத்தும் அனுபவ வார்த்தைககளின் வாயிலாகத் தெரியவருகிறது.
அதிலும் குறிப்பாக, சாண்டோ சின்னப்பா தேவர் பற்றிய கலைஞானத்தின் விவரிப்பு, படிக்கின்ற எவரையும் மெய்சிலிர்க்க வைத்துவிடும். பகைபோல வெளியே தெரிந்த சினிமா கலைஞர்கள் உள்ளே நட்புறவோடு ஒட்டி உறவாடியதையும், வெளிப்பார்வைக்கு நட்புபோலத் தெரிந்த பலரும் உள்ளுக்குள் மோசமான பகையைக் கொண்டிருந்ததையும் இந்த சீக்ரெட் மூலம் அம்பலப்படுகிறது.
சினிமா கனவுகளுடன் புதிய புதிய இளைஞர்கள் புறப்பட்டு வந்துகொண்டே இருக்கிறார்கள். வெற்றி பெறுகிறவர்களும் உண்டு, வேதனையுடன் திரும்புகிறவர்களும் உண்டு. திரைத்துறை என்பது எப்படிப்பட்டது என்பதையும் உழைப்பும் சாதுர்யமும் கொண்டவர்கள் எத்தகைய சூழல்களை சந்தித்து வெற்றிபெற வேண்டும் என்பதை மிகச்சாதாரண குடும்பத்திலிருந்து பிறந்து, திரையுலகில் அடிவைத்து மிகப்பெரும் நட்சத்திரங்களை வைத்து படம் தயாரிக்கவும் இயக்குவுமான நிலைக்கு உயர்ந்த கலைஞானம் அவர்கள் தன் வாழ்க்கை அனுபவங்கள் மூலம் இந்த சினிமா சீக்ரெட்டில் சொல்லித் தருகிறார்.
“சினிமா சீக்ரெட்”.
கலைஞானம் .நக்கீரன் வெளியீடு .
முதல் பதிப்பு 2016 .
மொத்த பக்கங்கள் 208.
விலை ரூபாய் 175.