நூல் வாசிப்பு:
*
பாரதி நினைவு நூற்றாண்டுச் சிறப்புப் பகிப்பாக வெளிவந்திருக்கிறது ஆய்வாளரான கடற்கரய் மத்தவிலாச அங்கதம் தொகுத்திருக்கிற ‘யாமறிந்த புலவன்’ நூல்.
பாரதி குறித்து சில நூற்றுக்கணக்கான நூல்கள் இதுவரை வெளிவந்துவிட்டன. பாரதி நினைவு நூற்றாண்டை ஒட்டியும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இதில் ‘யாமறிந்த புலவன்’ நூலின் சிறப்பு பாரதியைப் பற்றிக் கடந்த நூற்றாண்டில் வெளிவந்துள்ள பல விமர்சனங்களைக் கால வரிசைப்படி தொகுத்திருக்கிறார் கடற்கரய்.
“இதொரு கறாரான விமர்சனப் பெட்டகம்’’ என்று அவரே இந்நூல் குறித்துச் சொல்லியிருப்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் இருக்கிறது நூல் தொகுப்பும், உருவாக்கமும்.
வ.வே.சு. ஐயர் துவங்கி கல்கி, புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, பெ.தூரன், ச.து.சு.யோகி, ரா.அ.பத்மநாபன், கி.வா.ஜகந்நாதன், க.நா.சு, கடற்கரய், ஸ்டாலின் ராஜாங்கம் வரை 135 பேர்களின் கட்டுரைகள் அடங்கியுள்ள தொகுப்பு 1360 பக்கங்களில் வியக்க வைக்கிறது.
நிறைவாக பாரதியைப் பற்றிச் சிலர் ஆற்றிய உரைகளும் பின் இணைப்பாகச் சேர்க்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.
பாரதியைப் பற்றிய ஆர்வம் கொண்ட வாசகர்களுக்கு இது அரிய புதையல். காலத்தின் வெவ்வேறு அடுக்குகளில் இருந்து சீரிய உழைப்பின் அருந்திரட்டு என்பதை நூலை வாங்கிப் படிப்பவர்கள் உணரமுடியும்.
அறிஞர் அண்ணா, பாரதிதாசன், அவ்வை டி.கே. சண்முகம் என்று சிலருடைய உரைகளுடன் 1981-ல் பாரதி நூற்றாண்டு துவக்க விழா எட்டயபுரத்தில் நடந்தபோது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்களின் உரையும் இடம் பெற்றிருக்கிறது.
எம்.ஜி.ஆர் உரை :
புரட்சி மனம் கொண்ட பாரதி
பாரதிக்கு முன்பு எத்தனையோ கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள். அவருக்குப் பின்னரும் எத்தனையோ கவிஞர்கள் தோன்றியிருக்கிறார்கள்; தோன்றிக் கொண்டிருக்கிறார்கள். பாரதி எடுத்துச் சொல்லிய கருத்துகளை எல்லாம் வைத்துச் சில கேள்விகளைக் கேட்டு, நாமே அவற்றிற்கு விடை கூறிக்கொண்டால் அவர் யார் என்பது விளங்கும்.
சமூக சீர்திருத்தத்தில் அவர் ஆர்வம் கொண்டிருந்தவரா என்று கேட்டால், ஆம் என்ற விடை கிடைக்கும். பெண்கள் மறுமலர்ச்சிக்குரிய கருத்துகளை வெளியிட்டவரா என்று கேட்டால், ஆமாம் என்ற பதில் கிடைக்கும்.
பெண் உரிமைக்காகப் போராடியவரா என்று கேட்டால், ஆம் என்ற பதிலே கிடைக்கும். ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாக வாழ வேண்டும் என்ற தத்துவத்தை எடுத்துச் சொன்னாரா என்றால், ஆமாம் என்னும் பதிலே கிடைக்கும்.
இந்த நாட்டில் சமூகத்தில் ஏற்றத் தாழ்வு கூடாது என்ற தனது கவிதையின் மூலம் தெரிவித்தாரா எனக் கேட்டால், ஆமாம் என்ற பதில்தான் கிடைக்கும்.
சாதிகள் கூடாது என்ற உண்மையை தனது உணர்வை எழுதி, பேசி வந்தவரா என்றால், ஆமாம் என்னும் பதிலே கிடைக்கும்.
பெண்களை அடிமைப்படுத்தக் கூடாது என்ற தத்துவத்தை வலியுறுத்தியவரா என்று கேட்டால், ஆமாம் என்ற பதிலே கிடைக்கும்.
நாட்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவரா என்று கேட்டால், ஆமாம் என்ற பதிலே கிடைக்கும்.
எத்தனை துணிச்சல் இருந்தால் சொல்லியிருக்க முடியும் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
சிலருக்குச் சில நாட்கள் புகழ் இருக்கலாம். சில வாரங்கள் புகழ் இருக்கலாம். சில மாதங்கள் புகழ் இருக்கலாம்.
ஆனால் பாரதியின் புகழ் நூறாண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. இன்னும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு அது இருக்கும் சமுதாயம் அவரைப் போற்றும் வாழ்த்தும் என அறுதியிட்டுக் கூறுகிறேன்.
