எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு படத்தைப் பார்க்கச் செல்வதென்பது மிகவும் நல்ல விஷயம். அதற்கேற்றவாறு, அந்த படம் நமக்கு ஆச்சர்யங்களை அள்ளித் தந்தால் பிரமிப்பு நிச்சயம்.
அப்படியொரு ஆச்சர்யத்தை, நம்பிக்கையைத் திரையில் ஓடத் தொடங்கிய மிகச்சில நிமிடங்களிலேயே தந்து விடுகிறது பிரபு சாலமனின் ‘செம்பி’. கூடவே, படம் முடிந்தபிறகும் அந்த நம்பிக்கை தொடருமா என்ற கேள்வி அலைஅலையாகப் பெருகுகிறது.
நம்பிக்கை தரும் கதையாடல்!
மலையோரக் கிராமமொன்றில் ஒரு பாட்டியும் பேத்தியும் வசித்து வருகின்றனர். அந்த பேத்தியின் பெயர் தான் செம்பி. பத்து வயது சிறுமியான செம்பிக்கு ‘டாக்டர்’ ஆக வேண்டுமென்று ஆசை.
ஒருநாள் பாட்டி எடுத்த மலைத்தேனை குடுவையில் அடைத்து எடுத்துச் செல்கிறார் செம்பி. வழியில், மூன்று வக்கிரமான இளைஞர்களால் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகிறார்.
இன்ஸ்பெக்டரின் விசாரணையில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகத் தெரிய வருகிறது.
பாட்டியிடம் இன்ஸ்பெக்டர் சமரசம் பேச, பாட்டி புகாரை வாபஸ் வாங்க மறுக்க, அங்கு நடக்கும் மோதலில் இன்ஸ்பெக்டர் படுகாயமடைகிறார். தன் வீட்டைத் துறந்து செம்பியுடன் தப்பிச் செல்கிறார் பாட்டி. இருவரும் ஒரு தனியார் பேருந்தில் ஏறி திண்டுக்கல் கிளம்புகின்றனர்.
வழியில், இருவரையும் பிடிக்க அடுத்தடுத்த கண்ணிகள் காத்திருக்கின்றன. அதையும் மீறி அவர்கள் போலீஸ் பிடியிலிருந்து தப்பித்தனரா, உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டார்களா என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது ‘செம்பி’.
பாலியல் அத்துமீறலை நிகழ்த்தியவர்கள்தான் பதுங்க வேண்டுமே தவிர, பாதிப்புக்குள்ளானவர்கள் அவமானப்பட்டு கூனிக் குறுக வேண்டியதில்லை என்பதைச் சொல்வதே ‘செம்பி’யைக் கொண்டாடப் போதுமானதாக இருக்கிறது.
பாலியல் குற்றங்கள் தொடர்பான செய்திகளை எதிர்கொள்ளும்போது, சம்பந்தப்பட்ட பெண்ணின் தரப்பைக் குறை சொல்லாமல் அவற்றை எப்படி அணுக வேண்டுமென்று சொன்ன வகையில் நம்பிக்கையளிக்கும் கதையாடலைக் கொண்டிருக்கிறது. அது ‘ஓவர்டோஸ்’ ஆகும்போதுதான் கொஞ்சம் நெளிய வேண்டியிருக்கிறது.
சரளாவுக்கு ஜே!
‘செம்பி’யின் அடையாளமே கோவை சரளாவின் இருப்புதான். அதற்கேற்ப, ரசிகர்களிடம் நற்பெயரை அள்ளிக் கொள்கிறது அவரது நடிப்பு.
மொட்டையிட்டு வளர்ந்த தலை முடி, முகத்தில் தடிப்பேறிய சதைத் திரள் என்று உடலுழைப்பை வாழ்வாகக் கொண்ட ஒரு மூதாட்டியாகவே தோற்றமளித்திருக்கிறார்.
