– மருத்துவர்கள் தகவல்
இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப்பண்ட் டெல்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டிச் சென்றார்.
அப்போது டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர் பகுதி அருகே திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலைத் தடுப்புகளை உடைத்துக் கொண்டு சில அடி தூரம் சென்று நின்றது. இந்த விபத்தில் ரிஷப்பண்ட் படுகாயம் அடைந்தார்.
அவரது தலை, முதுகு, கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. சாலைத் தடுப்பில் மோதிய வேகத்தில் காரில் தீப்பிடித்தது. எனவே, கார் கண்ணாடியை உடைத்து அவர் வெளியே வந்தார்.
காரில் தீப்பிடித்ததால் முற்றிலும் எரிந்து நாசமானது. காரில் இருந்து ரிஷப்பண்ட் உடனே வெளியேறியதால் காயத்துடன் தப்பினார்.
விபத்து குறித்த தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். ரிஷப் பண்டை மீட்டு அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ரிஷப் பண்டுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலை காயங்களுக்கு கட்டு போடப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் நெற்றி, முதுகு மற்றும் காலில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்காக பண்ட் டெல்லிக்கு விமானம் மூலம் அனுப்பப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே மேக்ஸ் மருத்துவமனை மருத்துவர்களுடன் இணைந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில்,
பண்டுக்கு நெற்றியில் இரண்டு வெட்டுகள், வலது முழங்காலில் தசைநார் கிழிந்துள்ளதாகவும் வலது மணிக்கட்டில் காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு, கணுக்கால், கால் மற்றும் முதுகு பகுதியில் சிராய்ப்புகள் ஏற்பட்டுள்ளன என கூறியுள்ளது.
அதோடு, உயிருக்கு ஆபத்தான காயம் எதுவும் ஏற்படாமல் பண்ட் நன்றாக இருக்கிறார். அவருடன் அவரது தாயார் மருத்துவமனையில் இருக்கிறார். பண்ட் தசைநார் காயத்தில் இருந்து குணமடைய குறைந்தது மூன்று முதல் ஆறு மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.