புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், முத்துக்காடு ஊராட்சியைச் சோ்ந்த வேங்கைவயல் கிராமத்தில் சுமாா் 30 பட்டியலின மக்கள் குடும்பங்கள் வசித்து வருகின்றனா்.
இப்பகுதியில் வசிக்கும் சிறாா்களுக்கு அடுத்தடுத்து காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடா்ந்து, கடந்த சில நாள்களாக அவா்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.
அப்போது, பெற்றோர்களிடம் உங்கள் பகுதியில் குடிநீரில் ஏதேனும் கலந்திருக்கலாம் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதைத்தொடா்ந்து, சந்தேகத்தின்பேரில் இப்பகுதி மக்கள், தங்கள் பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியின் மேல் ஏறி தொட்டிக்குள் ஏதேனும் கலந்துள்ளதா எனப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
அப்போது, குடிநீா்த்தொட்டியில் மனிதக்கழிவு கலந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, தகவலறிந்து அங்கு வந்த கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் (மாா்க்சிஸ்ட்) எம். சின்னதுரை, வட்டார வளா்ச்சி அலுவலா் ஆனந்தன், ஊராட்சித் தலைவா் எம். பத்மா மற்றும் வெள்ளனூா் காவல்துறையினா் குடிநீரைப் பாா்வையிட்டனா்.
இதையடுத்து, ஊராட்சித் தலைவா் எம். பத்மா அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின் மக்களும் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களை அங்குள்ள கோயிலுக்குச் செல்ல மற்ற சமூகத்தினர் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
அதோடு, தனிக்குவளை முறையில் அவர்களுக்கு தேநீர் வழங்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.
இந்நிலையில் கோயில் விவகாரத்தில் பட்டியலின மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் அவர்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்.
அதை எதிர்த்து கோயில் பூசாரியின் மனைவி சிங்கம்மாள் சாமி வந்தது போல ஆடி பட்டியலின மக்களை இழிவாகப் பேசினார்.
இதனால் அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல அப்பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் இரட்டைக்குவளை முறையை கடைபிடித்த டீக்கடை உரிமையாளர் மூக்கையா, அவரது மனைவி இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், டீக்கடை உரிமையாளர் மூக்கையா, கோயில் பூசாரி மனைவி சிங்கம்மாளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பல தலைமுறைகளுக்குப் பிறகு அப்பகுதியில் உள்ள கோயிலில் ஆதிதிராவிட மக்கள் வழிபட நடவடிக்கை மேற்கொண்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்துள்ள மக்கள், தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் நிலவும் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.