சென்னைப் புத்தகக் காட்சி: கவனத்திற்குரிய 5 நூல்கள்!

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான கருத்துச் செறிவும், ஆய்வில் ஆழமும் கொண்ட தெளிந்த நூல்களில் பின்வரும் ஐந்து நூல்களை  ’தாய்’ இணையதள வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய விரும்புகிறோம்.

இலக்கியம் என்ற பொதுவில் பிரித்தாலும் ஆய்வு, வாழ்க்கை வரலாறு, அரசியல் வரலாறு, அனுபவம் என்ற வகைப்பாட்டில் இந்த ஐந்து நூல்கள் அடங்குகின்றன.

தமிழில் வெளிவரும் சில நூல்கள் மட்டும் வெகுஜன ஊடகங்களால் அடையாளம் காணப்படுகின்றன.

நீண்ட உழைப்பையும், அறிவுத் தெளிவையும் கொண்டு எழுதப்படும் பல நூல்கள் யாருமற்ற பாலைவனத்தில் மீட்டப்படும் புல்லாங்குழல்போல காற்றில் கரைந்துபோய் விடுகின்றன.

நாம்தான் அவற்றை அன்னப் பறவையைப் போல் பாலையும் நீரையும் பிரித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்: இரா. சுப்பிரமணி

பத்திரிகையாளராகப் பணியாற்றிய இரா. சுப்பிரமணி, பெரியார் பல்கலைக்கழக இதழியல் துறை உதவிப் பேராசிரியர் மற்றும் கலைஞர் ஆய்வு மைய இயக்குநராக உள்ளார். அவரது நீண்ட நாள் உழைப்பில் விளைந்துள்ள பெரியார் இதழியல் பற்றிய ஆய்வு நூல்.

தமிழ் இதழியல் துறையில் ஆர்வமும் ஆய்வுநோக்கும் கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய நூலாக அழகிய பதிப்பில் வெளிவந்திருக்கிறது.

800 பக்கத் தொகுப்பில் 1925 – 1949 வரையில் குடியரசு, புரட்சி, பகுத்தறிவு ஏடுகளில் வெளிவந்த பெரியாரின் சொற்பொழிவுகள், தலையங்கங்கள், செய்தி விளக்கங்கள் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளன.

சொற்பொழிவு மேடைகளும் அச்சடித்த ஏடுகளுமே பெரியாரின் படைக்கலன்கள்.

அலங்காரமும் புனைவுகளுமற்ற ஆணித்தரமான சொற்கள், கதைகள், துணைக் கதைகள், உரையாடல்கள், கேள்விகள், நக்கல், நையாண்டி எனப் பல மணி நேரம் நீடிக்கும் பெரியாரின் சொற்பொழிவுகளைக் கேட்க மக்கள் அலை அலையாய்த் திரண்டனர்.

பெரியாரின் மேடைத்தமிழும் இதழியல் நடையும் பண்டிதத்தனங்களைத் தவிர்த்த, எளிமையான மக்கள்மொழியில் அமைந்துள்ளன.

மேடையில் மக்களிடம் நேருக்குநேர் ஊடாடும் தன்மை கொண்ட வடிவத்தில் உரையாடினார்.

இதனால் மக்கள் பெரியார் தம்மிடம் நேரிடையாக உரையாடுவதாகவே உணர்ந்தனர்.

பெரியார் மேடைகளில் தமக்காகப் பேசுவதாகவே கூட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொருவரும் உணரும் வண்ணம் அவர் பேச்சு அமைந்திருந்தது.

பெரியார் தன்னையும் உள்ளடக்கியே பேசுவார்; கேள்வி கேட்பார். தான் ஒரு அறிவாளி, பேச்சாளன் என்ற அதிகார தொனியை அவர் வெளிப்படுத்தியதில்லை.

நாம் சிந்திக்க வேண்டாமா? நாம் அடிமையாகவே இருக்க வேண்டுமா? மானமும் அறிவும் வேண்டாமா? என்னும் கேள்விகளில் பெரியார் தன்னையும், பார்வையாளர்களையும் ஒரே நிலையில் நிறுத்தியே உரையாடினார்.

இதனால் மக்கள் பெரியாரின் குரலைப் பிரித்துப் பார்க்காமல் தம் குரலாய், தமக்கான குரலாய்ப் பார்த்தனர் என்கிறார் நூலின் முன்னுரையில் இரா. சுப்பிரமணி.

வெளியீடு: விடியல் பதிப்பகம், விலை ரூ. 1000

*******

ஊடகம் யாருக்கானது: மணா

தமிழ் இதழியல் வரைபடத்தில் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கக்கூடிய பெருமைக்குரிய பெயர் மணா. 42 ஆண்டுக்கால தொடர் எழுத்துப் பணி.

தமிழகத் தொழில் முகங்கள், தமிழகத் தடங்கள், ஊர் மணம் என நாற்பதுக்கும் அதிகமான நூல்கள் எனப் படைப்பு வெளியிலும் ஓய்வில்லாத செயல்வீரர்.

ஊடகப் பயண அனுபவங்களை ஊடகம் யாருக்கானது என்ற நேர்த்தியான நூலாக எழுதியுள்ளார்.

‘நிலவெளி’ நேர்காணல் முதல் கலைஞர் எனும் மனிதர் என்ற கட்டுரை வரை 25 அனுபவங்கள் உள்ளன. மாலன் நடத்திய திசைகளில் தொடங்கியது மணாவின் எழுத்துப் பயணம்.

“எழுபதுகளின் இறுதியிலிருந்து எந்த ஊடகத்தில் இயங்கிக் கொண்டிருந்தாலும், சில நெருக்கடிகளை எதிர்கொண்டாலும், நம்முடைய சுய அடையாளத்தை இழக்காமல் இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் மனநிறைவாக இருக்கிறது” என்கிறார்.

மணாவைப் பற்றி நான்கு வரிகளில் சொல்லுங்கள் என்றால், மேற்கண்ட அவரது கருத்தை அப்படியே தந்துவிடலாம்.

இந்த மனநிறைவு என்பது பொருளாதாரம் சார்ந்த ஒன்றல்ல. நம்முடைய செயல்பாட்டின் மீது நாம் காட்டும் ஈடுபாடு சார்ந்த ஒன்று என்றும் அவரே சொல்கிறார்.

பதின்பருவத்தில் தொடங்கிய மணாவின் எழுத்து ஆர்வம் என்றும் தீராத நதியாகப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. மதுரைக்கு வந்த எழுத்தாளர் லாசராவின் பேட்டியை எழுதும் அனுபவம் இளம்பிராயத்திலேயே வாய்த்திருக்கிறது.

இன்றுவரை களத்திற்கு நேரடியாகச் சென்று உண்மை அறிந்து எழுதும் பழக்கத்தைக் கைவிடவில்லை.

ஊடக உலகில் எழுதத் தொடங்கும் இளைஞர்கள் கள அனுபவத்திலிருந்து வெகு தூரத்தில் உள்ளார்கள். காலம் மாறியிருக்கிறது.

மலைவாழ் மக்களிடம் அரசின் சலுகைகள் எந்த அளவிற்குச் சென்றடைந்திருக்கின்றன என்பது பற்றி அறிந்து எழுத 45 நாட்கள் தமிழகம் முழுவதும் சுற்றிவந்திருக்கிறார்.

பிரபலங்களின் சொந்த ஊர் பற்றி எழுதிய நதிமூலம் தொடர் மிக முக்கியமான பங்களிப்பு. கலைஞர், மூப்பனார், நல்லகண்ணு, வைகோ, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், மு.க. ஸ்டாலின், கமல்ஹாசன், ம. நடராசன், ஜெயகாந்தன், அப்துல் கலாம், பாரதிராஜா, சாலமன் பாப்பையா என அவர் சந்திக்காத அரசியல், சமூக, கலை ஆளுமைகளே இல்லை.

‘துக்ளக்’ இதழில் சோவுடன் 14 ஆண்டுகள் பணியாற்றிய மணா, குமுதத்தில் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதும் வாய்ப்பைப் பெற்றார்.

இருவேறு துருவங்களாக இருந்தாலும், எழுத்தில் தனக்கான தனித்துவத்தை இழந்ததில்லை. செய்தி சேகரித்த நாட்களில் தாக்கப்பட்ட துன்பியல் சம்பவங்களும் உண்டு.

சின்னக்குத்தூசி, பிரமிள், பிரபஞ்சன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, ஆதிமூலம் போன்ற ஆளுமைகளுடன் தனக்கிருந்த நட்பின் நெருக்கத்தை நெகிழ்ந்து எழுதியிருக்கிறார்.

ஒரு கட்டுரையோ சிறு குறிப்போ எழுதினாலும், அதன் கடைசி பத்தியில் கேள்வி எழுப்புகிற நடையை வைத்திருக்கிற மணாவின் இந்த நூலும் ஒரு கேள்வியாகவே இருக்கிறது: ஊடகம் யாருக்கானது?

பத்திரிகை மற்றும் காட்சி ஊடகங்களில் கால் பதிக்க நினைக்கும் இளையர் உலகம் அவசியம் படிக்க வேண்டிய நூல். இதுவொரு 216 பக்க பாடம் என்றும் சொல்லலாம்.

பிறவிப் பெருங்கடலை சின்னஞ்சிறு குங்குமச் சிமிழில் அடைத்துக் கொடுத்திருக்கிறார் மணா.

வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், தொடர்புக்கு: 85545 07070 விலை: ₹ 220

கலைஞர் மு.கருணாநிதி வரலாறு: ஆங்கிலம்: ஏ.எஸ்.பன்னீர்செல்வன்
தமிழில்: சந்தியா நடராஜன்

சமீபத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிடப்பட்ட புதுமைப்பித்தன் பதிப்பக வெளியீடுதான் கலைஞர் மு. கருணாநிதி வாழ்க்கை வரலாறு.

இந்த நூலை ஆங்கிலத்தில் எழுதியவர் மதிப்பிற்குரிய பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வன். தமிழில் சந்தியா நடராஜன் பொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்.

ஏ.எஸ்.பன்னீர்செல்வன் மேற்கொண்ட இரு இலட்சியப் பணிகளுக்கு இந்த நூல் நியாயம் வழங்கியிருக்கிறது.

ஏதுமற்ற நிலையில் பிறந்து வளர்ந்து, சாதியின் பெயராலும் வகுப்பின் காரணமாகவும் இடரிலும் இழிவிலும் துயருற்ற ஒருவரின் கதையைக் கூறுவது அவரது முதல் பணி.

‘அப்படிப்பட்ட ஒருவர்தான் தனது கற்பனைத் திறனாலும் எடுத்துரைக்கும் ஆற்றலாலும் கடின உழைப்பாலும் வாழ்வின் மீதான பேரார்வத்தாலும் தன்னை ஒரு ராஜதந்திரியாக மாற்றிக்கொண்டு லட்சோப லட்ச மக்களுக்கு அதிகாரத்தைப் புதிதாகப் பெற்றுத்தந்து அவர்களுக்கு, சுயமரியாதையையும்’ கிடைக்கச் செய்தார்.

நவீன இந்திய மாநில செயல்பாட்டின் நுண்ணோக்கை கருணாநிதியின் வாழ்க்கை மூலம் அறிவது ஏ.எஸ்.பன்னீர்செல்வனின் இரண்டாவது இலட்சியம்” என்கிறது நூலின் பின்னட்டை.

தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக மாற்றிய முன்னாள் முதல்வர் கருணாநிதியின் போராட்டக் கதை. தமிழர்கள் அனைவரும் படிக்கவேண்டிய வாழ்க்கை வரலாறு.

வெளியீடு: வ.உ.சி. நூலகம்

இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?: ப. திருமாவேலன்

தமிழின் மிகச் சிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவரான ப. திருமாவேலன் எழுதிய நூல். இரண்டு தொகுதிகளாக 1580 பக்கங்களில் வெளியாகியிருக்கிறது.

