மலையாளத்தில் வெளியாகும் கமர்ஷியல் படங்களைப் பார்ப்பது கொஞ்சம் சவாலான விஷயம். சில நேரங்களில் பார்க்கும்படியாகவும் அருமையாகவும் இருக்கும்; சில நேரங்களில் சகிக்க முடியாதவாறு இருக்கும்.
ஆழமான கதையம்சம் கொண்ட, பரீட்சார்த்த முயற்சியிலமைந்த படைப்புகளைக் காணும் அனுபவங்கள் இதில் சேராது.
போலவே ஆழமான காட்சியமைப்போடும் கமர்ஷியல் அம்சங்களோடும் படங்களை உருவாக்குவது மிக அரிதாக நிகழும் விஷயம்.
‘மாஸ் மசாலா மன்னன்’ என்று மலையாளத் திரையுலகில் ஒருகாலத்தில் புகழ் பெற்றிருந்த இயக்குனர் ஷாஜி கைலாஷ் தன் பாணியிலிருந்து முற்றிலுமாக விலகி நின்று தந்திருக்கும் ‘காபா’ அந்த வகையில் சேர்கிறதா?
‘கேங்’ மோதல்!
திருவனந்தபுரத்தில் இருக்கும் இரண்டு தாதா கும்பல் இடையே தொடர்ந்துவரும் ‘கேங்’ மோதல்தான் ‘காபா’வின் கதைக்களம்.
பதின்ம வயதில் தனது கண் முன்னே சகோதரன் கொலையானதைக் கண்டு அதிர்ச்சியில் உறைகிறார் பினு (அன்னா பென்). அதற்குக் காரணமாக இருப்பவர் ரவுடி ‘கொட்ட’ மது (பிருத்விராஜ்).
சில ஆண்டுகள் கழித்து, மணமாகித் தனது கணவர் ஆனந்த் அனிருத்தன் (ஆசிஃப் அலி) உடன் திருவனந்தபுரம் திரும்புகிறார் பினு. அங்குள்ள ஐடி நிறுவனமொன்றில் ஆனந்துக்கு வேலை கிடைக்கிறது.
காபா (கேரள சமூக விரோதச் செயல்கள் எதிர்ப்பு சட்டம்) எனப்படும் கடுமையான ரவுடிகள் ஒழிப்பு சட்ட தண்டனை பட்டியலில் பினுவின் பெயர் இருப்பதாகத் தெரிவிக்கிறார்.
அப்போதுதான் பினுவின் குடும்பத்தினர் பற்றிய உண்மைகள் ஆனந்துக்குத் தெரிய வருகிறது.
அதன்பிறகு, கர்ப்பிணியாக இருக்கும் மனைவியின் பெயரை காபா பட்டியலில் இருந்து நீக்குவதற்கான வேலைகளில் அவர் இறங்குகிறார்.
எதிரி கொட்ட மதுவின் மனைவி பிரமிளாவைச் (அபர்ணா பாலமுரளி) சந்திக்கிறார். மது அதனை விரும்பாவிட்டாலும், ஆனந்த் அப்பாவியானவர் என்று முழுமையாக நம்புகிறார் பிரமிளா.
அதன்பிறகு, மதுவைக் கொல்வதற்குச் சில முயற்சிகள் நடக்கின்றன. அதேநேரத்தில், மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேலைகளில் ஈடுபடுவதால், வெளிப்படையாகத் தாக்குதல் நடத்த முடியாத இக்கட்டான சூழலுக்கு ஆளாகிறார் மது.
தன்னை நோக்கி வரும் தாக்குதல்களில் இருந்து மது தப்பித்தாரா, அந்த சதிகளின் பின்னிருப்பது ஆனந்தா அல்லது வேறு நபர்களா என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது ‘காபா’வின் மீதிப்பாதி.
நேர்த்தியான படம்!
ஒரு ‘கேங்க்ஸ்டர் ட்ராமா’ எனும் நிலையில் இருந்து ‘கேங்க்ஸ்டர் ஆக்ஷன்’ எனும் இடம் நோக்கி திரைக்கதையை நகர்த்தியிருப்பதே இயக்குனர் ஷாஜி கைலாஷின் சிறப்பு.
அதேநேரத்தில் இது வழக்கமான கமர்ஷியல் படமல்ல என்பதையும் ஆணித்தரமாக நிறுவியிருக்கிறார்.
மலையாள இலக்கியவாதிகளில் ஒருவரான ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய ‘சங்குமுகி’ நாவலைத் தழுவியே இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அவரே இதன் திரைக்கதை வசனத்தையும் எழுதியிருக்கிறார்.
அதனால், கதை மாந்தர்களின் உணர்வெழுச்சிகளும், திரையில் நேரடியாகச் சொல்லப்படாத பல தகவல்கள் பார்வையாளர்களின் மனதில் தென்படுவதற்கான வாய்ப்புகளும் இப்படத்தில் நிறைந்திருக்கின்றன.
‘காபா’வின் மாபெரும் பலம் ஜோமோன் டி.ஜானின் ஒளிப்பதிவு.
வழக்கமாக மலையாள கமர்ஷியல் படங்களில் பரபரப்பாக காட்சிகளைச் சொல்கிறேன் பேர்வழி என்று கேமிரா நகர்விலும் படத்தொகுப்பு பாணியிலும் வேகத்தைப் புகுத்தி நம் கண்களை ஒருவழியாக்கிவிடுவார்கள்.
இதில் அந்தக்கொடுமை எல்லாம் இல்லை. மணல் குவாரியில் நடப்பதாக அமைக்கப்பட்ட பிருத்விராஜின் சண்டைக்காட்சி மட்டுமே இவ்விஷயத்தில் திருஷ்டிப் பொட்டு.
டான் வின்சென்டின் பின்னணி இசை, ரொம்பவும் சீரியசான படம் பார்க்கும் உணர்வை உண்டாக்குகிறது.
சமீர் முகமதுவின் படத்தொகுப்பு, மிக எளிதாக நிகழ்காலத்தையும் கடந்தகாலத்தையும் பிணைக்கிறது.
ப்ரோ டாடி, ஜனகணமண, கடுவா, தீர்ப்பு, கோல்டு என்று ஐந்து படங்களை அடுத்து 2022ஆம் ஆண்டின் இறுதியில் ஆறாவது படமாக ‘காபா’ தந்திருக்கிறார் பிருத்விராஜ்.
‘ஒத்தைக்கு ஒத்தை சண்டை போட்டுதான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன்’ என்று அவர் பேசும் வசனம், நிச்சயமாக அவரது திரையுலக வெற்றிகளைத் தம்பட்டம் அடிப்பதுதான்.
கமர்ஷியல் படம் என்று வரும்போது, இது கூட இல்லையென்றால் எப்படி என்று அவர் நினைத்திருக்கிறார் போல. மற்றபடி, காட்சிகளுக்கேற்ற உணர்வைத் தருவதில் தான் கில்லாடி என்று மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கிறார்.
அபர்ணா பாலமுரளி, அன்னா பென் இருவரும் மிகச்சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், மொத்தக் கதையுமே அவர்களது இருப்பைச் சார்ந்தே அமைக்கப்பட்டிருக்கிறது.
சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களின் வீட்டுப் பெண்கள் முக்கியமான அரசுப் பதவிகளை வகித்தால் எப்படியிருப்பார்கள் என்பதைத் தனது உடல்மொழி வழியே வெளிப்படுத்தியிருக்கிறார் அபர்ணா.
போலவே, கதையின் அடிநாதமாக விளங்கும் பாத்திரத்தை ஏற்றிருக்கும் அன்னா பென்னும் மிகச்சரியான நடிப்பைத் தந்திருக்கிறார்.
அவர் தோன்றும் காட்சிகளை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தியிருந்தால், பார்வையாளர்களைத் தொற்றும் அதிருப்தியின் அளவு குறைந்திருக்கும்.
ஆசிஃப் அலிக்கு காட்சிகள் குறைவென்றாலும், ஒரு சாதாரண நடுத்தர வர்க்க இளைஞராகப் படம் முழுக்க வந்து போயிருக்கிறார்.
திலேஷ் போத்தன், நந்து, பிஜு பாப்பன் போன்றவர்கள் முக்கியப் பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
தொண்ணூறுகளில் நகைச்சுவை நடிகராகவும் நாயகனாகவும் அறியப்பட்ட ஜகதீஷ் குமார், இதில் ஜாபர் எனும் பாத்திரத்திலும் நடித்துள்ளார்.
பெரிதாக இடம் தரப்படவில்லை என்றாலும், கதையை மனதுக்குள் அசைபோடுவதில் அந்த பாத்திரம் முக்கியப் பங்கு வகிப்பதை மறுக்க முடியாது.
ஏனென்றால், மொத்தப் படத்திலும் ஒரு கேங்க்ஸ்டர் எப்படியிருப்பான் என்பதற்கான உதாரணமாக அப்பாத்திரமே அமைக்கப்பட்டிருக்கிறது. நம்மூர் சார்லி போல, அவருக்கு ‘இன்னொரு இன்னிங்ஸ்’ அமைய வாழ்த்துகள்!
உணர வைத்தவை!
பிரசாத் முருகேசனின் ‘கிடாரி’யில் வெறுமனே வீரத்தினால் மட்டுமே ஒருவன் ‘கேங்க்ஸ்டர்’ நிலையை அடைய முடியாது என்பது மிகச்சன்னமாகச் சொல்லப்பட்டிருக்கும் இதிலும் மது எனும் நபர் கேங்க்ஸ்டர் ஆக அப்படியொரு குயுக்தியே வழியமைத்து தருகிறது.
கிளைமேக்ஸிலும் அந்த உத்தி மீண்டுமொரு முறை காட்டப்பட்டிருப்பது ‘ஆஹா’ சொல்ல வைக்கும் தருணம்!
எந்த காவல் துறையால் ஒரு பெரிய ரவுடியாக மது ஆக்கப்பட்டாரோ, மிகச்சில ஆண்டுகளில் அதற்கே சவாலாகவும் உருவெடுக்கிறார்.
அவர் அரசியலில் சேர முற்படுவது வெளிப்படையான கட்சி அடையாளங்களோடு காட்டியதைச் சமகால கேரள அரசியல் மீதான விமர்சனமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கேங்க்ஸ்டர் குடும்பங்களில் ஆண்கள் மட்டுமே ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் வழக்கம் இருந்துவரும் நிலையில், ஆனந்த் பாத்திரத்திற்கு மட்டும் தாக்குதலில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
அதாவது, கேங்க்ஸ்டர் குடும்பங்களில் உள்ள பெண்களைப் போலவே அந்த ஆணுக்கும் சதியில் தொடர்பில்லை என்ற கருத்து முன்வைக்கப்படும்.
அதேநேரத்தில், ஆண்களை இழந்த கேங்க்ஸ்டர் குடும்பங்களில் பெண்கள் தலைமைப்பொறுப்புக்கு வரத் தயங்க மாட்டார்கள் என்பதும் இக்கதையில் மிக வெளிப்படையாகச் சொல்லப்படுகிறது.
வழக்கமான கேங்க்ஸ்டர் படங்களில் இருந்து ‘காபா’ வித்தியாசப்படும் இடம் அதுவே.
இதையெல்லாம் தாண்டி ‘வாய்ஸ் ஓவர்’ இல்லாமல், முன்கதைகளோ அல்லது இடைச்செருகல் காட்சிகளோ இல்லாமல், சம்பந்தப்பட்ட பாத்திரங்களின் மீதான பார்வையாளர்களின் சந்தேகங்களுக்குச் சில வசனங்களிலும் உடல்மொழியிலும் பார்வையிலும் பதில் சொல்லியிருப்பது அழகு.
மனதை இதமாக்கும் காதலோ, நகைச்சுவையோ அல்லது சுவையூட்டும் களிப்புகளுக்கோ இடம் தராமல் வெறுமையைச் சுமந்தவாறு நகரும் திரைக்கதை சிலருக்கு அலுப்பூட்டலாம்.
சில இடங்களில் அதிகப்படியான தகவல்களைத் தராமல் ‘கட்’ செய்திருப்பதும் குழப்பத்திற்கு வழி வகுக்கலாம். நிச்சயமாக இவை இப்படத்தின் பின்னடைவுக்கான காரணங்களே.
‘காபா’ கதை கேரளத்தில் நிகழ்ந்த அல்லது நிகழும் உண்மைச் சம்பவங்களை தழுவி அமைந்திருக்கிறதா என்று நமக்குத் தெரியாது. இப்படத்தைக் கொண்டாட அத்தகவல்கள் தேவையும் இல்லை.
ஆனால், இந்தியாவின் எந்த நிலப்பகுதிக்கும் இக்கதையில் பொதிந்திருக்கும் உணர்வுகளைப் பொருத்திப் பார்த்துவிட முடியும். அந்த வகையில், ஓடிடியில் வெளியாகும்போது பல மொழிகளிலும் ‘காபா’ வரவேற்பைப் பெறுவது உறுதி!
– உதய் பாடகலிங்கம்