அன்னை ஜானகி எம்ஜிஆர்-100: சில நினைவுகள்!

நவம்பர் 30 ஆம் தேதி அன்று தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் மேலான தலைமையில் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தேறி இருக்கிறது அன்னை ஜானகி அம்மையாரின் நூற்றாண்டுத் துவக்க விழா.

அந்த விழாவில் வெளியிடப்பட்ட அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவுச் சிறப்பு மலரில் இருந்து சில பகுதிகளை அடுத்தடுத்து நமது தாய் இணைய இதழில் வெளியிட இருக்கிறோம்.

மெரினா புக்ஸ் வெளியிட்டுள்ள அந்தச் சிறப்பு  மலரில் அதனுடைய முதல் பகுதியாக ‘அன்னை ஜானகி 100’ என்கிற தலைப்பில் இடம்பெற்ற கட்டுரை உங்கள் பார்வைக்கு:

அன்னை ஜானகி 100

வைக்கம் நாராயணி ஜானகி என்கிற பெயரைத் தான் சுருக்கி வி.என். ஜானகி என்று  பலரும் அழைத்தார்கள்.

அவர் பிறந்தது கேரளா மாநிலத்தில் உள்ள வைக்கம் என்கிற ஊரில் பொன்மனச் சேரி இல்லத்தில். ஜானகி அம்மையார் பிறந்தது 1923ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி.

இவருடைய தந்தை ராஜகோபால் அய்யர். தாயார் வைக்கம் நாராயணி அம்மாள்.  ராஜகோபாலின் பூர்வீகம் தமிழகத்தில் உள்ள கும்பகோணம்.

ராஜகோபாலின் சகோதரர் பாபநாசம் சிவன் நாடறிந்த பிரபலமான பாடலாசிரியர்.

தமிழ்த் தியாகய்யர் என்று அழைக்கப்பட்டவர். ராஜகோபால் அய்யரும் பல திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் பள்ளிப்படிபை முடித்தவர் ஜானகி. அத்துடன் பல மொழிகளைச் சொந்த விருப்பத்தின் பேரில் கற்றுக் கொண்டார்.

அன்னை ஜானகிக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராட்டியம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் புலமை உண்டு.

கேரளாவிலிருந்து ஜானகி தனது 12வது வயதில், 1936 ஆம் ஆண்டில், தன் தாயாருடன் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தார்.

பரத நாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் உள்ளிட்ட தென்னிந்தியக் கலைகளில் பயிற்சிபெற்ற ஜானகி, பிரபல திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான கே.சுப்ரமணியம் நடத்தி வந்த ‘நிருத்யோதயா’ நாட்டியப் பள்ளியில் முறைப்படி நடனம் பயின்றவர்.

“பொழுது போகவில்லையே என்று சும்மா இருக்கும்போது தான் நமது மனம், தேவையில்லாத விஷயங்களைத் தேடிப் போகிறது. அதைத் தவிர்க்க இது நல்ல வழி கலைகளைக் கற்பது தான்” என்று பல்வேறு கலைகளையும் நேசிக்கச் சொன்னவர் ஜானகி.

பல மொழிகளைத் தெரிந்திருந்த ஜானகி தன்னைச் சந்திக்க வருபவர்பகளிடம் அந்தந்த மொழிகளில் பதில் அளித்திருக்கிறார். அவரைச் சந்திக்கச் சென்ற செய்தியாளர்கள் பலரும் இது குறித்து ஆச்சர்யப்பட்டிருக்கிறார்கள்.

துயரப்படும் நெஞ்சங்களுக்கும் கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கைகொடுத்து உதவியவர் ஜானகி.

“உதட்டளவில் பழகுவதை விட உடனிருந்து உதவுவதே சிறந்தது” என்பது அவர் கடமை வாக்கியம்.

தங்களிடம் இருக்கிற பதில்களுக்கு ஏற்றபடி கேள்விகளை எதிர்பார்த்து எரிச்சல்படுகிற சிலரைப் போல அல்லாமல், எந்தக் கேள்விக்கும் துணிச்சலோடும் உறுதியோடும் பதில் சொல்வார் வி.என்.ஜானகி.

‘நாம் வசதியான குடும்பத்தில் பிறந்துள்ளோம் நாம் நினைத்தால் நமக்கு எல்லாமே நடக்கும் என்ற எண்ணம் நம்மிடம் இருக்கக்கூடாது’ என்று அவர் சொன்னது காலத்திற்கும் தேவையான, கருத்தான அறிவுரை!

ஜானகி அன்பாகப் பழகும் இயல்புடையவர். அவர் யாரிடமும் அதிர்ந்து உரக்கப் பேசியதில்லை. எளிமையான குணம் அவருக்கு உண்டு. மற்றவர்கள் நலனில் மிகுந்த அக்கறை உடையவர்.

