ஒன்றிய அரசின் கடன்தொகை ரூ.147.19 லட்சம் கோடி!

ஒன்றிய அரசின் ஒட்டுமொத்த கடன் கடந்த செப்டம்பர் வரையிலான காலத்தில் ரூ.147.19 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இதனிடையே அரசின் கடன் மேலாண்மை குறித்து ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் அரசின் கடன் ரூ.145.72 லட்சம் கோடியாக இருந்தது. ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான 2-வது காலாண்டில் கடன் ரூ.147.19 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இது முதலாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் 1% உயா்வாகும். 2வது நிதியாண்டில் நிதிப் பத்திரங்களை வெளியிட்டு ரூ.4,22,000 கோடியைத் திரட்ட ஒன்றிய அரசு இலக்கு நிா்ணயித்திருந்தது.

ஆனால், ரூ.4,06,000 கோடியை மட்டுமே ஒன்றிய அரசு ஈட்டியது. அதே வேளையில், நிதிப் பத்திரங்களைத் திரும்பப் பெற்றதன் மூலமாக ரூ.92,371.15 கோடியை அரசு வழங்கியுள்ளது.

இந்தக் காலகட்டத்தில் அரசின் நிதிப் பத்திரங்களை விற்பதற்காகத் திறந்தவெளி சந்தை நடவடிக்கைகள் எதையும் இந்திய ரிசா்வ் வங்கி மேற்கொள்ளவில்லை.

அரசு சாா்பில் வெளியிடப்பட்ட நிதிப் பத்திரங்கள் மூலமான வருவாய், பணவீக்கம், பணப்புழக்கம் உள்ளிட்ட காரணங்களால் சிறிய அளவில் பாதிக்கப்பட்டது.

அரசின் நிதிப் பத்திரங்களில் 38.3 சதவீதத்தை வா்த்தக வங்கிகள் வைத்துள்ளன. இது ஜூன் வரையிலான காலத்தில் 38.04 சதவீதமாக இருந்தது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஆா்பிஐ-யின் நிதிக் கொள்கைக் குழு, வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 4.9 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதமாக உயா்த்தியது.

ஜூலை-செப்டம்பா் காலகட்டத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3.11 சதவீதம் சரிவடைந்தது. ஜூலை 1-ஆம் தேதி 79.09-ஆக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு, செப்டம்பா் 30-ஆம் தேதி 81.55-ஆக சரிந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment