அதைச் சொல்ல நான் ஏன் பயப்பட வேண்டும்?

– நடிகை சாவித்திாியின் அபூர்வப்பேட்டி

நடிகையர் திலகம் சாவித்திரியைப் பேட்டி காணச் சென்றேன். முகம் மலர வரவேற்றார். முகத்தில் முதுமை தெரிந்தாலும், மகிழ்ச்சி குறையவில்லை.
சிறிய அழகான வீடு. வீட்டின் முன் நின்றிருந்த பியட் கார் அவர் ஓரளவுக்கு வசதியாக இருப்பதை அறிவித்தது.

“நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறது”

“இடைவெளியா?” சற்று அழுத்தமாகப் பார்த்தார்.

“ஆமாம் நடுவே சுமார் இரண்டு வருடங்களாக ஃபீல்டில் காணோமே?”

“தமிழ் சினிமாவில் என்று வேண்டுமானால் சொல்லுங்கள். ஆனால் எந்த இடைவெளியும் இன்றி தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துக் கொண்டுதான் இருந்தேன்” கொஞ்சம் கோபத்துடனேயே சொன்னார்.

“ஓகோ! ஆனால், நீங்கள் ஏதோ போதைப் பொருளுக்கு அடிமையாகி, அதனால்தான் இந்த இடைவெளி என்பதுபோல பேசிக் கொண்டார்களே…”
சற்றே சிறிது கூர்ந்து பார்த்துவிட்டு, பிறகு “வெல், அதைச் சொல்ல நான் ஏன் பயப்பட வேண்டும்?, நான் குடிக்கு அடிமையாகி இருந்தது உண்மைதான்.
இப்போது அதன் பக்கமே போவதில்லை. காரணம், அந்தப் பழக்கம் எவ்வளவு பைத்தியக்காரத்தனமானது என்று புரிந்து கொண்டதால்தான்.

ஏதோ கவலைகளை மறக்க அந்தப் பழக்கத்தை மேற்கொள்ளலாம் என்று சொல்லிக் கொடுத்தார்கள்.

ஆனால், யாரோ சொல்லிக் கொடுத்தார்கள் என்பதற்காக, அதை அப்படியே ஏற்றுக்கொண்டது தவறுதான்.

இந்த விஷயத்தில் எனக்கு அந்தப் பழக்கத்தை கற்றுக் கொடுத்தவர்களை முழுமையாகக் குற்றம் சாட்ட முடியாது. என் பங்கும் அதில் உண்டு.

ஆனால், கவலைகளை மறக்க முடியவில்லை. குடிப்பழக்கத்தை மேற்கொண்டதால் குடும்பத் தொல்லைகள் மேலும் மேலும் பெருகியதே, தவிர குறைவதாகக் காணோம்.

உடம்பு அநியாயமாகப் பெருத்துவிட்டது. பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு பலர் என்னை மோசம் செய்து விட்டார்கள்.

என் இழப்பின் பெரும்பகுதி போதையால் ஏற்பட்டதுதான். உடலும் கெட்டுவிட்டது. கவலைகள் மேலும் பெருகி, குடிப்பழக்கமும் அத்தியாவசியமாகிவிட்ட என் வாழ்க்கை எனக்கே பெரிய பாரமாக இருந்தது.

வாழ்வில் நிம்மதி, நாமாக ஏற்படுத்திக் கொள்ளும் கெட்ட பழக்கத்தால் கிடைப்பதில்லை என்ற உண்மை புரிந்தது. அந்தப் பழக்கத்தை அறவே விட்டொழித்தேன்.

என் கணவர், மகள் சம்பந்தப்பட்ட விஷயங்களால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தது உண்மை.

ஆனால், குடிப்பழக்கம் எனக்கு அழிவைத் தந்ததால் இப்போது அதை முற்றிலும் விட்டொழித்து விட்டதும் உண்மை.”

இப்போது ஏழு படங்களில் நடிக்கிறாராம். அந்த ஏழில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்கள் அடங்கும்.

“இப்போ நீங்க எந்த மாதிரி வேடத்திலே நடிக்க ஒத்துக்கறீங்க? கிளாமா் வேடத்திலே நடிக்க ஒத்துக்க மாட்டீங்கன்னு தொியும்”

“நான் ஒத்துக்கறது இருக்கட்டும். என்கிட்ட வந்து அப்படி யாா் தைரியமா கேட்பாங்க? கிளாமர் ரோலில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனதற்குக் காரணம் ஆயுர்வேதம் என்றும் சொல்லலாம்.

உடம்பு இளைப்பதற்காக அந்த மருத்துவத்தை மேற்கொண்டேன். உடம்பு என்னவோ இளைத்துதான் விட்டது. முகம் மட்டும் உப்பி விட்டது.

பிறகு ஒரு அலோபதி மருத்துவரை அணுகி அந்த மருத்துவத்தை மேற்கொண்ட பிறகுதான் இப்போது கொஞ்சம் சுமாராகி இருக்கிறது என் உடம்பு.
நடுவே மஞ்சள் காமாலை நோய் வேறு என்னை ஆட்டி வைத்ததா, ஒரு வருடம் ரொம்பவும் துன்பப்பட்டேன். பிறகு தெலுங்கில் அம்மா, அண்ணி போன்ற வேடங்களை மேற்கொண்டேன்.

இப்போது அதே மாதிரி வேடங்களையே, பிற மொழிப் படங்களில் மேற்கொள்கிறேன்.

“உங்கள் குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் இப்போது தீர்ந்து விட்டதா?”
“குழப்பங்கள் எந்த வீட்டில்தான் இல்லை? என்னவோ பெரிதாக கேட்கிறீர்களே? நான் நடிகை என்பதால், பொது வாழ்வில் ஈடுபட்டவள் என்பதால், அதற்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவமும் விளம்பரமும் கொடுக்க வேண்டுமா, என்ன?”
புதுமுகங்களை வேதனை கலந்த வியப்புடன் கவனிக்கிறார் சாவித்திரி. “ஓரிரு படங்களில் நடிப்பதற்குள்ளாகவே தனி மேக்கப் மேன்.

தனி ஹேர் டிரஸ்ஸர். தலைவாரிப் பின்னிக்கக் கூடவா தெரியாது, ஒரு பெண்ணுக்கு? விக் வைக்க, அலங்கார கொண்டை போட இன்னொருவர் உதவி தேவைதான்.

ஆனால் சாதாரணமாக வாரிவிட்டு பின்னிக்கொள்ளக் கூடவா இன்னொருத்தர் வேண்டும்? டேக் எடுப்பதற்கு முன்னால் “வசன ஒத்திகை பார்க்கலாம்” என்றபோது ஒரு புதுமுக நடிகை, “டேக்-கிலேயே பார்த்துக் கொள்ளலாம்“ என்றாள் ஆச்சரியமாக இருந்தது எனக்கு.

“நீ நடிப்பதைப் பார்த்து என் ரியாக்ஷனை நான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அதனால் நடித்துக் காண்பி.

அநாவசியமாக டேக்கில் தவறு செய்து தயாரிப்பாளரின் பணத்தை வீணாக்க நான் விரும்பவில்லை” என்று உறுதியாகச் சொல்லி ஒத்திகை பார்த்தேன்.
அவ்வாறு செய்வது தங்கள் திறமையை மேலும் வளர்த்துக் கொள்ளத்தான் என்ற உண்மை ஏன் அவர்களுக்கு தெரியாமல் போகிறது?

புது நடிகைகள் எல்லாம் தனக்கென்று தனி நாற்காலி ஒன்று வீட்டில் இருந்து கொண்டு வருகிறார்களே, அந்தக் காலத்தில் இப்படி முடியுமா? யாரேனும் ஏதேனும் சொல்லிவிடுவார்களோ என்ற பயம்.

வெகுநாள் தயக்கத்துக்குப் பின் ஒரு பிரபல நடிகர் எடுத்துச் சென்றதைப் பார்த்ததும்தான் நானும் கொண்டுபோக ஆரம்பித்தேன். பயபக்தி எல்லாம் இப்போது இல்லை.

அவுட்டோரில் யார் வீட்டிலாவது சூட்டிங் எடுக்கிறார்கள். இதற்காக சென்னை நகரை விட்டு எத்தனையோ மைல் தொலைவில் இருக்கும் இடங்களுக்குப் போக வேண்டி இருக்கிறது.

அவ்வாறு படமெடுக்கும் தன் வீட்டை, சூட்டிங் முடிந்த பிறகு வீட்டுக்காரர்கள் பார்த்தால் கண்ணில் ரத்தம்தான் வரும். அந்த அளவுக்கு அலங்கோலமாகிவிடும். அப்படியும் சிலர் ஏன் வீடுகளை படபிடிப்புக்குக் கொடுக்கிறாா்கள்?

அந்த வீட்டுப் பெண் யாருக்காவது வேஷம் தருவதாகச் சொல்லி ஆசை காட்டுவதால்தான். அந்தப் பெண்ணுக்கு நடிக்கத் தெரியுமா என்றெல்லாம் பார்ப்பதில்லை.

ஏதோ வேஷம் கொடுத்து விடுகிறார்கள். அதிர்ஷ்டம், திறமை இருந்தால் முன்னுக்கு வரும். இல்லாவிட்டால், அவ்வளவுதான்.”

அவர் குரலில் இனிமை மறையவில்லை. பேசும்போது முகபாவனைகள் இயற்கையாகவே உள்ளன. அனாவசியமாக முக சுளிப்பு இல்லை. படாடோபம், டாம்பீகம் இல்லை.

இடையில் தன் கலை வாழ்வுக்கு ஏற்பட்ட தொய்வுக்கு தன் குடிப்பழக்கம்தான் காரணம் என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் தொிகிறது.
அதுவே, அவர் நடிப்பது சினிமாவில் மட்டும்தான் என்பதையும் விளக்குகிறது.

– பேட்டி : பிரபுசங்கா்

நன்றி : விசிட்டர் இதழ் 15.10.1979

Comments (0)
Add Comment