சமூகச் சிந்தனை கொண்ட கல்வி!

டாக்டர் க.பழனித்துரை

இன்று நாம் சந்திக்கும் தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள், பொறியியல் வல்லுனர்கள், உயர்கல்வி நிலையங்களில் பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் என அனைத்துத் தளங்களிலும் தடம் பதித்த மனிதர்களுடன் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் பற்றி உரையாடினால் நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ள முடியும்.

சமூகத்தில் சாதாரண மனிதர்கள் சந்திக்கின்ற சவால்கள் பற்றியோ, நம் அரசாங்கத்தின் ஆளுகைச் செயல்பாடுகள் பற்றியோ, அரசியலின் போக்கு பற்றியோ, சந்தைப்படுத்தப்பட்ட கல்வி, மருத்துவம், அரசியல் பற்றியோ எந்தவித சிந்தனையும் இன்றி அவரவர் தேர்ந்தெடுத்து செயல்படும் பணியில் தோய்ந்திருப்பதைப் பார்க்க முடியும்.

அறிவில் அவர்களில் எவரும் குறைவானவர்கள் அல்ல. ஆனால் இவர்களின் சமூக அக்கறை என்பது எந்த அளவில் உள்ளது என்று சற்று உன்னிப்பாகப் பார்த்தால், அது நமக்கு மிகுந்த ஏமாற்றத்தைத்தான் அளிக்கும். அதற்குக் காரணம் அவர்கள் அல்ல, அவர்கள் பெற்ற கல்வி.

கல்வி என்பதை சமூகம் காக்கும் கருவி என்ற சிந்தனையைப் போக்கி, லாபம் ஈட்ட, பெரும் பணம் சம்பாதிக்க வழிகாட்டும் ஒரு கருவி என்ற சிந்தனைச் சூழலில் வடிவமைக்கப்பட்ட அவர்கள் பெற்ற கல்வி, அவர்களின் சிந்தனையில் இருந்த சமூக சேவையை எடுத்துவிட்டு பணம் சேர்க்கும் யுத்தியை புகுத்திவிட்டது.

இந்த சிந்தனைச் சூழல் கல்விச்சாலையில் தொடரும்வரை கல்விச்சாலைகள் சமூகத்திற்கான மாணவர்களை உருவாக்கப்போவது கிடையாது.

மாறாக சுயநலம் பேணும், சுகபோக வாழ்க்கை வாழ விரும்பும் மனிதர்களை தொழிலாளர் சந்தைக்கு அனுப்பும் பணியைத்தான் செய்யப்போகிறது.

இவர்களுடைய செயல்பாடுகளில் எந்த அறத்தையும் நாம் பார்க்க முடியாது. இந்தக் கல்வியைப் பெற்றுச் செல்லும் மாணவர்கள் எந்தப் பணிக்குச் சென்றாலும் அங்கு அவர்கள் அறம் சார்ந்த செயல்பாடுகளை முன்னெடுக்கப் போவது இல்லை.

இந்த சந்தைக் கல்வியை சமூகக் கல்வியாக எப்படி மாற்றுவது, அதை யார் செய்யப் போகிறார்கள் என்பது பலரின் கேள்வி. நாம் மிகவும் மோசமான சிக்கலில் வாழ்கிறோம் என்பது மட்டும் அனைவருக்கும் தெரிகிறது.

ஆனால் இந்த சிக்கல்களுக்கான தீர்வு அரசாங்கத்தின் கையில் இருப்பதாக நாம் நினைக்கின்றோம். அது ஒரு தப்பிக்கும் வழிமுறை.

அரசாங்கத்தின் கையில்தான் அந்த முடிவு இருந்தாலும் மக்களாட்சி நடைபெறும் நாட்டில் அரசாங்கத்தை மக்கள் நெருக்குதலுக்கு உள்ளாக்கினால் அரசு மக்கள் விரும்புகின்ற முடிவை நிச்சயமாக எடுக்கும். ஆனால் அதற்கு நாம் முயலுகின்றோமா என்பதுதான் நம் கேள்வி.

இவற்றைத் தாண்டி, சமூகத்தில் வாழும் ஒரு சமூகக்குடிமகனாக, அரசியல் குடிமகனாக நமக்கு எந்தப் பொறுப்பும் சமூகத்திலும், அரசியலிலும் இல்லையா என்பதுதான் நம் அடுத்த கேள்வி.

சமூகத்தை மேம்படுத்த அரசின் உதவியின்றி நம்மால் நாம் செய்கின்ற பணிகளிலேயே மாற்றங்களைக் கொண்டுவர செயல்பட முடியாதா? என்பதுதான் நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒரு ஆழமான கேள்வி.