பெரியாரிய ஆய்வாளர்களுக்கு மட்டுமல்லாது, அரசியல் பேசும் எவருக்கும் பயன்படக்கூடியது என்று உறுதியாகச் சொல்லலாம்.

‘இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?’ புத்தகமானது, தமிழ் அடையாளம் சார்ந்து பெரியார் மற்றும் திராவிட இயக்கம் மீது முன்வைக்கப்படும் சகல குற்றச்சாட்டுகளுக்கும் பதில் சொல்ல முற்படுகிறது.

பெரியாரின் பேச்சுகள் – எழுத்துகள் வழி மிக விரிவான ஆய்வை மேற்கொண்டிருக்கும் திருமாவேலன்,

இந்த நூலில் ஆகப் பெரும்பான்மையான பகுதிகளைப் பெரியாருடைய வெளிப்பாடுகள் வழியாகவே அவருடைய விமர்சகர்களுக்குப் பதில் அளிக்கவைக்கும் உத்தியில் இதை எழுதியிருக்கிறார்.

வரலாற்றில் முன்னும் பின்னுமாகச் சென்று பெரியாரின் மேற்கோள்களின் வழியாகவே எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளிக்க முற்படுகிறது இந்நூல்” என்கிறார் அருஞ்சொல் ஆசிரியர் சமஸ்.

*******

கடற்கரய் மத்தவிலாச அங்கதத்தின்  ‘யாமறிந்த புலவன்’

பாரதி நினைவு நூற்றாண்டுச் சிறப்புப் பகிப்பாக வெளிவந்திருக்கிறது ஆய்வாளரான கடற்கரய் மத்தவிலாச அங்கதம் தொகுத்திருக்கிற ‘யாமறிந்த புலவன்’ நூல்.

பாரதி குறித்து சில நூற்றுக்கணக்கான நூல்கள் இதுவரை வெளிவந்துவிட்டன. பாரதி நினைவு நூற்றாண்டை ஒட்டியும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இதில் ‘யாமறிந்த புலவன்’ நூலின் சிறப்பு பாரதியைப் பற்றிக் கடந்த நூற்றாண்டில் வெளிவந்துள்ள பல விமர்சனங்களைக் கால வரிசைப்படி தொகுத்திருக்கிறார் கடற்கரய்.

“இதொரு கறாரான விமர்சனப் பெட்டகம்’’ என்று அவரே இந்நூல் குறித்துச் சொல்லியிருப்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் இருக்கிறது நூல் தொகுப்பும், உருவாக்கமும்.

வ.வே.சு. ஐயர் துவங்கி கல்கி, புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, பெ.தூரன், ச.து.சு.யோகி, ரா.அ.பத்மநாபன், கி.வா.ஜகந்நாதன், க.நா.சு, கடற்கரய், ஸ்டாலின் ராஜாங்கம் வரை 135 பேர்களின் கட்டுரைகள் அடங்கியுள்ள தொகுப்பு 1360 பக்கங்களில் வியக்க வைக்கிறது.

நிறைவாக பாரதியைப் பற்றிச் சிலர் ஆற்றிய உரைகளும் பின் இணைப்பாகச் சேர்க்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

பாரதியைப் பற்றிய ஆர்வம் கொண்ட வாசகர்களுக்கு இது அரிய புதையல். காலத்தின் வெவ்வேறு அடுக்குகளில் இருந்து சீரிய உழைப்பின் அருந்திரட்டு என்பதை நூலை வாங்கிப் படிப்பவர்கள் உணரமுடியும்.

அறிஞர் அண்ணா, பாரதிதாசன், அவ்வை டி.கே. சண்முகம் என்று சிலருடைய உரைகளுடன் 1981-ல் பாரதி நூற்றாண்டு துவக்க விழா எட்டயபுரத்தில் நடந்தபோது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்களின் உரையும் இடம் பெற்றிருக்கிறது.

***

யாமறிந்த புலவன்

கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

பதிகம் பதிப்பகம்

ரூ.1350/-

Comments (0)
Add Comment