சி.மோகன் 70 விழா:
“டிசம்பர் 18 ஆம் தேதியன்று சென்னை கவிக்கோ அரங்கில் சி. மோகன் 70 விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கருத்தரங்கம், வாழ்த்துரை, சிறப்புரை என அமர்வுகள் சிறப்பாக அமைந்தன. நிதியளிப்பு நிகழ்வானது, ஒரு கொண்டாட்டமாகவும் அமர்க்களமாகவும் நிகழ்ந்தது.
விழாவில் சி. மோகன் நிகழ்த்திய ஏற்புரையின் ஒரு பகுதியை தாய் இணையதள வாசகர்களுக்காக வழங்குகிறோம்.
பவாவும் வேடியப்பனும் முன்னெடுத்த ஒரு விழா இவ்வளவு சிறப்பாக நடப்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
கடந்த சில நாட்களாக, பவாவின் மந்திரக் குரல் சக்தியையும் வேடியப்பனின் செயல் வேக ஆற்றலையும் பார்த்துப் பார்த்து வியந்துபோயிருக்கிறேன்.
ஆனால், அவர்களுக்கு இதெல்லாம் வெகு இயல்பான சுலபமான ஒன்றாகவே இருக்கிறது. இவர்களின் இந்த உத்வேகத்தோடு நேர்த்தியான திட்டமிடலும் சேர்ந்துகொண்டு இந்த விழாவை மிகச் சிறப்பானதாக ஆக்கியிருக்கின்றன.
இந்த நிகழ்ச்சி, கலை இலக்கிய நண்பர்களும் எழுத்தாளர்களும் வாசகர்களும் ஒன்றிணைந்து, இதுவரையான என் வாழ்வுக்கான கொடையாக அளித்திருக்கும் ஓர் அழகிய அபூர்வ மலர்.
இந்த மலர் இனியான என் வாழ்வுக்கான வாசனையாக என்னுள் எப்போதும் வாசம் புரியும்.
எந்த ஒரு பெரிய விசயமும் பூ மணத்தின் குணம் கொண்டதுதான் என்கிறார் எஸ். சம்பத். அப்படியான குணாம்சம் கொண்ட ஒரு நிகழ்வாகத்தான் இதை உணர்கிறேன்.
இந்த கெளரவிப்பை சிறுபத்திரிகை இயக்கத்துக்கான சமூக அங்கீகரிப்பாகவே கருதி பெரு மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் ஏற்கிறேன்.
நம் காலத்துக்கும் சமூகத்துக்குமான கனவைப் படைப்பாளிகளே உருவாக்குகின்றனர். இக்கனவை அங்கீகரிப்பதிலும் ஏற்பதிலுமே நம்முடைய மீட்சி இருக்கிறது.
படைப்பாளியின் கனவை தீப ஒளியாக ஏந்திச் செல்லும் சாதனம்தான் சிறுபத்திரிகை இயக்கம். நம்பிக்கை, அர்ப்பணிப்பு என்ற இரண்டு மூலாதார சக்திகள்தான் திரியும் எண்ணையுமாக இருந்து அதை அணையாது காத்திருக்கின்றன.
கலை நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் என்றான வாழ்வியக்கம் என்பது, பாரதி, புதுமைப்பித்தன், க.நா.சு., சி.சு.செல்லப்பா, தருமு சிவராம் (பிரமிள்) போன்ற நம் லட்சிய முன்னேடிகள் நமக்கு வகுத்துத் தந்திருக்கும் பாதைதான். அந்தப் பாதையில் இளம் வயதில் என்னை இணைத்துக்கொண்டவன் நான்.
அதனைத் தொடர்ந்து, கடந்த 50 ஆண்டு காலமாக, எழுத்து, சிறுபத்திரிகைச் செயல்பாடு, புத்தகப் பணி என நான் தேர்ந்தெடுத்த ஒரு வாழ்க்கையைத்தான் எவ்வளவோ இடர்களுக்கிடையிலும் தொடர்ந்து மேற்கொண்டு வந்திருக்கிறேன்.
இந்த வாழ்க்கைதான் இன்று இப்படியான ஒரு பரிசை வழங்கியிருக்கிறது.
ஒவ்வொரு கட்டத்திலும் எண்ணற்ற இளைஞர்கள் இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டு இயங்கியிருக்கின்றனர்.
கடந்த 80 ஆண்டு கால சிறுபத்திரிகை இயக்கம் காலகதியில் பெரும் பத்திரிகையின் சில பக்கங்களிலேனும் சில மாற்றங்கள் நிகழ வழிவகுத்திருக்கிறது.
அதேசமயம், நம்முடைய ஆகச் சிறந்த அம்சத்தில் நாம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.
வாழும் காலத்தில் அது உரிய பலன்களை அளிக்காவிட்டாலும், காலகதியில் அது சமூகத்தில் காத்திரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
சிறுபத்திரிகை இயக்க முன்னோர்கள் காலத்தை விடவும் இன்றைய சூழல் சற்று மேம்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
இந்த நிகழ்ச்சியும் அதன் ஓர் அடையாளம்தான். என் வாழ்க்கையிலிருந்து நான் கற்றுக்கொண்டது ஒன்றுதான்: எந்தவொரு காத்திரமான செயலையும் தொடர்ந்து நம்பிக்கையுடனும் அர்ப்பணிப்புடனும் மேற்கொண்டு வந்தால், அது காலகதியில் சில நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.