உடன்பால் – கனவை நசுக்கும் நனவு!

சந்தியா ராகம், வீடு போன்ற படங்கள் இப்போது ரசிக்கப்படுமா? அவை போன்று எளிய பொருட்செலவில் தயாரான, அதேநேரத்தில் கனம் நிறைந்த கதை சொல்லல் கொண்ட படங்கள் வெகு அபூர்வம்.

மிக அரிதாக நிகழ்கிற அந்த அற்புதத்தை மீண்டுமொரு முறை காண வைத்திருக்கிறது ‘உடன்பால்’.

சோனி லிவ் தளத்தில் இது காணக் கிடைக்கிறது.

நசுக்கும் நனவு!

தன் வசமிருந்த சிடி கடையை மகன் பரமனிடம் (லிங்கா) ஒப்படைத்துவிட்டு வீட்டில் பொழுதைக் கழித்து வருகிறார் விநாயகம் (சார்லி). அவரது மனைவி மறைந்து 5 ஆண்டுகள் ஆகிறது.

மருமகள் பிரேமாவும் (அபர்ணதி), பேரனும் (தர்ஷித் சந்தோஷ்) காட்டும் அன்பில் நனைகிறார். விநாயகத்தின் சகோதரியும் (தனம்) அதே வீட்டில்தான் வசிக்கிறார்.

திடீரென்று ஒருநாள், தாயின் நினைவுதினத்தையொட்டி படையல் போட ஏற்பாடு செய்கிறார் பரமன். வெளியூரில் இருந்து விநாயகத்தின் மகள் கண்மணி (காயத்ரி சங்கர்); மருமகன் முரளி (விவேக் பிரசன்னா); பேத்தி நிலா (மான்யஸ்ரீ) வருகை தருகின்றனர்.

இளைய மகன் பார்த்தி (தீனா), தன் பிரியாணி கடை வியாபாரத்தைக் கவனித்துவிட்டு வருவதாகத் தெரிவிக்கிறார்.

படையல் போட்டு முடிந்ததும், அந்த வீட்டை விற்பது குறித்து விநாயகத்திடம் கண்மணியும் பரமனும் பேசுகின்றனர். கடன் தங்கள் கழுத்தை நெறிப்பதாக அவரிடம் மன்றாடுகின்றனர்.

ஆனால், வீட்டை விற்க மாட்டேன் என்று தடாலடியாகப் பேசும் விநாயகம், வள்ளலார் காம்ப்ளெக்ஸ் வரை சென்றுவிட்டு வருவதாகக் கூறி கிளம்புகிறார்.

சில நிமிடங்கள் கழித்து, அந்த வள்ளலார் காம்ப்ளெக்ஸ் இடிந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகின்றன. விநாயகத்தின் மொபைலை தொடர்புகொள்ள முடியாமல் போகவே, அவரைத் தேடிச் செல்கிறார் பரமன். எந்த தகவலும் தெரியவில்லை.

அதேநேரத்தில், காம்ப்ளெக்ஸ் இடிபாடுகளில் சிக்கி மரணித்தவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் தருவதாக அறிவிக்கிறது அரசு. அதையடுத்து, அந்த இழப்பீட்டை எப்படிப் பங்கு பிரிக்கலாம் என்று கண்மணியும் பரமனும் கணக்கு போட ஆரம்பிக்கின்றனர். அதாவது, விநாயகம் இறந்துவிட்டதாக எண்ணத் தொடங்குகின்றனர்.

இந்தச் சூழலில், மீண்டும் வீடு திரும்புகிறார் விநாயகம். பணத்தேவைகளைச் சமாளிக்க முடியாமல் திணறும் அவரது குடும்பத்தினர் அதனை எவ்வாறு நோக்குகின்றனர்? அதன்பின் என்ன நடக்கிறது என்பதைச் சொல்கிறது ‘உடன்பால்’.

வாழ்வில் தொடர்ச்சியாக கஷ்டங்களை அனுபவிக்கும்போது மனதில் பல கனவுகள் அரங்கேறும். அவற்றில் எவையெல்லாம் நனவாகும் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். அப்படி கனவை நசுக்கும் நனவைப் பேசுகிறது இப்படம்.

அபாரமான அவல நகைச்சுவை!

‘ப்ளாக் ஹ்யூமர்’ எனப்படும் அவல நகைச்சுவையை ‘கேங்க்ஸ்டர்’ பின்னணியிலேயே பார்த்துப் பார்த்து அலுத்துவிட்டது. அதனை நேர்த்தியாக மரணம் குறித்த ஒரு உரையாடலில் வெளிப்படுத்தியதில் ‘ஆஹா’ சொல்ல வைக்கிறார் இயக்குனர் கார்த்திக் சீனிவாசன்.