கல்விச்சாலைகளில் பணிபுரியும குறிப்பாக உயர்கல்வி நிலையங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் ஒரு நிலையில் பொதுச் சிந்தனையாளர்கள்தான் (பப்ளிக் இன்டெலலக்சுவல்ஸ்).

இவர்கள் அனைவரும் சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டுவரச் செயல்படும் நடுத்தர வர்க்கத்தினர். அப்படித்தான் இவர்களை நாம் ஒரு காலம் வரை பார்த்து வந்தோம்.

இவர்கள் நினைத்தால் தங்களிடம் படிக்கும் மாணவர்கள் மூலம் மிகப்பெரும் மாற்றங்களை சமூகத்தில் கொண்டுவர முடியும். அதற்கு முதலில் அவர்களிடம் படிக்கும் மாணவர்களின் சிந்தனையை மாற்றிட வேண்டும். அவர்களை சமூகம் சார்ந்து சிந்திக்கப் பழக்கிட வேண்டும்.

அதேபோல் ஆசரியர்கள் தங்கள் நடத்தும் ஆய்வில் சமூகம் சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றி ஆய்வு செய்து அவைகளைத் தீர்க்க முனைந்திட வேண்டும்.

அதே போல் சமூகத்தில் தங்களின் விரிவாக்கப்பணி செய்து நேரடியாக சமூகத்தை மாற்றும் மேம்பாட்டுப் பணிகளைச் செய்திட வேண்டும். இந்த முன்னெடுப்புக்களைச் செய்வதற்கு ஆசிரியர்களுக்கு எந்த உத்தரவும் யாரிடமிருந்தும் தேவை இல்லை.

இந்தப் பின்புலத்தில்தான் மத்திய அரசு உயர்கல்விச் சாலைகளை விரிவாக்கப் பணி செய்வதை கட்டாயமாக்கியுள்ளது.

அதற்கான திட்டத்தினைக் கொண்டுவந்துள்ளது. அதன் பெயர்தான் உன்னத் பாரத் அபியான் 2.0.

அது மட்டுமல்ல இந்தியாவில் உள்ள பிரிமியர் கல்விச் சாலைகளான ஐ.ஐ.டி போன்ற நிறுவனங்களில் உள்ள சமூக அறிவியல் துறைகளை விரிவாக்கி வலுவாக்கி அங்கு படிக்கும் மாணவர்களுக்கு சமூகப்பார்வையை உள்வாங்க அந்த நிறுவனங்கள் பணிக்கப்பட்டுள்ளன.

அடுத்து உயர் கல்விச் சாலைகளிலிருந்து பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்களின் பணிகளுக்கான செயல்திறன் குறைவாக இருப்பதால் அவர்களால் பணியாட்கள் சந்தையில் நடக்கும் தேர்வில் தேற முடியவில்லை.

அதற்காக, அந்தக் குறையைப் போக்கிட களத்தில் அனுபவம் மிக்கவர்களை (ப்ரௌபசர் ஆப் ப்ராக்டீஸ்) என்ற பெயரில் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தச் சூழலைப் பயன்படுத்தி ஆசிரியப் பணியை மெருகூட்டி சமூகம் சார்ந்து சிந்திக்கும் திறனை வளர்க்க ஆசிரியர்கள் முனைய வேண்டும். அதற்கான ஒரு சிந்தனைச் சூழலை உயர் கல்விக் கழகங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

ஆசிரியர்கள் வகுப்பறையைத் தாண்டி, பாடத்திட்டத்தைத் தாண்டி சமூகம் எப்படி இயங்குகிறது, என்ற ஓர் உணர்வுடன், பார்வையுடன் செயல்பட ஆரம்பித்தால் ஆசிரியர்களாகிய நாம் பல்கலைக்கழக சுற்றுச் சுவரைத் தாண்டி விடுவோம் நம் செயல்பாடுகள் மூலமாக.

அதற்கு நாம் நம்முடன் பணி செய்கின்ற மற்ற ஆசிரியர்களுடன் ஒரு செயல்பாட்டு உறவை ஏற்படுத்த வேண்டும்.

அது ஒரு ஆய்வாக இருக்கலாம், அல்லது ஒரு பாடத்திட்டத்தை உருவாக்குவதாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் நாம் நம் பணி செய்யும் இடத்தில் தனித்து இயங்குவதிலிருந்து இணைந்து இயங்குவதற்குப் பழகிக் கொள்ள வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு கூட்டுச் செயல்பாட்டுக் கலாச்சாரத்தை உருவாக்கத்தான் ரூசா என்ற திட்டத்தின் மூலம் ஆய்வுக்கு நிதி தரப்படுகின்றது. அது ஒரு கூட்டுச் செயல்பாடு.

