– குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்
ஐதராபாத்தில் உள்ள நாராயணம்மா அறிவியல் தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “இன்றைய உலகில் முன்னெப்போதும் கண்டிராத பிரச்சனைகளுக்கும் விரைவான தீர்வைக் காண, பொறியியலின் பங்கு மிகவும் முக்கியமானது.
பொறியியலாளர்களின் கண்டுபிடிப்புகளும், அவர்கள் உருவாக்கும் தொழில்நுட்பங்களும் மக்கள் நலனைச் சார்ந்ததாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும்.
தொழில்நுட்பத்தின் பலன்கள் ஏழை எளிய மக்களையும் சென்றடைவதுடன், சமூக நீதிக்கான கருவியாக பயன்பட வேண்டும்.
சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை என்னும் மந்திரத்தை இந்தியா உலகின் முன் வைத்துள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எத்தனால் கலந்த எரிபொருள், பசுமை ஹைட்ரஜன் ஆகியவற்றின் மூலம் புதிய முயற்சிகளை நாம் எடுத்து வருகிறோம். இந்த முன்முயற்சிகள் மூலம் சிறந்த முடிவுகளை நாம் பெறலாம்.
பெரிய நிறுவனங்களின் தலைவர்களாக பெண்கள் பரிமளித்து வருகின்றனர். தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், விமானப் போக்குவரத்து, எந்திர வடிவமைப்பு, கட்டுமானப்பணிகள், செயற்கை நுண்ணறிவு உள்பட அனைத்து துறைகளிலும் பெண்கள் பெரிய அளவில் பங்காற்றி வருகின்றனர்.
தொழில்நுட்பவியலாளராக இளம் பெண்களை உருவாக்குவதன் மூலம் வலுவான பொருளாதாரத்தை நாடு எட்ட முடியும்” எனத் தெரிவித்தார்.