திரைக்கதையின் 95 சதவீதப் பகுதி ஒரு வீட்டினுள் நிகழ்கிறது. ஆனாலும், எந்தவொரு இடத்திலும் படம் போரடிக்கவில்லை; ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபருக்கு அதில் எந்தளவுக்குப் பங்கிருக்கிறதோ, அதே அளவுக்கு முதன்மை பாத்திரங்களில் நடித்தவர்களுக்கும் உள்ளது.

லிங்கா – அபர்ணதி, விவேக் பிரசன்னா – காயத்ரி என்று இரு ஜோடிகளும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கின்றனர்.

இழப்பீடு பணத்தைப் பங்கு பிரிப்பது பற்றிப் பேசும்போதும், சார்லிக்கு மேக்அப் இடும்போதும் நம்மை வாய்விட்டு சிரிக்க வைக்கிறார் காயத்ரி. விவேக் பிரசன்னா, படம் முழுக்க அதே வேலையாகத் திரிகிறார்.

தொடர் வசனங்களாலும் அதீத பாவனைகளாலும் காயத்ரி அசத்துகிறார் என்றால், மிகச்சிறிய உணர்வு மாற்றங்கள் மூலமாக கவனம் ஈர்க்கிறார் அபர்ணதி.

அதேபோல, லிங்கா உணர்வுகளை வெளிக்காட்டுவதில் எரிமலையாக இருக்க, விவேக் பிரசன்னாவோ ’வடிவேலு’ பாணியில் படம் ’நாங்க மட்டும் எப்புடி’ என்பது போல படம் முழுக்க வந்து போயிருக்கிறார்.

நால்வரையும் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் தொடர்ச்சியாகப் பார்க்கிறோம் என்பதே இவர்களது நடிப்புத்திறனுக்கான பாராட்டு.

விநாயகமாக வரும் சார்லிக்கு அதிக காட்சிகள் இல்லை; ஆனாலும், இயல்பாக நடிப்பது இப்படித்தான் என்று கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.

கடந்த பத்தாண்டுகளில் ‘கிருமி’, ‘மாநகரம்’ உட்பட பல படங்களில் நம்மைப் பிரமிக்க வைத்தாலும், அவ்வப்போது மட்டுமே தன் தரிசனம் காட்டுகிறார் சார்லி. அதேபோல, கேபிஒய் தீனாவும் சீரியசான ஒரு பாத்திரத்தில் மிக எளிதாக ‘செட்’ ஆகிறார்.

குழந்தைகள் தர்ஷித் சந்தோஷ், மான்யஸ்ரீ நேருக்கு நேர் சந்திக்கும் காட்சி பல படங்களில் நாம் பார்த்தது; ஆனாலும் ரசிக்க வைக்கிறது.

’நக்கலைட்ஸ்’ தனம், மயில்சாமியின் இருப்பு மட்டுமல்லாமல், சிடி வாங்கும் பெருசாக வரும் புஜ்ஜிபாபுவும் கூட நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்.

பெயிண்ட் உதிர்ந்த சுவர்கள், உடைந்த பர்னிச்சர்கள், கலைந்து கிடக்கும் பொருட்கள் போன்றவற்றைக் கொண்டே தயாரிப்பு வடிவமைப்பில் யதார்த்தம் கூட்டியிருக்கிறார் மாதவன்.

அந்த வீடு மொத்தமுமே ‘செட்’ என்றால், அதற்காகவே அவரது குழுவினரைத் தனியாகப் பாராட்ட வேண்டும்.

ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபரின் உழைப்பு, கார்த்திக் சீனிவாசனின் திரைக்கதை எந்த இடத்திலும் நாடகமாகிவிடக் கூடாது என்பதில் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறது.

படத்தொகுப்பாளர் மதன் மேற்கொண்டிருக்கும் சீரிய பணியால், எந்தவொரு இடத்திலும் காட்சிக்கான உணர்வு சிதையவில்லை.

ஒளிப்பதிவு, படத்தொகுப்புக்கு ஒருபடி மேலாகவே தன் வேலையைக் காட்டியிருக்கிறது சக்தி பாலாஜியின் பின்னணி இசை; அது, திரையில் தோன்றுபவர்களின் பாவனைகளோடு ஒன்றிணையும்போது, சிரிக்கவே கூடாது என்று கங்கணம் கட்டியவர்களும் கூட வாய்பிறந்து சிரித்துவிடுவார்கள்.

