தமிழ் சினிமாவில் ‘ராஜா’க்களின் ராஜ்ஜியம்!

மன்னராட்சி மறைந்தாலும் தமிழ் திரைப்பட தலைப்புகளில் மன்னர், ராஜா பெயர்களுக்கு தனி மவுசு உண்டு.

மன்னாதி மன்னன், ராஜா தேசிங்கு, ராஜா, எங்க ஊர் ராஜா, எங்கள் தங்க ராஜா, ராஜாதிராஜா, மன்னன், ராஜா சின்ன ரோஜா, இளவரசன், கிங், பிரின்ஸ் என அரசன் பெயர் தாங்கி நூறு படங்களாவது தமிழில் வந்திருக்கும்.

சில குறிப்பிட்ட ‘ராஜபாட்டை’ படங்களையும், அவற்றின் சிறப்புகளையும் இங்கே பார்க்கலாம்.

மன்னாதிமன்னன்

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் பத்மினியும், அஞ்சலிதேவியும் இணைந்து நடித்து 1960 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.

கவிஞர் கண்ணதாசன் கதை, வசனம் எழுதிய படம்.
நடேசன் இயக்கி இருந்தார்.

தன்னம்பிக்கையை விதைக்கும் “அச்சம் என்பது மடமையடா’’ எனும் பாடல் இடம் பெற்ற படம்.

மனதை உருக வைக்கும் “கண்கள் இரண்டும்’’ என்ற பாடல் இடம் பெற்ற படமும் இதுதான்.

ராஜா

விசு தனது நாயகிகளுக்கு உமா என பெயர் வைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

அதுபோல், கே.பாலாஜி தயாரித்த படங்களில் எப்போதுமே ஹீரோ பெயர் ராஜாவாகத்தான் இருக்கும்.

ராஜா எனும் பெயரில் அவர் தயாரித்து சிவாஜி நடித்த படம் ‘ராஜா’.
குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த எஸ்.வி.ரங்கராவை வில்லனாக நடிக்க வைத்திருந்தனர்.

“நீ வரவேண்டும் என காத்திருந்தேன்’’ பாடலின் தொடக்கத்தில் “ராஜா’’ என சிவாஜி உச்சரிப்பார்.

இலங்கை வானொலியில் கொடி கட்டிப்பறந்த அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா, தனது பெயரை சொல்லும்போது, சிவாஜியின் ‘ராஜா’ என்ற உச்சரிப்பை பயன்படுத்துவார்.

ரொம்ப நாட்களுக்கு பிறகு எழில் இயக்கி அஜித் நடித்த படத்துக்கும் ராஜா என பெயர் சூட்டப்பட்டது. சிவாஜியின் ராஜா பல சென்டர்களில் நூறு நாள் ஓடியது. அஜித்தின் ‘ராஜா’ ஓடவில்லை.

மன்னன்

சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த படம் ‘மன்னன்’. ரஜினிகாந்த், கதாநாயகன். அப்போது தெலுங்கில் சூப்பர்ஸ்டாரினியாக விளங்கிய விஜயசாந்தி, ரஜினியின் ஜோடியாக நடித்த ஒரே படம், மன்னன்’.

“அடிக்குது குளிரு’’ எனும் பாடலை ரஜினி பாடியிருந்தார். தாய்ப்பாசத்தை கொட்டும் ‘அம்மா என்றழைக்காத’ பாடல் இடம் பெற்ற படம். குஷ்பு, ரஜினிக்கு இணையாக நடித்து டூயட் பாடிய முதல் படம்..

ராஜாதிராஜா

இளையராஜா தயாரித்த படம். ரஜினியை வைத்து ஆர்.சுந்தராஜன் இயக்கிய ஒரே படம்.

இரட்டை வேடத்தில் நடித்த ரஜினிக்கு ராதாவும், நதியாவும் ஜோடியாக நடித்த படம்.

நதியா, ரஜினியுடன் நடித்த ஒரே படமும் இதுதான். சொக்க வைக்கும் பாடல்கள், இதன் சிறப்பு. பாடல்களுக்காக ஓடிய படம்.

ராஜாவின் பார்வையிலே

விஜய்யும், அஜித்தும் சேர்ந்து நடித்த ஒரே சினிமா இது, என்பதைத்தவிர இந்த படத்தில் சொல்லிக்கொள்ளும் படியாக எதுவும் இல்லை.

மாமன்னன்

உதயநிதி நடிக்கும் படம். அமைச்சராகி விட்டதால், உதயநிதி நடிக்கும் கடைசிப்படம், இது என்பது சிறப்பு.

– பி.எம்.எம்.

Comments (0)
Add Comment