பேத்திக்கு நடந்த கொடுமையை எவரிடமும் பகிரமுடியாமல் மருத்துவமனைக்குள் அல்லாடும் காட்சியில் ‘ஜே’ சொல்ல வைக்கிறார்.
கோவை சரளாவின் பேத்தியாக நடித்த நிலா, மிரட்சியைக் கண்களில் வெளிப்படுத்தியிருப்பது அழகு. மிகத்துணிச்சலாக இப்பாத்திரத்தை ஏற்றிருப்பதற்கு நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.
‘மைனா’ மற்றும் இன்னபிற படங்களைப் போலவே, இதிலும் வசன உச்சரிப்பினால் சிரிப்பூட்டுகிறார் தம்பி ராமையா.
ஞானசம்பந்தன், பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத் உட்பட பலர் ஓரிரு ஷாட்களில் வந்து போகின்றனர்.
பேருந்து பயணத்தில் இடம்பெறும் பயணிகளாகப் பெரும்பாலும் புதுமுகங்களே தோன்றியிருக்கின்றனர். அவர்களில் ‘டா’ போட்டு விளிப்பவர், சவடால் பேசும் உள்ளூர் அரசியல்வாதி உட்படப் பலர் நம் கவனம் கவர்கின்றனர்.
வழக்கறிஞராக வரும் அஸ்வின் குமார் பாத்திரம் முற்றிலும் செயற்கைத்தனம் நிரம்பியதாக இருக்கிறது.
அதன் மூலமாகவே திரைக்கதை அடுத்தகட்டத்தை எட்டுவதை என்னவென்று சொல்வது? ஒரு யதார்த்தமான பழங்குடியின மூதாட்டியின் வாழ்வுப் போராட்டம் சினிமாத்தனம் நிறைந்ததாக மாறுவது அந்த கணத்தில் இருந்துதான்.
மலைப்பிரதேசத்து காட்சிகளிலும், பேருந்து – கார் சேஸிங் காட்சிகளிலும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் எம்.ஜீவன். பேருந்து விபத்து காட்சியில் இடம்பெறும் ‘மினியேச்சர்’ நுட்பம்தான் நம்மை அதிருப்திக்குள்ளாக்குகிறது.
பாடல்கள் தாண்டி உணர்வுப்பூர்வமான காட்சிகளில் அழுத்தம் கூட்டியிருக்கிறது நிவாஸ் பிரசன்னாவின் பின்னணி இசை.
படத்தொகுப்பைக் கையாண்டிருக்கும் புவன், இடைப்பட்ட ஒன்றரை மணி நேரக் காட்சிகளில் மட்டும் ‘கத்திரி’ போட மறந்திருக்கிறார்.
செம்பியின் வீடு, அரசியல் கட்சி கூட்டம், பேருந்து பயணம், போக்சோ நீதிமன்றக் காட்சிகளில் மிகக்கடுமையாக உழைத்திருக்கிறது கலை இயக்குனர் விஜய் தென்னரசுவின் குழு,
ஒரு நேர்த்திமிக்க கலைப்படைப்பாக ஆகியிருக்க வேண்டிய ஒரு கதைக்கருவை எடுத்துக் கொண்டாலும், அதனைப் புரியும்படி பார்வையாளர்களுக்குச் சொல்கிறேன் பேர்வழி என்று நீர்த்துப் போக வைத்திருக்கிறார் திரைக்கதை எழுதியிருக்கும் பிரபு சாலமன். அதையும் மீறி படம் நம்மை ஈர்க்கக் காரணம் காட்சியாக்கம் மட்டுமே.
‘ஓவர்’ பிரச்சாரம்!
அன்பை விதைத்தால் அன்பை அறுவடை செய்யலாம் என்று சொன்ன வகையில் கவனிக்கத்தக்க கதையாக மாறியிருக்கிறது ‘செம்பி’.
அதனைக் காட்சிப்படுத்திய வகையில் பல படங்கள் பார்த்த உணர்வை உருவாக்குவது நிச்சயம் மைனஸ் தான்.
முதல் அரை மணி நேர காட்சியனுபவம், மலைவாழ் மக்களின் துயரமிகு வாழ்வியலைக் காணப் போகிறோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
அதற்கடுத்து பேருந்தில் பாட்டியும் பேத்தியும் பயணிப்பது இது இன்னொரு ‘மைனா’வா என்ற கேள்வியை எழுப்புகிறது. அதன்பிறகு தொண்ணூறுகளில் வந்த ‘ஸ்பீட்’ படத்தை நினைவூட்டும் வகையில் ஆக்ஷன் காட்சிகள் திரையில் விரிகின்றன.
படம் முடிவடையும்போது, தெய்வீகத்தை முன்னிறுத்தும் வகையில் காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
தொடக்கத்திலும் முடிவிலும் இருக்கும் அரை மணி நேர காட்சிகளைத் தவிர்த்துப் பார்த்தால், இடைப்பட்ட நேரத்தில் வரும் காட்சிகள் கடந்த 20 ஆண்டுகளில் நடந்த மிக முக்கியமான சமூக அரசியல் நிகழ்வுகளைப் பேசும் பட்டிமன்றமாகவே மாறியிருக்கிறது.
அது போதாதென்று குரங்கணி தீ விபத்து, பொள்ளாச்சி பாலியல் வன்முறை உட்படப் பல செய்திகளை ‘ஊறுகாய்’ போல காட்சிகளுக்குப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன்.
பெண்களைப் போற்றுவது குறித்து கவித்துவமான காட்சிகள் என்றும் நம்பி காத்திருந்தால், ஒரு மேடைப் பிரச்சாரத்தை கேட்பது போலவே ‘செம்பி’ திரைக்கதை அமைந்திருக்கிறது.
காவல் துறையைக் கொண்டாடுவது போலவும் எதிர்மறையாக விமர்சிப்பது போலவும் நிறைய படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்தச் சூழலில், தொண்ணூறுகளில் வந்த விஜயகாந்த் படங்கள் போலவே காவல் துறையினரின் பிம்பத்தை ‘கச்சாமுச்சா’வென்று நொறுக்கும் காட்சிகள் இதில் உண்டு.
இந்த கதைக்குள் அஸ்வின் பாத்திரம் ஏன் நுழைந்தது, அதற்கு செம்பியை எப்படித் தெரியும் என்பது உட்பட பல கேள்விகளுக்கு திரைக்கதையில் பதில் இல்லை. கிட்டத்தட்ட கடவுள் போலவே அப்பாத்திரத்தை நடமாட விட்டிருக்கிறார் இயக்குனர்.
அதுவே, சமீபத்தில் பத்திரிகையாளர்களின் சர்ச்சைக்குரிய கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் இயக்குனர் திணறவும் காரணமானது.
அந்த சர்ச்சைக்குத் திரையில் முற்றுப்புள்ளி வைக்க முயற்சித்திருக்கிறார் பிரபு சாலமன். அதுவே, மூன்று புள்ளிகளாக மாறி ‘தொடரும்’ என்ற தொனியுடன் தோற்றமளிக்கிறது.
ஒருவேளை திரைக்கதை முழுவதும் சரளாவின் தோள்களில் ஏறியிருந்தால், நிச்சயம் இப்படம் வழங்கும் அனுபவம் வேறுவிதமாக இருந்திருக்கும்.
ஏன், அஸ்வின் ஏற்ற பாத்திரத்தை ஒரு பெண்ணாக மாற்றியிருக்கலாம்; அது க்ளிஷேவாக இருக்குமென்று நினைத்தால், அப்பாத்திரத்தின் ஹீரோயிசத்தை குறைத்திருக்கலாம்.
அதனை விடுத்து, பி மற்றும் சி சென்டர்களில் ’கிளாசிக்’ படம் கொண்டாடப்படாது என்ற எண்ணமே ‘செம்பி’ அடைந்திருக்க வேண்டிய உயரத்தைச் சரித்திருக்கிறது.
- உதய் பாடகலிங்கம்