தாயின் மறைவையொட்டி பிரதமர் உருக்கம்
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி, திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 99-வது வயதில் இன்று காலை உயிரிழந்தார்.
பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளத்தில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்காக செல்ல இருந்தார். தாயார் ஹீராபென் மறைவையடுத்து பிரதமர் மோடி அகமதாபாத்துக்கு விரைந்தார்.
அங்கு, மறைந்த தனது தாயார் ஹீரா பென்னுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். மருத்துவமனையில் இருந்து தாயாரின் உடலை பிரதமர் மோடி சுமந்து சென்றார். ஹீரா பென்னின் உடல் காந்தி நகரில் உள்ள பிரதமர் மோடியின் சகோதரரின் வீட்டில் உடல் வைக்கப்பட்டது.
தனது தாயாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்த பிரதமர் மோடி காலில் விழுந்து வணங்கி அஞ்சலியை செலுத்தினார். இதையடுத்து, இறுதிச் சடங்கிற்காக மறைந்த ஹீரா பென்னின் உடல் காந்தி நகரில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு, பிரதமர் மோடி இறுதிச் சடங்குகளை செய்தார். தொடர்ந்து, தனது தாயின் சிதைக்கு பிரதமர் மோடி தீ மூட்டினார்.
முன்னதாக தனது தாயார் மரணம் தொடர்பாக பிரதமர் மோடி உருக்கமான பதிவொன்றை பதிவிட்டிருந்தார்.
அதில், ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு, கடவுளின் காலடியைச் சேர்ந்திருக்கிறது. ஒரு துறவியின் பயணம், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளம், மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை ஆகியவை ஐக்கியமாவதை என் தாயாரிடம் உணர்ந்திருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.