பாஜகவுக்கு பயத்தையும் காங்கிரசுக்கு பலத்தையும் தந்த 2022!

ஏழு மாநில சட்டசபைத் தேர்தலில் மக்கள் அளித்த பரபரப்பான தீர்ப்பு, புதிய குடியரசுத் தலைவர், ராகுல் நடைபயணம், காங்கிரசுக்குப் புதிய தலைமை, ஆம் ஆத்மியின் விசுவரூபம் என 2022-ம் ஆண்டில், தேசிய அளவில் மக்கள் கவனம் ஈர்த்த நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

திரவுபதி முர்மு

“சாதாரணத் தொண்டனும் முதலமைச்சர் ஆகலாம்” என்பது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நிறுவிய மக்கள் இயக்கமான அ.தி.மு.க.வில் மட்டுமே சாத்தியமாகி இருந்தது.

கிளைச்செயலாளர்களாக இருந்த ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும் முதலமைச்சர்களாக உச்சாணிக் கொம்புக்கு உயர்ந்தனர்.

‘எங்கள் கட்சியிலும் சாதாரண தொண்டன் உச்ச பொறுப்புக்கு வரமுடியும்’ என பா.ஜ.க. நிரூபித்துக் காட்டிய வருடம் 2022.

நாட்டின் தலைமை பீடமான குடியரசுத் தலைவர் நாற்காலியில் கடந்த ஜுலை மாதம் உட்கார்ந்த திரவுபதி முர்மு, ஒடிசா மாநில பா.ஜ.க.வில் அடிமட்ட தொண்டராக தனது அரசியல் வாழ்வை ஆரம்பித்தார்.

கவுன்சிலர், எம்.எல்.ஏ., அமைச்சர், ஆளுநர் என படிப்படியாக உயரங்கள் எட்டி, அதன் பின்னர் உச்சம் தொட்டார்.

பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர் எனும் பெருமைக்கும் சொந்தக்காரர் திரவுபதி முர்மு.

அரண்டு நிற்கும் ஆளுங்கட்சி

ஆளுங்கட்சியான பாரதிய ஜனதாவுக்கு ஆண்டு தொடக்கம் அமர்க்களமாகவே இருந்தது.

பிப்ரவரி மற்றும் மார்ச்சில் நடைபெற்ற 5 மாநிலத் தேர்தல்களில் வெற்றிக் கொடியைப் பறக்க விட்டார் பிரதமர் மோடி.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் என நான்கு மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றியை ஈட்டியது. ஆனால் ஆண்டு இறுதி நாட்கள் பா.ஜ.க.வைக் கலங்கடித்தன.

டெல்லி மாநகராட்சி பற்பல ஆண்டுகளாக பா.ஜ.க.வின் வசமே இருந்தது. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, பா.ஜ.க.வின் கோட்டையைத் தகர்த்து எறிந்தது.

தலைநகரில் பா.ஜ.க. கோட்டை விட்டது மூத்த தலைவர்களால் இன்னும் ஜீரணிக்க முடியாத விஷயமாகவே உள்ளது.

‘பட்ட காலிலேயே படும்’ என்பது போல் இமாச்சலபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலிலும் பா.ஜ.க. தோல்வி கண்டது.

2014 ஆம் ஆண்டு மோடி பிரதமரான பிறகு, காங்கிரஸ் ஆண்ட பல மாநிலங்களை கைப்பற்றி, “எங்களுக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகள் இல்லை’’ என முழக்கமிட்ட பா.ஜ.க., அந்த மலை மாநிலத்தில் எதிர்பாராத வகையில் காங்கிரசிடம் ஆட்சியை இழந்தது.

ஒன்றே கால் ஆண்டில் மக்களவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், மேற்சொன்ன இரு தோல்விகளும் பா.ஜ.க.வுக்கு மக்கள் அடித்துள்ள எச்சரிக்கை மணி என்பதே நிஜம்.

புத்துயிர் பெறும் காங்கிரஸ்

ஒரு காலத்தில் பாரத தேசத்தின் அனைத்து மாநிலங்களையும் தனது கைப்பிடிக்குள் வைத்திருந்த காங்கிரஸ் கட்சி, இந்திரா காந்தி காலத்திலேயே தமிழகம் தொடங்கி பல மாநிலங்களை பறிகொடுத்தது.

எனினும் தெற்கே கேரளா, கர்நாடகம் மற்றும் நாட்டின் மத்தியப் பகுதியில் வலிமையாகவே இருந்தது.

வடகிழக்கு மாநிலங்கள் அனைத்துமே காங்கிரஸ் ஆளுகைக்குள் தான் இருந்தன.
மோடி பிரதமராக பதவியேற்றபின் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தையும் காங்கிரஸ் இழந்தது. மேலும் பல மாநிலங்களையும் பா.ஜ.க.விடம் பறி கொடுத்தது.

ராஜஸ்தான், சத்தீஷ்கர், பஞ்சாப் ஆகிய 3 மாநிலங்கள் மட்டுமே காங்கிரஸ் வசம் இருந்த நிலையில் ஆண்டின் தொடக்கத்தில் நடந்த 5 மாநில தேர்தல்களில் பஞ்சாபையும் கோட்டை விட்டது.

எனினும் ஆண்டின் கடைசியில் நடைபெற்ற இரு மாநில தேர்தல்களில் குஜராத்தை கோட்டை விட்டாலும், இமாச்சலப் பிரதேசத்தில், தனது பிரதான எதிரியான பா.ஜ.க.விடம் இருந்து, ஆட்சியைத் தட்டிப்பறித்துள்ளது காங்கிரஸ்.

தங்கள் தோல்விக்கு பா.ஜ.க. ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், காங்கிரஸ் புத்துயிர் பெற்றுள்ளதை மறுப்பதற்கு இல்லை.

சோனியாவும், ராகுலும் பிரச்சாரம் செய்யாத நிலையில் இந்த வெற்றி சாத்தியமானது வியப்பூட்டும் செய்தியாகும்.

தலித் தலைவரான மல்லிகார்ஜுன் கார்கே புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதும், ராகுல்காந்தியின் நடைப்பயணமும் காங்கிரஸ் கட்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்பது நடுநிலை அரசியல் பார்வையாளர்கள் கருத்தாகும்.

ஆம் ஆத்மியின் விசுவரூபம்

டெல்லியைத் தொடர்ந்து, இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலிலும் வென்று, அரியணை ஏறியுள்ளது ஆம் ஆத்மி.

குஜராத்தில் ஆட்சியை பிடிக்காவிட்டாலும், 5 தொகுதிகளுடன், 12 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது.

டெல்லியில் ஆட்சியைப் பிடித்தபோது, பிராந்திய கட்சியாக இருந்த ஆம் ஆத்மி, இன்று நாட்டின் பல மாநிலங்களில் கிளை பரப்பியுள்ளது.

இரு மாநிலங்களை ஆள்வதோடு தேசியக் கட்சியாகவும் உருவெடுத்துள்ள ஆம் ஆத்மி, 2023-ம் ஆண்டு நடைபெறப்போகும் 9 மாநில தேர்தல்களில் பெரும் தாக்கத்தை உருவாக்கும் என்பது அரசியல் நோக்கர்கள் கணிப்பாகும்.

– பி.எம்.எம்.

Comments (0)
Add Comment