புதுச்சேரியில் கடந்த டிசம்பர் 30-ம் தேதி நடந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க. பிளவுபட்டுக் கிடப்பதாகவும், பா.ம.கவுக்கு நல்ல ஒரு எதிர்காலம் உள்ளதாகவும் பேசினார்.
அவர் தெரிவித்த இந்த கருத்துக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய ஜெயக்குமார், ”ஜெயலலிதா இல்லையென்றால் பா.ம.க., என்ற கட்சியே வெளியில் தெரிந்து இருக்காது. அ.தி.மு.க. தயவால்தான் பா.ம.க.வுக்கு அங்கீகாரம் கிடைத்தது” என்று கூறினார்.
இதற்கு பா.ம.க சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் முற்றுகிறது.
இதுதொடர்பாக பேசிய பா.ம.க. செய்தி தொடர்பாளரான வழக்கறிஞர் கே.பாலு, “பொதுவாகக் கூட்டணி வைப்பதால் தேர்தலில் இரு கட்சிகளும் பயன் அடைகிறார்கள். இதில் எங்களால்தான் வெற்றி என்று ஒரு தரப்பு கூற முடியாது.
அ.தி.மு.க. 4 பிரிவாக பிரிந்து இருக்கிறது என்று குழந்தைகளுக்குக்கூட நன்றாகத் தெரியும்.
அ.தி.மு.க. பிளவு என்பது அதன் உள்கட்சி விவகாரம் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
ஆனால், இதற்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றம் சென்றதுக்கு அ.தி.மு.க.தான் காரணம் என்றெல்லாம் கூறியுள்ளார்.
ஆனால், 1996-ம் ஆண்டை சற்று ஜெயக்குமார் திரும்பி பார்க்க வேண்டும் என்றும், அப்போது அ.தி.மு.க. கடும் வீழ்ச்சி அடைந்திருந்தது என்றும் விளக்கமளித்துள்ளார் வழக்கறிஞர் பாலு.
”அ.தி.மு.க. பலவீனப்பட்டு வீழ்ந்து கிடந்தபோது, அதற்கு உயிர் ஊட்டியதே பா.ம.க.த்தான். நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்காக 1998-ம் ஆண்டு தேனாம்பேட்டையில் உள்ள பா.ம.க. அலுவலகத்துக்கு ஜெயலலிதா நேரில் வந்தார்.
1998-ம் ஆண்டு அந்த முடிவை எடுக்கவில்லை என்றால் அ.தி.மு.க. மிகப்பெரிய சரிவை சந்தித்து இருக்கும்.
அதேபோல, 2001-ம் ஆண்டு தேர்தலில் பா.ம.க.வுடன் கூட்டணி வைக்கவேண்டும் என்று டாக்டர் ராமதாசின் வருகைக்காக வழி மீது விழி வைத்து ஜெயலலிதா காத்திருந்தார். பா.ம.க.வுடன் கூட்டணி அமைத்ததால், 2001-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியை பிடித்தார்.
எங்களால்தான் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராகவும், ஜெயக்குமார் அமைச்சராகவும் 2 ஆண்டுகள் தொடர்வதற்கு நாங்கள்தான் காரணம் என்று ஒருபோதும் பா.ம.க. சொன்னது இல்லை. அது எங்களது வேலையும் இல்லை.
பா.ம.க. மீது விமர்சனம் வைக்கும்போது, ஜெயக்குமார் மிக கவனமாக இருக்கவேண்டும்.
இந்த விவகாரத்தில் அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டை, அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்க வேண்டும்” என்றும் பாலு கூறியுள்ளார்.
நன்றி: தினந்தந்தி