எம்.ஜி.ஆர். முதல்வரான பிறகு எவ்வளவு எளிமையாக இருந்தாரோ அதே அளவு எளிமையாக ஜானகியும் இருந்தார்.

பல புதுமுகங்களை தன் படங்களில் அறிமுகம் செய்துகொண்டிருந்த டைரக்டர் கே.சுப்பிரமணியம் தனது ‘இன்பசாகரன்’ என்ற படத்தில் ஜானகிக்கு நாட்டியமாடும் வேடம் அளித்தார். அப்போது ஜானகிக்கு வயது 13.

ஜானகியுடன் இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் மனைவியும், நடிகையுமான எஸ்.டி. சுப்புலட்சுமியும் சேர்ந்து இந்தியா முழுவதும் நாட்டிய நாடகங்களை நடத்தினார்கள்.

வள்ளி திருமணம் நாட்டிய நாடகத்தில் ஜானகி முருகனாகவும், சுப்புலட்சுமி வள்ளியாகவும் நடித்திருக்கிறார்கள்.

‘இன்பசாகரன்’ என்ற நாடகத்தை பிரபல நாடகக் குழுவைச் சேர்ந்த நவாப் ராஜமாணிக்கம் நடத்தி வந்தார்.

விடுதலை உணர்ச்சியைத் தூண்டிய இந்த நாடகம் அந்நாளில் சென்னையில் ஒரே தியேட்டரில் 6 மாதங்கள் தொடர்ந்து நடந்தது. ஜானகி இதில் தொடர்ந்து நடித்தார்.

1948-ல் பம்பாயில் தயாராகி வந்த ‘சித்ரபகாவல்லி’ படத்தில் கதாநாயகியாக நடிக்கும்போது வி.என்.ஜானகி தன் பெயரை ‘சித்ரலேகா’ என மாற்றியிருக்கிறார்.

“பெண்களே பெண்களுக்கு மேக்கப் போட வேண்டும்” என்று சொன்னவர் ஜானகி. அப்போதே திரையுலகில் அவரது உரிமைக்குரல் ஒலித்திருக்கிறது.

ராஜமுக்தி, மோகினி, மருதநாட்டு இளவரசி ஆகிய படங்களில் எம்.ஜி.ஆரும். வி.என். ஜானகியும் இணைந்து நடித்துள்ளனர்.

எம்.ஜி.ஆருடன் பழக்கம் ஏற்பட்டபோது ஜானகி முன்னணி நட்சத்திரம். மோகினி விளம்பரங்களிலும், டைட்டிலிலும் அவருக்கே முக்கியத்துவம் கிடைத்தது.

கலைஞர் வசனம் எழுதிய தேவகி, நாம் உள்ளிட்ட படங்களிலும் வி.என். ஜானகி நடித்திருக்கிறார்.

1937-ம் ஆண்டு தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய இவர் திரைத்துறையில் இருந்த காலங்களில் முன்னணிக் கதாநாயகியாக வலம் வந்தவர்.

1944 ஆம் ஆண்டில் கே.சுப்பிரமணியமும், சி.எஸ்.வி. ஐயரும் இணைந்து இயக்கிய “பர்த்ருஹரி” படத்தில் ஒரு விசேஷம்.

வி.என். ஜானகி நடித்துள்ள இந்தப் படத்தில் அவருடைய தந்தை ராஜகோபால் ஐயரும், உறவினரான பாபநாசம் சிவனும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

படம் வெளியான தேதி 13.4.1944. அடுத்து ஜானகி நடித்து 1947 ஆம் ஆண்டு வெளிவந்த “தியாகி” படத்திலும் பாடல்களை எழுதியிருக்கிறார் ஜானகி தந்தையான ராஜகோபால் ஐயர்.

வி.என். ஜானகி நடித்த திரைப்படங்கள் மொத்தம் 31. அதில் தமிழில் 29 படங்கள், தெலுங்கில் 2 படங்கள்.

நடிப்பு, நடனம் மட்டுமில்லாமல் பாடுவதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார் ஜானகி.

மும்மணிகள் என்ற திரைப்படத்தில் சொந்தக்குரலில் திரைப்பாடலைப் பாடியிருக்கிற ஜானகி தொடர்ந்து இரண்டு திரைப்படங்களில் பாடியிருக்கிறார்.

அன்னை 100

சிறப்பு மலர் வெளியீடு

மெரினா புக்ஸ்

தரணி காம்ப்ளெக்ஸ்,
1A, திருநாத முதலி நகர்,
திருப்பத்தூர்.
தமிழ்நாடு, இந்தியா – 635 601

அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டுச் சிறப்பு மலரைப் பெற கீழே உள்ள இணைப்பைத் தொடுக…

https://marinabooks.com/detailed?id=1499-0326-2509-9479

Comments (0)
Add Comment