‘கட்டபொம்மனும் நானும்’ – சிவாஜிகணேசன்!

“ஏழு வயதிருக்கும், திருச்சியின் ஒருபகுதியான சங்கலியாண்டபுரத்தில் என் பெற்றோருடன் வசித்து வந்தேன். அந்த நாளிலேயே எனக்குப் படிப்பு என்றால் கசக்கும்.

நாடகம், கூத்து என்றால் இனிக்கும். அந்தச் சமயத்தில் கூத்து நடத்தும் குழு எங்கள் ஊரில் முகாமிட்டிருந்தது.

இரவு ஊரடங்கிய பின்னர் கூத்து ஆரம்பித்து நடத்துவார்கள். போலீசாருக்குப் பயந்து பயந்து தான் கட்டபொம்மன் கதையை நடத்துவார்கள்.

நாட்டுப் பாடலாக ஒரே மாதிரியான மெட்டில் பாட்டுக்கள் அமைந்திருக்கும்.
நான் பார்த்த முதல் கூத்து அதுதான்.

இரவு கூத்து ஆடியவர்கள் காலையில் தண்டலுக்கு வருவார்கள்.
அப்போதெல்லாம் காசுக்கு அவ்வளவாக மதிப்புக் கிடையாது. அரிசி, பருப்பு, புளி, எண்ணெய் இப்படி எது கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்கள்.

அப்படி வந்தவர்களில் ஒருவரை நான் சிநேகம் பிடித்துக் கொண்டேன். அவர்களுடைய கூத்தில் எனக்கு ஏதாவது ஒரு வேஷம் வாங்கித் தரும்படிக் கேட்டேன். அவர் மனம் இறங்கினார்.

அவருடைய சிபாரிசு காரணமாக கட்டபொம்மனை எதிர்க்கும் வெள்ளையர் சிப்பாய்களில் ஒருவனாக நடிக்க எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது.

அப்போதும் கட்டபொம்மன் வீரர்களில் ஒருவனாக வரமுடியவில்லையே என்று எனக்கு மனக்குறை தான்.

நான் முதன்முதலில் மேடையேறிய சந்தர்ப்பம் அது தான். நான் பார்த்த கட்டபொம்மன் கூத்து தான் என்னைக் கலையுலகுக்கு இழுத்துவிட்டது என்று சொல்லலாம்.’’

– 10.1.1960 ல் வார இதழ் ஒன்றிற்கு சிவாஜி அளித்த பேட்டியின் ஒரு பகுதி.

——–
‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படப்பிடிப்பில் சில ஆச்சர்யங்கள்!

கட்டபொம்மன்- படத்துக்கான பல காட்சிகள் எடுக்கப்பட்டது ஜெய்ப்பூரில். சென்னையிலிருந்து அதற்காக ஜெய்ப்பூர் சென்றவர்கள் சுமார் 150 பேர்.
அவர்களுக்கான போர் வீரர் ஆடைகள், மற்றும் புடவைகள் மட்டும் ஒரு வாகனம் நிறைய எடுத்துச் செல்லப்பட்டன.

பத்து நாட்களுக்கு மேல் அவர்கள் ஜெய்ப்பூரில் தங்கியதற்கு மட்டும் ஐந்து லட்சம் ரூபாய் செலவாகியிருக்கிறது.

கட்டபொம்மனைப் போன்ற சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பற்றிப் படம் தயாரித்தால், அரசு தரப்பில் உதவுவதாக மத்திய அரசு தரப்பில் சொல்லப்பட்டது.

படத்தை எடுத்த பத்மினி பிக்சர்ஸ் மத்திய அரசிடம் உதவி கேட்டபோது, 200 குதிரைகளும், ஆயிரம் சிப்பாய்களாக நடிப்பவர்களையும் தர ஒப்புக் கொண்டிருக்கிறது.

யுத்தக் காட்சிக்குத் தேவையான பீரங்கிளையும், வெடி மருந்துகளையும் அரசே தந்து உதவியிருக்கிறது.

தண்ணீருக்குச் சிக்கலாக இருந்த ஜெய்ப்பூரில் அங்கு நடிப்பவர்களுக்குத் தண்ணீர் எடுத்துச் செல்லவே அதிகம் செலவாகியிருக்கிறது.
யானைகளுக்கும் ஒரு நாள் நடிக்க அதிகப் பணம் கொடுத்துச் சமாளித்திருக்கிறார்கள்.

கட்டபொம்மன் படை வீரர்களாக நடித்தவர்கள் வட இந்தியர்கள்.
அவர்கள் தமிழில் ‘வீர வேல்.. வெற்றி வேல்’ என்று முழக்கமிட வேண்டும். பலருக்கும் அந்த முழக்கம் வாய்க்குள் நுழையவில்லை. ‘வாழ்க’வும் நுழையவில்லை.

அதனால் ‘ஜிந்தாபாத்’ என்றும், ஜே’ என்றும் அவர்கள் முழங்கச் சொல்லி- அட்ஜெஸ்ட் பண்ணியிருக்கிறார்கள்.

இன்னொரு பிரமாண்டக் காட்சியில் தமிழ்ப் பெண்களுக்குப் பதிலாக ராஜபுத்திரப் பெண்களுக்குச் சேலை அணிவித்து நடிக்க வைத்திருக்கிறார்கள்.

மொத்தம் மூன்று காமிராக்கள் மூலம் பதினாறாயிரம் அடிக்குப் படம் எடுக்கப்பட்டு, அதிலிருந்து ‘எடிட்’ செய்யப்பட்டு தயாராகி இருக்கிறது ‘வீர பாண்டிய கட்டபொம்மன்’ வண்ணத்திரைப்படம்.

Comments (0)
Add Comment