முதிய தலைமுறையை அடுத்த தலைமுறை எதிர்கொள்வதில் இருக்கும் அவலத்தை மட்டுமே சொல்லியிருந்தால், முழுப்படமும் வெறுமையானதாக மாறியிருக்கும்.

ஆனால், அதை நகைச்சுவையாக மாற்றியதில் தெரிகிறது இயக்குனர் கார்த்திக் சீனிவாசனின் அபாரமான தனித்துவம்.

பணம் எப்படி சாதாரண மனிதர்களைக் கொடூரக் குற்றவாளிகளை விடவும் மோசமான மனநிலையில் கொண்டுபோய் நிறுத்துகிறது என்பதைச் சொன்னவிதம் அபாரம்.

அதனை நேரடியாக வசனங்களில் சொல்லாமல், பாத்திரங்களின் மன உணர்வுகளை நமக்குப் புரிய வைத்திருப்பது ரொம்பவும் புதியது.

மிக முக்கியமாக, கிளைமேக்ஸ் ஷாட், ’இந்த படத்தை எப்படி முடிக்கப்போறாங்களோ’ என்ற பதைபதைப்புக்கு அற்புதமாகப் பதில் சொல்லியிருக்கிறது.

வெறுமனே தனித்துவமான ‘ஸ்கிரிப்ட்’ என்பதோடு நின்றுவிடாமல், மிக சீரியசான விஷயத்தை சிரிக்கச் சிரிக்கச் சொல்வதில் முன்மாதிரிகள் பெரிதாக இல்லாதபோதும் அப்பாதையில் சென்று ஜெயித்திருக்கிறார் இயக்குனர். நிச்சயமாக, 2022ஆம் ஆண்டின் திரை முத்துகளில் இவரும் இடம்பெறுவார்.

வலி தரும் யதார்த்தம்!

திரைக்கதை ட்ரீட்மெண்டுக்கும் இறுதிக்காட்சிக்கும் நிச்சயம் சம்பந்தமில்லை. ஆனால், யதார்த்தம் நிறைந்திருக்க வேண்டுமென்பதில் மெனக்கெட்டிருக்கிறது ‘உடன்பால்’ படக்குழு. கூடவே, டைட்டில் வார்த்தைக்கான அர்த்தத்தையும் உரக்கப் பேசியிருக்கிறது.

ஒரு மனிதன் பிறக்கும்போது கூடும் கூட்டத்தைவிட, இறப்பின்போது மிக அதிகமாக இருக்க வேண்டும்.

சொந்தபந்தம், நட்பு வட்டம் எல்லாமே அத்திசை நோக்கியே முகிழ்க்கின்றன.

ஆனாலும், வாழ்வின் மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும் இலக்கு மறைந்துபோகிறது. இந்த படத்தைப் பார்க்க, இந்தவொரு விஷயம் மட்டுமே போதுமானதாக இருக்கிறது.

இந்த கதையில் முதன்மை பாத்திரங்களைத் தவிர நான்கைந்து பேர் மட்டுமே வெளியுலகைச் சேர்ந்தவர்களாக வந்து போயிருக்கின்றனர்.

அவர்களில், மல்லிகா எனும் பெண் பத்திரம் பற்றிய குறிப்புகள் மட்டுமே கொஞ்சம் குழப்பம் தருகின்றன.

அதேபோல, தீனா ஏன் தாமதமாகத் திரையில் தோன்றுகிறார் என்பதற்கான காரணத்தையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லவில்லை.

சார்லி அந்த காம்ப்ளெக்ஸில் வேலை செய்தாரா இல்லையா, லிங்காவின் மனைவியாக வரும் அபர்ணதி தனத்தின் மகளா என்ற கேள்விகளுக்கும் பதில் இல்லை.

படம் பார்க்க இவையெல்லாம் தடைகள் கிடையாது என்றபோதும், இவற்றை தெளிவுபடுத்தியிருக்கலாமே என்பதுதான் நமது ஆதங்கம்.

நலன் குமாரசாமியின் ’சூது கவ்வும்’, சிங்கிதம் சீனிவாசராவின் ‘மகளிர் மட்டும்’ உட்பட மிகச்சிறந்த திரைப்படைப்புகளுக்கு மரியாதை செலுத்தும் காட்சிகளும் இதில் உண்டு.

நிச்சயமாகத் திரையரங்குகளில் வந்தால், ஒரு ‘கல்ட்’ அந்தஸ்தை ‘உடன்பால்’ பெறும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், வசூல் ஈட்டியிருக்குமா என்றால் ‘ப்ச்’ என்றுதான் உதட்டைப் பிதுக்க வேண்டும்!

-உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment