ராகுல்காந்தி இந்தியா தழுவிய நடைப்பயணத்தை தற்போது மேற்கொண்டு வருகிறார். அதன் தாக்கம் பரவலாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது.
அதில் பல பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், முன்னாள் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்குப் பரவலாக இந்த நடைப்பயணத்திற்கு ஊடக வெளிச்சம் கிடைத்திருக்கிறது.
இதே மாதிரியான நடைப்பயணத்தை இந்தியாவில் வெவ்வேறு காலகட்டங்களில் மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள்.
முன்னாள் பிரதமரான சந்திரசேகர் நீண்ட யாத்திரையை மேற்கொண்டிருக்கிறார்.
இதே மாதிரியான நடைப்பயணங்கள் தமிழ்நாட்டிலும் வெவ்வேறு நோக்கங்களை முன்னிறுத்தி நடந்திருக்கின்றன.
1938-ம் ஆண்டில் திராவிடத் தலைவரான பட்டுக்கோட்டை அழகிரி இந்தித் திணிப்புக்கு எதிரான நடைப்பயணத்தை திருச்சியில் துவங்கி சென்னை வரை மேற்கொண்டபோது, அதற்கு மக்கள் மத்தியில் பலத்த ஆதரவு இருந்தது.
தமிழ்நாடு காங்கிரஸின் மூத்த தலைவரான குமரி அனந்தன் 1967ல் கன்னியாகுமரியில் துவங்கி சென்னை வரை இளைஞர்களோடு நடைப் பயணத்தை மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து 1978-லும், 1992-லும் அவரே நடைப்பயணத்தைச் சில முழக்கங்களோடு நடத்தியிருக்கிறார்.
உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தின் போது வேதாரண்யம் வரை யாத்திரையை இராஜாஜி மேற்கொண்டிருக்கிறார்.
1982-ம் ஆண்டில் திருச்செந்தூர் கோவில் தொடர்பான பிரச்சினைக்காக மதுரையில் துவங்கி திருச்செந்தூர் வரை நடைப்பயணம் சென்றார் தி.மு.க தலைவரான கலைஞர் கருணாநிதி.
1992 ஆம் ஆண்டில் தனது தொண்டர்களுடன் அ.தி.மு.க ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரி துவங்கி சென்னை வரை நடைப்பயணம் சென்றவர் ம.தி.மு.க தலைவரான வைகோ.
2004 ஆம் ஆண்டு திரும்பவும் நெல்லை துவங்கி சென்னை வரை நடைப் பயணத்தை மேற்கொண்டவர் வைகோ.
காவிரிப் பிரச்சினை தீவிரம் எடுத்தபோது, காவிரி நதிக் கரையில் நடைப்பயணம் சென்றிருக்கிறார் ம.நடராசன்.
அண்மைக் காலத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாசும் குறுகிய நாட்கள் நடைப்பயணத்தை நடத்தியிருக்கிறார்.
இந்தித் திணிப்பைக் கண்டிப்பதில் துவங்கி தேசியப் பிரச்சினைகள் வரை பல பிரச்சினைகளை முன்னிறுத்தி இதே மாதிரிப் பல நடைப்பயணங்கள் என்ன விளைவை ஏற்படுத்தியிருக்கின்றன என்று பார்த்தால், நடைப்பயணத்தை மேற்கொண்ட இயக்கத்தை, தலைவர்களை மக்களுக்கு நெருக்கமாக்கி இருக்கின்றன.
அந்த நெருக்கத்தை அவர்கள் தொடர்ந்து வளர்த்திருக்கிறார்களா என்பது தனிக்கேள்வி.
ஆனால், மக்களைத் தேடி நடந்து வருகிறபோது, அவர்களை நோக்கி ஓரடியாக முன்னெடுத்து வருகிறார்கள் சாதாரணப் பொதுமக்களும்.
– யூகி