அடுத்து நம்மிடம் பயிலும் மாணவர்களை, நம் தோழனாக, தோழியாக அறிவுமிக்கவர்களாக, சமூகச் சொத்தாக மதித்துப் போற்றும் உணர்வை வளர்த்து செயல்பட்டால், அவர்கள் மூலம் பல பணிகளை பல்கலைக்கழகத்திற்குள்ளும், சமுதாயத்திற்கும் செய்துவிடலாம்.

அதற்கு மாணவர்களை சமுதாயம் சார்ந்து சிந்திக்கப் பழகி, சமுதாயத்திற்கு பணியாற்ற வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தினால் அந்தப் பணியை மிகச் சுலபமாகச் செய்துவிடலாம்.

அடுத்து நாம் பணிபுரியும் நிறுவனத்தின் குறிக்கோளுடன் ஒன்றிச் செயல்பட முனைய வேண்டும். ஒவ்வொரு கல்வி நிறுவனத்திற்கும் ஒரு தனிச்சிறப்புண்டு. அந்தச் சிறப்பு என்பது ஆசிரிய மாணவர்கள் செயல்பாடுகளால் வருவது.

அதைப் பின்புலத்தில் வைத்துச் செயல்பட வேண்டும். ஒவ்வொரு கல்வி நிறுவனமும் ஆசிரியர்களிடம் பல எதிர்பார்ப்பை வைத்திருக்கிறது. அதை சுவாசிக்கும் மனிதர்களாக ஆசிரியர்கள் மாற வேண்டும்.

நாம் பணி செய்யும் நிறுவனத்திலிருந்து ஒரு சமூகத்துடன் இணைந்து பணி செய்ய ஆரம்பித்தால் சமூகம் நம் நிறுவனத்தை நேசிக்க ஆரம்பிக்கும். ஓர் உயிரோட்டமான தொடர்பினை உயர்கல்வி நிலையமும், சமூகமும் ஏற்படுத்திக் கொண்டுவிடும்.

அந்தச் சூழலில் பயில்கின்ற மாணவர்கள் சமூகச் சிந்தனையுடையவர்களாக மாறிவிடுவார்கள். அடுத்தது அரசாங்கம் எண்ணிலடங்கா திட்டங்களைப் போட்டு சமூகத்திற்காக நடைமுறைப்படுத்தி வருகிறது.

அதில் பல பணிகளை நம் பல்கலைக் கழகங்கள் செய்து அரசுக்கும் சமூகத்திற்கும் உதவிகரமாக செயல்பட முடியும்.

மேற்கூறிய பணிகளைச் செய்வதற்கு ஒரு சாதாரண சிந்தனைச் சூழலில் செயல்படும் ஆசிரியர்களால் செய்ய இயலாது. இதற்கு ஓர் பார்வை வேண்டும். அது என்ன பார்வை என்றால் நம்மைப் பற்றிய பார்வை.

நாம் தவிர்க்க இயலாத மனிதராக மாற வேண்டும், என்று நாம் எண்ணினால் இந்தச் செயல்பாடுகள் அனைத்தையும் பல்கலைக்கழகம் நமக்குக் கூறி நாம் செய்ய வேண்டியது கிடையாது.

நாமே நமக்கு பணியினை விதித்து செயல்பாட்டை மேற்கொள்ளலாம். பொதுவாக சாதனை படைத்தவர்களும், தங்கள் பணிகளில் சாகசங்கள் செய்தவர்களும் யார் என்றால் நிறுவனம் தந்த வேலைகளைச் செய்தவர்கள் அல்ல, அவற்றைத் தாண்டி நாம் ஒரு பொறுப்பு மிக்க ஆசிரியர் என்ற உணர்வுடன் நமக்கு நாமே பொறுப்புக்களை உருவாக்கி செயல்படக் கூடியவர்கள் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

இந்தச் செயல்பாடுகளை முன்னெடுக்கும் சிந்தனை ஓர் ஆசிரியருக்கு வந்துவிட்டால் அவரின் சிந்தனைப் போக்கு என்பது நிபுணத்துவம் பெற்றுவிடும்.

நிபுணத்துவம் பெற்றுவிட்ட மனிதர் தன் குடும்பச் செயல்பாடானாலும் சரி, நிறுவனச் செயல்பாடானாலும் சரி, சமூகச் செயல்பாடானாலும் சரி அனைத்தும் வித்தியாசமானதாக விளைவுகளை உருவாக்கக்கூடியதாக வந்துவிடும்.

இப்படிப்பட்ட செயல்பாடுகள் என்பது புதுமைகள் நிறைந்ததாக, நம் மனதுக்கு நிறைவளிக்கக்கூடியதாக, மற்றவர்களுக்கு தேவைப்படக்கூடியதாக, அரசுக்கு தேவையானதாக மாறிவிடும்.

நாம் நம் பணிகளில் தொடர்ந்து வளர்ச்சி பெறுவோம், மேம்பாடு அடைவோம். மேன்மை பெறுவோம்.

இந்தச் செயல்பாடுகளில் நம்மைக் கரைத்துக் கொள்ளும்போது நாம் செய்கின்ற பணி அது குடும்பமானாலும், கல்விச் சாலையாக இருந்தாலும், ஆராய்ச்சியாக இருந்தாலும், சமூகமாக இருந்தாலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக மாறிவிடும். இந்தப் பணிகளில் ஆசிரியர்கள் தோய்ந்து செயல்படும்போது, தான் மாற்றம் பெறுவதை உணர்ந்து கொள்வார்கள்.

தாங்கள் மாறுவது தங்களுக்குத் தெரிந்து விட்டால் தங்களை மாற்றிக்கொள்ள தொடர் முயற்சியில் ஈடுபடுவார்கள்.

இந்த நிலைக்கு வந்த ஆசிரியர் தன் ஆசிரியப் பணியை தனக்குள்ளே சென்று தேடுபவராக, தேடி வளர்த்துக் கொள்பவராக மாறிவிடுவார்.

தான் செய்கின்ற பணிகளை ரசிக்க ஆரம்பித்து கடைசியில் பூஜிக்கவும் செய்து விடுவார்.

அப்படிப்பட்ட ஆசிரியர் புது உலகம் படைக்கும் சிந்தனைச் சூழலில் உழல ஆரம்பித்துவிடுவார். இவர் மாற்றம் பெற்ற மாற்று மனிதராக மாற்றத்திற்கு செயல்பட ஆரம்பித்து விடுவார்.

இப்படிப்பட்ட ஆசிரியர்கள் மூலம் உருவாகும் மாணவர்கள் சமூகச் சிந்தனையுடையவராக, சமூகப் பிரச்சினையின் மேல் கவனம் செலுத்துபவராக, சமூகத்தின் மேல் அக்கறை கொண்டவராக மாற்றம் பெற்று வெளியே செல்வார்கள்.

அவர்களின் மூலம் கல்வி கற்றுச் செல்லும் மாணவர்கள் உருவாக்கும் குடும்பம் பொறுப்பு மிக்கதாக விளங்கி, பொறுப்புமிக்க குழந்தைகளை உருவாக்கும் குடும்பமாக விளங்கும்.

இவர்கள் பொறுப்பு மிக்க பெற்றோர்களாக, தாங்கள் பணி செய்கின்ற இடத்தில் பொறுப்பு மிக்க ஊழியராக, ஒரு சமுதாயத்தில் பொறுப்பு மிக்க குடிமக்களாக அரசாங்கத்தில் பொறுப்புமிக்க அதிகாரியாக, அலுவலராக, அரசியலில் பொறுப்புமிக்க நேர்மை தவறாத, அரசியல்வாதியாக, தலைவர்களாக உருவாகி விடுவார்கள்.

ஒரு சமூகமோ நாமோ மேம்படுவது ஒரு சிந்தனைச் சூழலில்தான். நாடு விடுதலை அடைய விடுதலைக்கான சிந்தனைச் சூழலை உருவாக்க வேண்டும். ஒரு நிறுவனம் தன் செயல்பாட்டில் வெற்றி பெற வெற்றிச் சிந்தனைச் சூழலை உருவாக்க வேண்டும்.

மேம்பாடு அடைய மேம்பாட்டுக்கான சிந்தனைச் சூழலை உருவாக்க வேண்டும். இதன் மூலம் சமூகத்தில் எங்கு நோக்கிலும் பொறுப்புமிக்க மனிதர்களையே நம்மால் பார்க்க முடியும்.

க.பழனித்துரை

பொருள் சேர்ப்பதை சிந்தனையாகக் கொண்டு இயங்கும் சமூகம் அறம் சார்ந்து வாழும் மானுட வாழ்வை முன்னெடுக்க முனைந்திடும். அரசியலுக்குள் தியாகச் செயல்பாடு மலர்ந்திடும்.

எல்லா இடங்களிலும் பொறுப்புமிக்க செயல்பாடு நடைபெற்றுக் கொண்டேயிருக்கும்.

ஒட்டு மொத்தமாக ஆசிரியப்பணி என்பது மதிக்கத்தக்கதாக, உணர்வுமிக்கதாக எழுச்சி மிக்கதாக, பொருள் மிக்கதாக மாறிவிடும். அந்த நிலை நோக்கி நம் ஆசிரியர்கள் ஆசிரியப் பணியைத் தொடர வேண்டும், தொடங்க வேண்டும்.

தொடருமா சமூகத்தின் மீது மாறா அக்கறை கொண்ட ஆசிரியப்பணி?

 

Comments (0)
Add Comment