பாரதிக்குத் துணிவு எங்கிருந்து வந்தது? பிராமண குலத்தில் பிறந்தவர் அவர். பிறப்பால் தாழ்த்தப்பட்டவர் இல்லை. தனக்காகவோ தனது இனத்துக்காகவோ சமுதாயத்துடன் போராட வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.
வசதியாகத் தான் வாழ்ந்திருக்கிறார். அவரது தந்தை ஒரு சிறிய தொழிற்சாலை நடத்துகின்ற அளவுக்கு அவரது குடும்பச் சூழ்நிலை இருந்திருக்கிறது. அப்படி இருந்தும் அவர், தனக்காகப் போராடவில்லை. சமுதாயத்துக்காகப் போராடியிருக்கிறார். அவர் தனி மனிதரல்லர் – தத்துவத்தின் சின்னம்.
மற்றவர்கள் சொல்ல அஞ்சும் கருத்துகளை, பிரச்சினைகளை சமுதாய சீர்திருத்தக் கருத்துகளை அவர் துணிச்சலுடன் தெரிவித்திருக்கிறார்.
அவரை தேசியகவி என்பதா, மகாகவி என்பதா, தேசிய மகாகவி என்பதா? அந்தப் பெருமையை எண்ணித்தான் விழா கொண்டாடப்படுகிறது.
அவர் எந்தக் கருத்தையும் பெரிதாகச் சொல்லியிருக்கிறார்.
பெண்களின் கற்பு நிலை குறித்து விவரமாக வெளியிட்டிருக்கிறார். பெண்களுக்கெனச் சில திட்டங்களைத் தெரிவித்திருக்கிறார்.
‘பெண் பக்குவமடைவதற்கு முன் திருமணம் செய்யக்கூடாது’ என்று பாரதியார் கூறியிருக்கிறார். அவர் சொல்லிய பிறகு அவ்வாறு திருமணம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால், தடைச்சட்டம் வருவதற்கு முன்பே – எவ்வளவு சிந்தனையோடு – துணிவோடு – சொல்லியிருக்கிறார் பாரதி என்பதை இளைஞர் சமுதாயம் நினைவிற்கொள்ள வேண்டும்.
இன்று நாம் பேசுகின்ற பல புரட்சித் தத்துவங்களை 50 ஆண்டுகளுக்கு முன்பே பாரதியார் சொல்லியிருக்கிறார்.
“பிதுரார்ஜித சொத்தில் பெண்களுக்கும் சமபங்கு வழங்கப்பட வேண்டும்” என்று பல்லாண்டுகளுக்கு முன்பே தெரிவித்திருக்கிறார்.
“கணவன் இறந்தபிறகு ஒரு பெண் மறு விவாகம் செய்ய விரும்பினால் அதைத் தடுக்கக் கூடாது” என்றும் அவர் கூறியிருக்கிறார்.
பெண்களுக்குப் படிப்பு வேண்டும் என்று அக்காலத்திலேயே பாரதி கூறியுள்ளார்.
அவர்களுக்குப் பட்டப்படிப்புக் கொடுக்க வேண்டும் என்று முன்னமேயே சிந்தனையுடன் கூறியுள்ளார் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
பெண்கள் மறுமலர்ச்சியில் பெரும் பங்கு கொண்டவர் பாரதி.
பெண் விடுதலையின் பெருமைக்காக “தர்மயுத்தம் தொடங்குவேன், அதற்கு மகா சக்தி துணைபுரிவாள்” என்கிறார் பாரதி.
“கலப்பு மணம் செய்து கொள்ளுங்கள்” என்று பாரதி வலியுறுத்தினார். தமிழகத்தைப் பொறுத்தவரையில் இப்போது கலப்புத் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு நாம் பரிசு கொடுக்கிறோம், பணம் கொடுக்கிறோம்.
மாபெரும் தியாகம் செய்த பாரதியை, தியாகி என்பதா, வீரர் என்பதா, மறத்தமிழன் என்பதா!
தன்னோடு பிறந்தவன் – சகோதரன் அவனுக்கு உரிமை கிடையாது என்ற நிலை இருந்தது. அவனை அடிமை என்று கருதி வந்தார்கள்.
அந்த இழிநிலை ஒழிய வேண்டும் என்று தீவிரமாக இருந்தார் பாரதி. அனைத்து மனிதர்களும் சகோதரர்கள் என்று அவர் கூறினார்.
‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று நமது அண்ணா அவர்கள் வலியுறுத்தி வந்தார்களே, அதுபோல மனித ரத்தம் அனைத்தும் ஒன்றே என்று தெரிவித்தார் பாரதியார்.
சமதர்மச் சமுதாயம் வேண்டும் என்கிறார் புரட்சி மனம்கொண்ட பாரதி. முழுமையும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியவர் பாரதி.
அதனால் பாரதி பிறந்தநாளை இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டு நாளாகக் கொண்டாட வேண்டும்.
இந்த நாளில் ஏற்றத்தாழ்வை அகற்ற நாம் உறுதி எடுத்துக்கொள்வோம். ஒன்றே குலம் என்ற நிலை உருவாகப் பாடுபடுவோம்.
(11.12.1983இல் எட்டையபுரம் பாரதி நூற்றாண்டு விழாவின் தொடக்க நாள் நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர் ஆற்றிய உரை)